Published:Updated:

`வெல்கம் 2019' ;களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை மெரினாவில் அலைமோதிய கூட்டம்!

சென்னையில் பல்வேறு இடங்களில் குவிந்த பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சி, சோகம், கஷ்டம், வெற்றி, தோல்வி என ஏராளமான உணர்வுகளை ஒருங்கே கொடுத்து விட்டு விடைபெற்றது 2018. அரசியல் மாற்றங்கள், கஜா புயலின் கோரத்தாண்டவம், கட்சித்தலைவர்களின் இழப்புகள், ஆளுமைகளின் மறைவு இப்படியாய்  பெற்றதும், இழந்ததும் ஏராளம். புதிதாய்  தற்போது பிறந்து சில நொடிகளே ஆன, இந்த 2019-ம் ஆண்டின் மீதான எதிர்பார்ப்பும் நம்பிக்கை கூடியுள்ளது. வரும் ஆண்டுகள் இயற்கை பேரிடரில்லா ஆண்டாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

புத்தாண்டைக் கொண்டாட இரவு 10மணியிலிருந்தே சென்னைவாசிகள் ஆயத்தமாகின. சென்னை  பெசன்ட் நகர், மெரினா, எலியட் உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைத்தவிர, பொதுமக்கள் அவர் அவர், தெருக்களில் கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். ஆடம்பர விடுதிகளில் ஆடல் பாடலுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறின. சென்னை மெரினாவில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள தூண் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியாக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸார் மெரினாவைச்சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து 12 மணி அளவில் பொதுமக்கள் உற்சாகமாக ஆரவாரத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். தெரிந்தவர்கள், தெரியாவதர்கள் என அருகிலிருப்பவர்களுக்கு தங்கள் புத்தாண்டு வாழ்த்துகளை அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.