Published:Updated:

'பொங்கல் பண்டிகைக்காக இளவட்டக்கல் தூக்கும் பயிற்சி!' - ஆர்வத்துடன் பங்கேற்கும் பெண்கள்

பி.ஆண்டனிராஜ்
'பொங்கல் பண்டிகைக்காக இளவட்டக்கல் தூக்கும் பயிற்சி!' - ஆர்வத்துடன் பங்கேற்கும் பெண்கள்
'பொங்கல் பண்டிகைக்காக இளவட்டக்கல் தூக்கும் பயிற்சி!' - ஆர்வத்துடன் பங்கேற்கும் பெண்கள்

பொங்கல் பண்டிகையின்போது, கிராமத்தில் நடத்தப்படும் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெறுவதற்காக, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.  

தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ’இளவட்டக்கல்’ தூக்குவது திகழ்ந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஊரின் நடுவிலும் ஒரு இளவட்டக்கல் கிடக்கும். இளைஞர்கள் அதைத் தூக்கி முதுகுக்குப் பின்புறமாக வீசியெறிந்து, தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் அந்தக் கல்லை தூக்குவதையும், அதைத் தூக்கும் இளைஞர்களைக் கிராம மக்கள் உற்சாகப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். 

நாகரிக யுகத்தில் பழைமை மறைந்துவிட்டன. சில கிராமங்களில் இளவட்டக்கல் என்பது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே கிடக்கிறது. ஆனாலும்கூட, தென் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில், பொங்கல் பண்டிகையின்போது அந்தக் கல்லைத் தூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில், பொங்கல் பண்டிகையின்போது வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காக, இளைஞர்களும் இளம் பெண்களும் தற்போதே தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுபற்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசுகையில், ’’ஒரு காலத்தில் இளவட்டக்கல் தூக்கினால் மட்டுமே பெண் கிடைக்கும் என்கிற நிலைமை இருந்திருக்கிறது. அதனால், அந்தக் கல்லுக்கு கல்யாணக் கல் என்கிற பெயரும் இருந்துள்ளது. இப்போது அதெல்லாம் மாறிவிட்டாலும், நாம் நமது பாரம்பரிய விளையாட்டுகளை மறந்துவருவது வருத்தமானது. எங்கள் கிராமத்தில் பொங்கல் பண்டிகையின்போது, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளோடு சேர்த்து இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டுவருகிறது. 

 100 கிலோவுக்கு அதிகமான எடைகொண்ட அந்தக் கல், உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், கையால் பிடிப்பதிலேயே சிரமம் இருக்கும். அதனால், வழுவழுப்பாக எந்தப் பிடிமானமும் இல்லாமல் கைக்கு அகப்படாத அந்தக் கல்லை, குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் சேர்த்து அணைத்துப் பிடிக்க வேண்டும். அப்படியே பலத்தை ஒன்றுதிரட்டி, மெதுவாக எழ வேண்டும். கல் முழங்கால் அளவுக்கு வந்ததும், முழுப்பலத்துடன் நிமிர்ந்து, கல்லை நெஞ்சின்மீது ஏற்றிவைத்து சிறிது ஆசுவாசப்பட்டதும் அப்படியே தோள்பட்டைக்கு நகர்த்த வேண்டும். 

தோளுக்குத் தூக்கிய கல்லை முதுகுப்புறமாக வீசினாலே போதுமானது என்றாலும், கல்லைத் தூக்கியவர்கள் அதைச் சுமந்தபடியே கோயிலை வலம்வருவது... குளத்தைச் சுற்றுவது என வீரத்தை வெளிப்படுத்துவார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த இளவட்டக்கல், பல ஊர்களில் தூக்குவதற்கு ஆள் இல்லாமல் மண்ணில் புதைந்துகொண்டிருக்கிறது. 

எங்கள் கிராமத்தில் வருடந்தோறும் போட்டிகள் நடத்தப்படுவதால், நாங்கள் அதற்கான பயிற்சியை எடுக்கிறோம். எங்களைப் போலவே பெண்களுக்கு உரல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அதனால், பெண்களும் ஆர்வமாக அதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வாரம் மட்டுமே இருப்பதால், இப்போது இளைஞர்களின் ஆர்வம் அனைத்தும் இளவட்டக்கல்மீது மட்டுமே பதிந்திருக்கிறது’’ என உற்சாகமாகப் பேசினார்கள்.