Published:Updated:

தூத்துக்குடியில் பாரம்பர்ய உடை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

தூத்துக்குடியில் பாரம்பர்ய உடை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!
தூத்துக்குடியில் பாரம்பர்ய உடை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

தூத்துக்குடியில், 80 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் பாரம்பர்ய முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கலிட்டு பண்டிகையைக் கொண்டாடினர்.

சென்னையில் உள்ள  தனியார் சுற்றுலா நிறுவனம், கடந்த 12 வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஒருங்கிணைத்து, 'ஆட்டோ ரிக்‌ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஏற்பாடுசெய்து, இந்தியாவிற்கு அழைத்து வருகிறது. 12-வது ஆண்டாக இந்த ஆண்டும் அதேபோல ஏற்பாடுசெய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச்  சுற்றுலாப் பயணம், கடந்த டிசம்பர் 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது.

இதில், அமெரிக்கா,  இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நார்வே  ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த 27 பெண்கள் மற்றும் 53 ஆண்கள் என மொத்தம் 80 பேர் கலந்துகொண்டு 32 குழுக்களாகப் பிரிந்து 32 ஆட்டோக்களில் சென்னையிலிருந்து கிளம்பி  புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக, இன்று (4.1.19) தூத்துக்குடி வந்தனர். இங்குள்ள பிரசித்திபெற்ற பனிமய அன்னை ஆலயம், கடற்கரை , உப்பளங்கள், மணப்படு உள்ளிட்ட இடங்களைப் பார்த்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரத்தில் உள்ள 'பிரம்மஜோதி' என்ற தனியார் தோட்டத்தில் பொங்கல்  கொண்டாடுவதற்காக வந்தனர்.

அவர்களை வரவேற்கும் விதமாக, தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள்குலை, வாழை, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் தோட்டத்துக்கு வந்த அவர்களுக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர்களுக்கு  நுங்கு, மாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம், பனங்கிழங்கு, நெல்லிக்காய், இலந்தைப்பழம் ஆகியவற்றை ருசித்தும், இளநீர், பதநீர், எலுமிச்சைச்சாறு ஆகிய இயற்கை பானங்களை அளித்து மகிழ்ந்தனர். அனைவரும் தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி, சேலை அணிந்துகொண்டு பொங்கலிட்டனர்.

வரிசையாக 32 அணிகளுக்கும் தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பானை வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில், பொங்கலிடத் தேவையான பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரிப்பருப்பு ஆகியவை அடங்கிய ஓலைப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அணியும் தனித்தனியாகப் பொங்கல்வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கிவரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் குலவைச் சத்தம் போட்டுக்காட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு, வெளிநாட்டுப் பயணிகள் குலவைச் சத்தமும் எழுப்பியும் அசத்தினர்.

பொங்கல் வைத்து முடிக்கப்பட்டதும், அந்தந்த அணியினர் வைத்த சர்க்கரைப் பொங்கல் பானையிலிருந்து ஒரு கரண்டி பொங்கலை தட்டில் எடுத்து, அதற்கு பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்து வரிசையாக வைத்தனர். அவர்கள் வைத்த பொங்கலின் சுவை, அலங்காரம் ஆகியவற்றின்படி, முதல் மூன்று அணியைத் தேர்வுசெய்தனர். பின்னர், தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கு முதல் பரிசாக செவ்வாழை, இரண்டாம் பரிசாக கற்பூரவள்ளி, மூன்றாம் பரிசாக பூலாஞ்செண்டு ஆகிய ரக வாழைப் பழக்குலைகள் பரிசாக வழங்கப்பட்டன.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்மைலி ஜிஜூ பேசுகையில், “தமிழர்களின் கலாசாரம் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. வேட்டி, சேலை டிரெஸ் வித்தியாசமா இருக்கு. எங்களுடன் வந்த டூரிஸ்டர்ஸ் குரூப் மெம்பர்ஸ் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து,  பொங்கல் வச்சது எங்க வாழ்க்கையில மறக்கமுடியாத ஒரு மகிழ்ச்சியான  அனுபவம்” என்றார்.  தொடர்ந்து, கன்னியாகுமரிக்குச் சென்று அங்கிருந்து  திருவனந்தபுரம் செல்லும் வெளிநாட்டினர் வரும் 6-ம் தேதி அங்கிருந்து விமானம் மூலம் அவரவர் சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.