Published:Updated:

பாரம்பர்யத்தை மீட்டெடுத்த சுகாதாரத் திருவிழா... அசத்திய உத்திரமேரூர் பேரூராட்சி!

குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் காணவேண்டிய ஏராளமான அம்சங்கள் நிறைந்திருந்தன. இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், மூலிகைச் செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பாரம்பர்யத்தை மீட்டெடுத்த சுகாதாரத் திருவிழா... அசத்திய உத்திரமேரூர் பேரூராட்சி!
பாரம்பர்யத்தை மீட்டெடுத்த சுகாதாரத் திருவிழா... அசத்திய உத்திரமேரூர் பேரூராட்சி!

திருவிழா என்றாலே சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்போதுதான் அது நிறைவான திருவிழாவாக அமையும். இந்த நிலையில், ஓர் அரசு விழா மண்மனத்தோடு திருவிழாவாகக் கொண்டாடப்படுவது அதிசயம். தூய்மை இந்தியா திட்டத்தைச் `சுகாதாரத் திருவிழா’வாகக் கொண்டாடி அசத்தியிருக்கிறார்கள் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

5-ம் தேதி காலைப் பொழுதில் மார்கழி மாத இதமான சூரிய வெப்பத்தில் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள நல்ல தண்ணீர் குளத்தைச் சுற்றிலும் மக்கள் குழுமி இருந்தார்கள். உத்திரமேரூர் சுற்றுவட்டாரப் பள்ளிகளிலிருந்து மாணவர்களும் கிராமப் பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். உத்திரமேரூர் பேரூராட்சிச் செயல் அலுவலர் மா.கேசவன் கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து குதிரைகள் முன்செல்ல, பலூன், மாங்கொத்து என அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சிறுவர்கள் அமர்ந்துகொண்டனர். அந்த வண்டியைத் தொடர்ந்து மறுசுழற்சி பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடர் வண்டியில் மற்றொரு சிறுவர் கூட்டம் ஏறிக்கொண்டது. சிறுவர்கள் நல்ல தண்ணீர் குளத்தைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். குளத்துக்கு அருகே இருந்த பூங்காக்களில் ஊஞ்சல் ஆடியும் விளையாடியும் சிறுமிகள் விளையாடத் தொடங்கினார்கள். குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் காணவேண்டிய ஏராளமான அம்சங்கள் நிறைந்திருந்தன. இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், மூலிகைச் செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பேரூராட்சி பசுமை நண்பர்கள் பணியாளரான மகேஸ்வரி, ``அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் வளர்க்கப்பட்ட மூலிகைச் செடிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். பிரண்டை, தவசி முருங்கை, பிரம்மி, லெமன் கிராஸ் என 150-க்கும் மேற்பட்ட வகை மூலிகைச் செடிகள் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். தனியார் நர்சரிகளில் 100 ரூபாய்க்குக் கிடைக்கும் மூலிகைச் செடிகளை நாங்கள் 15 ரூபாய் என்ற குறைந்த விலையில் கொடுக்கிறோம். மூலிகைச் செடியை அப்படியே விற்காமல் அதன் பலன்களை மக்களுக்குச் சொல்கிறோம்” என்றார்.

அடுத்து அப்சைக்கிள் முறையில் பழைய டயர்களைக் கொண்டு உருவாக்கிய அலங்காரப் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. அங்குக் கல்லூரி மாணவிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து வீட்டிலேயே குப்பைகளை உரமாக்கும் யுக்திகள் குறித்தும், மாடித்தோட்டம் குறித்தும் விளக்கும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம் பிரித்து மட்கும் குப்பையைக் கொண்டு வீட்டிலேயே இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்த விளக்கங்கள் அங்கு அளிக்கப்பட்டன.

உத்திரமேரூர் பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகள், சிற்பங்களைக் கொண்டு பல அரிய தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார், வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பாலாஜி. விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு நவதானியச் சுண்டல், 108 மூலிகைகள் கொண்ட முடவாட்டுக் கிழங்கு சூப் ஆகியவை வழங்கப்பட்டன. சிலம்பம், மான் கொம்பு, சுருளி, தீப்பந்தம் எனச் சில சிறுவர்கள் தங்கள் அதீத திறமையைக் காட்டினார்கள். தற்காப்பு ஆயுதங்களைக் கொண்டு காற்றைக் கிழிக்கும் அவர்களின் வேகம் பார்வையாளர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மாணவர்கள் வானத்தில் உள்ள கோள்களை அறியும் வகையில் கோளரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

மதியம் இரண்டு மணிக்கு மேல் பாலசுப்பிரமணியர் கோயில் தெருவில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் நடந்தன. இதில் ஆர்வத்தோடு கலந்துகொண்ட பெண்கள், தங்கள் கைவண்ணத்தில் கோலம் போட்டு அசத்தினார்கள். `மறந்துபோன தின்பண்டங்கள்'  என்ற தலைப்பில் சமையல் போட்டி நடைபெற்றது. பாரம்பர்ய உணவு வகைகளைப் பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து செய்துகொண்டு வந்து காட்சிப்படுத்தினார்கள். மார்கழி என்றாலே இசைக் கச்சேரிதானே ஞாபகம் வரும். அந்த வகையில் இரவு தொடங்கியதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பாரதியார் பாடல்கள் எனக் கோயிலின் எதிர்ப்புறத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுற்றுவட்டாரக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக் அபாயம் குறித்தும் போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்பு உணர்வு நாடகங்கள் நடத்தினார்கள். பள்ளி மாணவர்களும் கரகம், ஒயிலாட்டம் என நாட்டுப்புறக் கலைகளால் கண்களுக்கு விருந்து படைத்தனர்.

இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் உத்திரமேரூர் பேரூராட்சிச் செயல் அலுவலர் மா.கேசவன். அவருக்குக் கிராம மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். செயல் அலுவலர் கேசவனிடம் பேசினோம். ``கடந்த இரண்டு வருடங்களாகப் பேரூராட்சியையும் மக்களையும் ஒன்றிணைக்கும் விதமாகப் பொங்கல் விழா கொண்டாடினோம். அதில் ஆண்டு முழுவதும் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்துவோம். போட்டிகளும் நடத்தி, கலந்துகொண்டவர்களுக்குப் பரிசு கொடுப்போம். அதன் நீட்சியாகத் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், சமையல் போட்டிகள், கோலப் போட்டிகள் என இந்த வருடம் ஏற்பாடு செய்து மக்களுடன் சேர்ந்து கொண்டாடினோம்.

பாரம்பர்ய உணவுகளை நாம் மறந்து விட்டோம். இதனால் புற்றுநோய், சர்க்கரை நோய், மூட்டுவலி, பார்வைக் குறைபாடு எனப் பல்வேறு நோய்கள் இளம் வயதினரிடையே அதிகம் காணப்படுகிறது. பாரம்பர்ய உணவுகள் என்றால் என்ன என்பதுகூடத் தற்போதைய தலைமுறைகளுக்குத் தெரிவதில்லை. இளைஞர்களும், சிறுவர்களும் துரித உணவுகளை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழர்கள் மறந்துபோன பாரம்பர்ய உணவுகளான கம்பங்கூழ், கம்பு இட்லி, சிறுதானியத்தில் செய்த இனிப்பு வகைகள், சிறுதானிய தோசைகள் முடக்கத்தான் ரசம் என உணவுப் பொருள்களை இப்பகுதிப் பெண்களைக்கொண்டு காட்சிப்படுத்தினோம். இது, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பொதுவாகவே கிராம மக்கள் பாசம் நிறைந்தவர்கள். உத்திரமேரூர் மக்கள் எங்கள்மீது வைத்திருக்கும் பாசத்துக்கும் நம்பிக்கைக்கும் அடையாளம்தான் இவ்வளவு பெரிய விழா கொண்டாட்டமாக இருக்கிறது” என்றார்.

ஊர்கூடித் தேர் இழுத்திருக்கிறார்கள், உத்திரமேரூர் மக்கள்!