Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018
சரிகமபதநி டைரி - 2018

ஜா புயலால் பாதிக்கப்பட்ட தலைஞாயிறு, ஒரத்தநாடு உள்ளிட்ட சில கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, அத்தியாவசியப் பொருள்களை வழங்கிவிட்டு வந்திருக்கிறார் பாடகி எஸ்.சௌம்யா. ஒவ்வொரு வீடாகச் சென்று பொருள்களைத் தன் கைப்படக் கொடுத்திருக்கிறார். சௌம்யாவின் `சுக்ரிதம் அறக்கட்டளை’ மூலமாக இந்த உதவி.

சரிகமபதநி டைரி - 2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இரண்டு வேன்களில் பொருள்களை எடுத்துச் சென்றோம். செங்கல் வீடுகளைத் தவிர்த்துவிட்டு, கிட்டத்தட்ட தரைமட்டமாகிவிட்ட குடிசை வீடுகளைத் தேடிப் போனோம். மின்சாரம் கிடையாது. ஒழுங்கான பாதை இல்லை” என்று சொல்லும்போதே குரல் கனத்தது சௌம்யாவுக்கு.

படுக்கப் பாய், பெட்ஷீட், அவசரத்துக்குத் தேவைப்படும் சில மருந்துவகைகள், பிஸ்கட் போன்றவை கொடுத்திருக்கிறார். ``அங்கு இருக்கும் பெண்களுக்கு,  சானிடரி நாப்கின்களும் எடுத்துச் சென்றேன். புழல் சிறைவாசிகள் தயாரித்தவை அவை. பொருள்கள் நேரடியாக தங்கள் கைக்கு வந்து சேர்வதில் கிடைக்கும் பூரிப்பு, அந்த மக்களின் முகங்களில் தெரிந்தது’’ என்றார் சௌம்யா.

மாசிராஜா என்கிற இளைஞரைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது அவருக்கு. பேச்சு கொடுத்தார்.

``நான் எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன் மேடம்.’’

``அப்படியா! நானும் எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரிதான்... நீங்க பாடுவீங்களா?’’

சரிகமபதநி டைரி - 2018

உடனே ஒரு `கானா’ பாடலை எடுத்துவிட்டிருக்கிறார் மாசிராஜா. பதிலுக்கு, சௌம்யாவும் இரண்டு வரிகள் எசப்பாட்டு பாடியிருக்கிறார்.

2015-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோதும், ஓடிச்சென்று உதவியிருக்கிறார் சௌம்யா. அப்போதும் இப்போதும் பரத்சுந்தர், அஸ்வத் நாராயணன், வித்யா கல்யாணராமன், கே.காயத்ரி,
எல்.ராமகிருஷ்ணன் போன்ற இளம் இசைக்கலைஞர்கள் இவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 44-வது ஆண்டுக் கலைவிழா தொடக்கம். ஆசி வழங்க வந்த அகோபிலம் மடத்து 46-வது ஸ்ரீமத் அழகிய சிங்கரும், விருதுகள் வழங்க வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமும் நிகழ்ச்சி தொடங்கு வதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்தது இன்ப அதிர்ச்சி!

ஹை பிட்ச்சில் ஒரு பாட்டு பாடிவிட்டு, தன் உரையைத் தொடங்கினார் எஸ்.பி.பி. ``மேடையில் ஒருவர் பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ, நடனமாடிக்கொண்டோ, நடித்துக்கொண்டோ இருக்கும்போது, அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் தலை குனிந்து தங்கள் செல்போனைப் பார்ப்பதை விட்டொழிக்க வேண்டும்’’ என்று கோபக்குரலில் சொன்னார் அவர்.

சரிகமபதநி டைரி - 2018

`சென்னையில் உள்ள அனைவரின் செல்போன்களும் திடீரெனக் காற்றில் பறந்துபோய் மாயமாகின்றன...’ என்ற `2.0’ படத்தின் கற்பனை நிஜமானால்தான், இங்கே செல்போன் போதை தெளியும்!

துணை ஜனாதிபதி இசை விழாவைத் தொடக்கிவைக்க ஒப்புக்கொண்டால், சபா நிர்வாகிகளுக்கு ரத்த அழுத்தம் எகிறிவிடுகிறது. டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து அனைத்து உத்தரவுகளையும் பெற்றாகவேண்டிய நிலை. விழா அழைப்பிதழில் இடம் பெறவேண்டிய விவரங்கள், விழாவில் யார் எங்கே நிற்க வேண்டும், எங்கே உட்கார வேண்டும் என, எந்த ஒரு விஷயமும் விடாமல் அலுவலக அனுமதி பெற வேண்டும். விழா தினத்தன்று துணை ஜனாதிபதி வந்து தன் கடமையை நிறைவேற்றிவிட்டு விடைபெற்றுச் சென்றதும், பெண் கல்யாணத்தை நடத்தி முடித்த திருப்தி சபா செயலர்களுக்கு!

பிரம்மகான சபாவின் பொன்விழாவையும், டிசம்பர் கலைவிழாவையும் தொடக்கிவைக்க துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வந்திருந்தார். ஜேசுதாஸ், மாளவிகா சருக்கை, டி.வி.வரதராஜன், பத்மாவதி அனந்தகோபாலன் ஆகிய நால்வருக்கு சபாவின் ஞான, நாட்டிய, நாடக, வாத்ய பத்மம் விருதுகளை வழங்கினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழிகளில் பேசினார். மூன்று முறை `நரேந்திர மோடி பாய்’ பெயரைக் குறிப்பிட்டார். ஆங்கில டி.ராஜேந்தர் மாதிரி நிறைய வார்த்தை விளையாட்டுகள். இசை பற்றியும், சினிமா, நாடகம், நாட்டியம் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

சரிகமபதநி டைரி - 2018

விருது பெற்றவர்கள் (ஜேசுதாஸ் உட்பட) ஏற்புரைக்க, வி.பி. ஆபீஸ் அனுமதி வழங்கவில்லை!

தேர்தல் கூட்டங்களில் பெரியோர்களையும் தாய்மார்களையும் கவர்ந்திழுக்கும் கம்பீரக் குரலுடையோன் பாலக்காடு ராம்பிரசாத். பாடும்போது இந்த ரோபஸ்ட் வாய்ஸ்தான் இவருக்கு பலமும் பலவீனமும்.

ராகசுதா ஹாலில் பரம்பராவுக்காகப் பாடியபோது, ஆபோகி வர்ணத்தை அசுரவேகத்தில் ஆரம்பித்தார் ராம்பிரசாத். தொடர்ந்த ஸாவேரி ஸ்வரங்களில் கிரைண்டரில் போட்ட கோலிக்குண்டுகள்!

விரிவான சாரங்கா ஆலாபனை. பஞ்சமத்துக்கு மேலே போனபோது கல்யாணி ஸ்வரங்கள் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. பாடகர் இதை விரட்டியடித்திருக்க வேண்டும். வயலினில் லால்குடி விஜயலட்சுமி வாசித்த சாரங்கா சுத்தபத்தம். அனுபவ முத்திரை! `ஞானசபையில் தில்லை கானந்தன்னில் நின்றாடும்’ என்ற பாபநாசம் சிவனின் வரிகள் சாரங்காவில் ஊறவைக்கப்பட்ட விறுவிறு ஊறுகாய்!

சரிகமபதநி டைரி - 2018

ரீதிகௌள ராகம் அன்றைய நாளின் ஹைலைட். ராகத்தின் காலப்பிரமாணம், யாரையும் குரல் அடக்கிப் பாடவைக்கக்கூடியது. காட்டுக் கத்தலுக்கு வழி கிடையாது. ராமும் விஜியும் ஒருவரை ஒருவர் விஞ்சினார்கள். `பரிபாலயம்’ பாடலில் `தாமர சாயத லோசன...’ வரிகளில் நிரவலிலும் ஸ்வரங்களிலும் ரசிக்கவைத்த சவால் - ஜவாப்!

மன்னார்குடி ஈஸ்வரனின் மிருதங்கமும் கூடவே ஸ்வரங்களைப் பாடி வந்தது ஸ்வீட்டு! பி.எஸ்.புருஷோத்தமனுடனான இவரது `தனி’, கொஞ்சமாகவும் நிறைவாகவும் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு வரை, மேடையில்கூட நவராத்திரி கொலுவில் பாடுவதுபோல் பவ்யமாகப் பாடிவந்தவர் கே.காயத்ரி. இப்போது வளர்ந்துவிட்டார். உடல்மொழியில்தான் எத்தனை மாற்றங்கள்! தலையாட்டி, தோள் குலுக்கி, கை வீசிப் பாடுகிறார். நிறைய சிரிக்கிறார். மிருதங்கக் கலைஞர் தீர்மானம் வைக்கும்போது டான்ஸர் மாதிரி இவர் இட, வலம் தலை அசைப்பது ஜோர்!

கலாரசனா கல்சுரல்ஸ் சார்பில் ராகசுதா ஹாலில் பைரவி விரிபோணி வர்ணத்துடன் ஆரம்பித்தார் காயத்ரி. இனிமையான குரலும் வலுவான பாடாந்திரமும் ஒன்றுசேர, எப்போதும் இவர் குறைந்தபட்சம் பத்துக்கு எட்டு மதிப்பெண் வாங்கிவிடுகிறார்.

சரிகமபதநி டைரி - 2018

`துளஸீ பில்வ மல்லிகாதி...’ என்ற கேதாரகௌள கீர்த்தனையில் `நறுமணம் வீசும் துளசி, வில்வம் இவற்றின் தளங்களையும், மல்லிகை, தாமரை முதலிய மலர்களையும்கொண்டு நான் செய்யும் பூசனையை ஏற்றுக்கொள்...’ என்கிறார் திருவையாற்று எவர்கிரீன் ஹீரோ தியாகராஜர். கேதாரகௌள ராகத்தையும் இந்தப் பாடலையும்தான் மெயினாக எடுத்துக்கொண்டார் காயத்ரி. ஆலாபனையும் கீர்த்தனையும், நிரவலும் ஸ்வரங்களும் பாடகியின் ஞானம் வளர்ந்துவருவதற்குக் கட்டியம் கூறின. ஆனால், முன்னால் பாடிய பந்துவராளி, பாமரனையும் ரசிக்கவைக்கும் ராகம் என்பதால் ரேஸில் முந்திக்கொண்டுவிட்டது. பாடவும் கேட்கவும் ஜாலியான ராகம் இது. சுவாதித்திருநாளின் `ஸாரஸாக்‌ஷ பரிபாலயமா...’ பரிச்சயப்பட்ட பாடல். நன்றி காயத்ரி. அடுத்தமுறை பந்துவராளி ஆரம்பிக்கும்போது பூர்விகல்யாணியின் வாசம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது உங்களால் முடியும்!

போடப்பட்ட நாற்காலிகளில் சீனியர் சிட்டிசன்ஸ், விரிக்கப்பட்ட கார்ப்பெட்டில் முழுக்கவும் ஜூனியர் சிட்டிசன்ஸ். ஹால் நிரம்பிய ஆர்.கே கன்வென்ஷனில் மதுரத்வனிக்காகப் பாடியவர் பரத்சுந்தர். வயலின், மிருதங்கம், கஞ்சிராவுக்கு நாகை ஸ்ரீராம், நெய்வேலி நாராயணன், அனிருத் ஆத்ரேயா. சிடுமூஞ்சியாக இல்லாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் கஞ்சிரா வாசிக்கிறார் அனிருத். மேடைக்கு அது ஊட்டச்சத்து!

ஒருவிதக் கவர்ச்சியான குரல் பரத்சுந்தருக்கு. காது ஜவ்வுகளைக் கிழிக்காமல் இதமாக வருடிவிடும் குரல் அது. கச்சேரியில் முத்துஸ்வாமி தீட்சிதரைக் கேட்க முடிந்தது. சியாமா சாஸ்திரியும் தியாகராஜரும்கூட ஆஜரானார்கள். ஆனால், கடைசியில் லால்குடியின் மாண்டு தில்லானாவில் வரும் ஓரிரு வரிகளில் மட்டுமே தமிழ்! பிள்ளையாருக்கு, பத்துத் தோப்புக்கரணம் போடக் கடவதாக!

ஜகன்மோகினியும், ஹரிகாம்போதியும் பரத்சுந்தரின் ஆலாபனையில் கேட்கக் கேட்க இன்பம். எந்த இடத்திலும் ஸ்வர கலப்படம் செய்யாத, கழுவிவிட்ட தார்ச்சாலை மாதிரி பளபளத்தன. `தினமணிவம்ச திலக லாவண்ய...’வில் ஒவ்வொரு ஹரிகாம்போதி சங்கதியிலும் ஹைவேஸ் கார்ப் பயண உணர்வு!

``காம்போதி ஜன்ய ராகம். ஹரிகாம்போதிதான் ஜனக ராகம். ஆனால், ஹரிகாம்போதியைவிட காம்போதிதான் ஃபேமஸா இருக்கு. அப்பாவைவிட பிள்ளை பிரபலமா இருக்கிற மாதிரி...” என்று இசை தொடர்பான ஓர் உரையாடலில் காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறார். அப்பாவை இன்னும் அதிகமாக முன்னிறுத்தினால் அவரும் பிள்ளைக்குச் சமமாகப் பிரபலமாகிவிடுவாரே!

- டைரி புரளும்...

வீயெஸ்வி - படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன், பிரியங்கா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism