Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

விகடன் விமர்சனக்குழு

சரிகமபதநி டைரி - 2018

பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018

நாரதகான சபா அரங்கில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் ரஞ்சனி, காயத்ரி... இதோ, கல்யாணியின் முதல் பாதியை சாந்தமாக வளர்த்திய பிற்பாடு, பின்பகுதியை காயத்ரியிடம் ஒப்படைக்கிறார் ரஞ்சனி. ஒப்பனை அறையில் (விரிவாக்கத்தில்), கல்யாணியை மினுக்கவைத்துக்கொண்டிருக்கிறார் காயத்ரி.

சரிகமபதநி டைரி - 2018

உருக்கமாகவும் பாவத்துடனும் பாடுவது எப்போதுமே சகோதரிகளின் மெயின் அஜெண்டா. பேகடாவில் பாபநாசம் சிவனின் `கானரசமுடன்...’ பாடலில் பேகடாவின் குழைவுகள் உச்சபட்சம். நாககாந்தாரீ ராகத்தில் `ஹிமவானின் புதல்வியே என்னைக் காப்பாற்று...’ என்று தீட்சிதர் என்ன உணர்ச்சியுடன் பாடியிருப்பாரோ, அதை அச்சு அசலாக வெளிப்படுத்தினார்கள் சகோதரிகள். தேவமனோகரியுடன் தியாகராஜர் வந்தார். ஆலோபனையும் `எவரிகை யவதார...’மும் ஸ்வரங்களும், இன்று ரஞ்சனி, காயத்ரி `பீக்’கில் இருப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தின.

சரிகமபதநி டைரி - 2018

அடுத்து இன்னொரு  மெல்ட்டிங் பாடல். `மாயம்மா...’ என்று ஆஹிரியில் சியாமா சாஸ்திரி உருகுவார். ரஞ்சனியும் காயத்ரியும் உருக்கினார்கள். மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருவோம். மேல்ஸ்தாயி கல்யாணியில் `சாமி’ வந்துகொண்டிருந்தது காயத்ரிக்கு. கிரகபேதத்தில் ஹிந்தோளம் இன்முகம் காண்பித்துச் சென்றது. வயலினில் ஹெச்.என்.பாஸ்கர் நிழலாகத் தொடர்ந்தார். ஆலாபனை முடிந்து, அதே மூச்சில் காயத்ரி தானம் எடுத்தபோது `நிறுத்துங்க...’ என்று ரசிகர்கள் கூக்குரல் எழுப்புவதுபோல் கையொலியை பலமாக எழுப்பிவிட்டு, பிறகுதான் தானத்துக்கு வழிவிட்டார்கள்.

* சகோதரிகளுக்குக் கொடுத்த இரண்டு மணி நேரம் போதாது என்பதை கார்த்திக் நிர்வாகம் புரிந்துகொள்ளல் அவசியம். 120 நிமிடம்தான் கொடுக்கப்பட்டிருப்பதை, ராகாவும் மனதில்கொண்டு திட்டமிட்டிருக்க வேண்டும்.

சரிகமபதநி டைரி - 2018

*வழக்கமாக நிரவலில் வீடுகட்டி விளையாடக்கூடியவர்கள் ரஞ்சனி, காயத்ரி. இந்தக் கச்சேரியில் எந்தப் பாடலுக்கும் நிரவல் கிடையாது.

*  `கடைசியாக அபங் பாடி நிறைவு...’ என்று காயத்ரி சொல்லி முடிப்பதற்குள், திரை இறங்கத் தொடங்கியது. ரசிகர்கள் கூக்குரலெழுப்ப, மறுபடி திரை மேலேறியது. பிரபலத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரியெல்லாம் `கர்ட்டன் ரைஸர்’ தேவையா?

ஆக, மழையால் பாதிக்கப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் மாதிரி டக்வொர்த் - லூயிஸ் முறையில் ராகாவுக்கு வெற்றி!

து தீம் பார்க் - ஸாரி - தீமாடிக் கச்சேரி!

யூத் ஹாஸ்டலில் `காதலாகிக் கசிந்து...’ உருகினார் சிக்கில் குருசரண். மார்கழி மஹோஸ்தவத்துக்காக நடந்த அரங்கம் நிறைந்த கச்சேரி. இங்கே நடக்கும் எல்லாக் கச்சேரிகளும் ஹவுஸ்ஃபுல்தான். இரண்டு கேமராக்கள், மேடையையும் மக்கள் கூட்டத்தையும் மாறி மாறிச் சுட்டுத்தள்ளுகின்றன.

பக்தியில் காதல், இதுதான் குருசரண் தேர்வுசெய்த பாடல்களின் உள்ளடக்கம். அவையடக்கத்துடன் அவற்றைப் பாடினார். எல்.ராமகிருஷ்ணன் (வயலின்), கே.வி.பிரசாத் (மிருதங்கம்), பி.எஸ்.புருஷோத்தமன் (கஞ்சிரா) மூவரும் காதலுக்குப் பக்கத்துணை!

சரிகமபதநி டைரி - 2018

நீலாம்பரியில் லால்குடி ஜெயராமன் முருகனை அழைக்கும் பத வர்ணம் பாட ஆரம்பித்தபோதே, குருசரணின் குரல் `மூடு’க்கு வந்துவிட்டது. கேட்பவர்களுக்கு கிக்!

`நித்திரையில் சொப்பனத்தில் நேற்று ராத்திரி...’ என்று கனம் கிருஷ்ணய்யர் தமிழில் இயற்றிய பதம், பட்டியலில் இரண்டாவதாக. நீலாம்பரியில் உறக்கம். பந்துவராளியில் கனவு!

கரூர் சிவராமய்யா என்கிற பாடலாசிரியர், 18-வது நூற்றாண்டில் மணிப்பிரவாள நடையில் கரகரப்ரியா ராகத்தில் இயற்றிய ஜாவளி, ஒரு தமாஷ் ரகம். ஆங்கிலம் - தமிழ் - தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இதைப் புனைந்திருக்கிறார் கரூரார். `Oh my lovely Lalana...’ என்றுதான் பல்லவியை ஆரம்பித்திருக்கிறார். அந்தக் காலத்திலேயே இவர் மாதிரி குறும்பு ஆசாமிகள் இருந்திருக்கிறார்கள்! நிகழ்ச்சியில் வித்தியாசமாக இதைத் தேர்வுசெய்ததற்கு Take a bow சரண்!

கச்சேரியின் முடிவில் கேள்வி - பதில் உண்டு. அதில் கேள்வி ஒன்றுக்குப் பதிலாக, அந்த நாளில் செம்மங்குடி கரகரப்ரியாவில் மேல்ரிஷபத்தில் பாடுவதை அவர் ஸ்டைலிலேயே பாடிக்காண்பித்தார் குருசரண். ஆஹா!

சுவாதித்திருநாளின் காபி ராக வர்ணத்தில், கும்பகோணம் டிகிரி காபியின் மணம் குணம் சுவையிருந்தன. வயதுக்குத் தொடர்பில்லாத `கும்’ மென்ற குரல், பாடகருக்கு.

அதிகம் புழக்கத்தில் இல்லாத மனோகரி ராகத்தின் வல்லினம் மெல்லினத்தை, குரலில் சேதாரம் இல்லாமல் விரிவுபடுத்தி சங்கதிகளில் குளிர்காயவைத்தார். திருக்கடையூர் அம்ருதகடேச்வரர் மீது தீட்சிதர் பாடியிருக்கும் கீர்த்தனை. அபிராமியின் இனிய மணாளர். சங்காபிஷேகம் செய்யப்படும் திருமேனி. சச்சிதானந்த ஸ்வரூபி. சங்கரனை சிறப்பாக பூஜித்தார் பாடகர்.

சரிகமபதநி டைரி - 2018

தன்யாசியில் `தியானமே வரனமந கங்கா ஸ்நானமே...’ (தியாகராஜர்); நாட்ட குறிஞ்சியில் `எக்காலத்திலும் மறவேனே...’ (ராமசுவாமி சிவன்) முடித்துக்கொண்டு, ராகம், தானம், பல்லவிக்கு வந்தார். அது பிரம்மகான சபாவில் மூன்று மணி நேரக் கச்சேரி. எனவே, புஜாரா மாதிரி நின்று, நிதானித்து விளையாடலாம்!

பூர்விகல்யாணி மாதிரி இருந்தது. அசப்பில் கல்யாணியையும் நினைவுபடுத்தியது. சஸ்பென்ஸில் பார்வையாளர்கள் பரிதவித்துக்கொண்டிருப்பதை சட்டைசெய்யாமல், ஆலாபனை பருவம் பருவமாக வளர்ந்தது.

மேல்ஸ்தாயி பயணத்தில் பிய்த்து உதறிவிட்டு, கீழே பயணித்து ஜங்ஷனில் வந்து நின்றதும் `கமனச்ரம’ என்று ராகத்தின் பெயரை அறிவித்தார் பாடகர். `ஓ அப்படியா?’ என்றது மனம். தானத்தின்போதும், தொடர்ந்த ஸ்வரங்களின்போதும் ராகமாலிகையாக இணைந்த ராகங்களை கவுன்ட் வைத்துக்கொள்ள இயலவில்லை. வயலின் எல்.ராமகிருஷ்ணனுக்கு எப்படி அத்தனை ராகங்களும் அத்துப்படி?

ஓ! பாடகரின் பெயர் `ராமகிருஷ்ணன்மூர்த்தி’ என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டது!

`வடிவேலனே... சிவபாலனே... குணசீலனே... ஒளியாக மன ஆஸ்ரமம் வந்தருள்...’ என்ற பல்லவி வரிகள், பாடகர் பரத்சுந்தர் எழுதி, டியூன் போட்டதாம். அந்த நாளில் அரியக்குடி, ஜி.என்.பி. மாதிரியானவர்கள் இப்படி பரஸ்பரம் பல்லவிப் பரிமாற்றம் செய்துகொண்டிருப்பார்களோ!

`இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற சினிமாத் தலைப்பை இவருக்கும் பொருத்திப்பார்க்க முடிகிறது. அதாவது, இளம் பாடகர் சாகேத்தராமனுக்கு. அநேகமாக எல்லாக் கச்சேரிகளிலும் இவருக்கு பலமான, பக்காவான பக்கவாத்தியம் அமைந்துவிடுகிறது. முக்கியமாக, இன்றைய முதல் வரிசை மிருதங்க வித்வான்கள் அனைவருமே சாகேத்தராமனுக்குச் சேர்க்கும் லய பலம், யானை பலம்!

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கச்சேரியில், திருச்சி சங்கரன் - மிருதங்கம்; நாகை ஸ்ரீராம் - வயலின்; கே.வி.கோபாலகிருஷ்ணன் - கஞ்சிரா.

`ச’வை `ஷ’ என்று உச்சரிப்பதை ஷாகேத்தராமன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கச்சேரியில் தொய்வில்லாமல் வேகவேகமாக டிராவல் செய்வதில் குறியாக இருக்கிறார் சாகேத்தராமன். குரலில் ஏற்ற-இறக்கங்கள் இவருக்குப் படுஜோராக வருகின்றன. `காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே...’ பாடலை, குரலைத் தூக்காமல் soft-ஆன பாவத்துடன் பாடினார் லால்குடி ஜெயராமனின் சீடர். கைத்தட்டல்களைக் குறிவைத்து, நிரவல் ஸ்வரங்களை ஆறு நிமிடத்துக்குத் துரிதமாகப் பாடும்போது வார்த்தைகள் அட்சரம் புரிவதில்லை - டாக்டர்கள் புரியாத கையெழுத்தில் எழுதும் Prescription மாதிரி! அநேகமாக எல்லாப் பாடகர்களுக்குமே இந்த `வியாதி’ உண்டு.

சாகேத்தராமன் பாடிய பைரவி, வின்டேஜ் ரகம். எல்லாமே branded சங்கதிகள். வீண் ஜோடனைகள் எதுவுமின்றி, உள்ளது உள்ளபடியே பாடி பைரவியின் நிஜ ரூபத்தைப் பார்க்கவைத்தார். ஸ்வரங்களின்போது நாகை, திருச்சிவாசிகள் வாசித்த அந்தக் கணம், ராஜாவின் சிம்பொனி இசை கேட்பது போன்ற சுகம். `தனி’யில் சங்கரன் என்றுமே தனி!

பைரவியில் சுவாதித்திருநாளின் பாடலை ஆரம்பிக்கும் முன், ``சாரோடு (சங்கரன்) செம்மங்குடி மாமா இந்தக் கீர்த்தனத்தை நிறைய பாடியிருக்கிறார். இன்னிக்கு நான் சாரோடு பாடுறது, எனக்கு பெரிய பாக்கியம்” என்றார் சாகேத்தராமன். பொதுவெளியில்... ஸாரி, இது கொஞ்சம் ஓவர்!

`கச்சேரி மேடைகளில் கலைஞர்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைக்க வேண்டாம். கேன்டீன்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேடைக்குப் பின்னால் bubble top தண்ணீர் கேன் வைத்து, அதிலிருந்து எவர்சில்வர்க் கோப்பையில் தண்ணீர் பிடித்து வைக்கலாம். பாடகர்கள் வீட்டிலிருந்து எவர்சில்வர்க் குடுவைகள் அல்லது ஃப்ளாஸ்கில் குடிக்க நீர் எடுத்துவரலாம்’ என்று சபாக்களுக்கு இ-மெயில் மூலம் வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருந்தார் டி.எம்.கிருஷ்ணா. (இதில் மியூசிக் அகாடமி மட்டும் விதிவிலக்கு, அவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக எவர்சில்வர்க் குடுவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்)

ஆனால், மற்ற சபா மேடைகளில் இன்னமும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்தான். மெயில் பாக்ஸைத் திறக்க சபா செயலர்களுக்கு நேரமில்லையா அல்லது `இவருக்கு வேற வேலையில்லை’ என்று கண்டுக்காம விட்டுட்டாங்களா?

- டைரி புரளும்...

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன், சு.குமரேசன், பிரியங்கா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு