`தங்கள் கடின உழைப்பின் அங்கீகாரத்துக்குக் கிடைத்த விருதினை தனது தாய்க்கு சமர்ப்பணம் செய்வதைவிட வேறு யாருக்கு சமர்ப்பணம் செய்வது சரியாக இருக்கும்?' - நாணயம் விகடன் சென்னையில் நடத்திய ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ வழங்கும் நிகழ்ச்சியில் ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு’ பெற்ற ஜி.ஆர்.டி குரூப் நிறுவனத்தின் தலைவர் ஜி.ராஜேந்திரன், தனக்குக் கிடைத்த விருதினைத் தனது தாய்க்கு சமர்ப்பணம் செய்தபோது, அரங்கமே கைதட்டி வரவேற்றது.
தொழில் துறையில் மகத்தான பங்களிப்பைச் செலுத்தியதற்காக அவருக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்ற அவர், “என் குடும்பம் ரொம்பப் பெருசு. எங்கிட்ட வேலை பார்க்குறவங்க எல்லாருமே என் குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். என் அம்மாவுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்’’ என்று உணர்ச்சிவசப்பட்டார். முருகப்பா குழுமத்தின் ஆலோசகரும், கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம் நிறுவனத்தின் தலைவருமான எ.வெள்ளையன் இந்த விருதினை வழங்கினார்.
ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குமுன், மெட்ராஸ் கோ-ஆபரேட்டிவ் சென்ட்ரல் பேங்க் எனப் புகழ்பெற்று விளங்கிய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராக வேலை பார்த்தவர் ஜி.ராஜேந்திரன். தங்க நகைகள்மீது மக்கள் அலாதியான பிரியம் வைத்திருப்பதைப் பார்த்து, தங்க நகைகளைச் செய்துதரும் நகைக்கடையைச் சொந்தமாகத் தொடங்கினார். அவரது தாயார் மகாலட்சுமி அம்மாளின் ஆசையும் அதுவே. 1964-ம் ஆண்டில் 400 சதுரஅடியில் ஒரு சிறிய நகைக்கடையைத் தொடங்கினார். அந்தக் கடைக்காக அவர் கொடுத்த வாடகை ரூ.100. தரமான தங்க நகையை நல்ல டிசைனுடன் தந்ததால், பெண்கள் அவர் கடையைத் தேடி வரத் தொடங்கினார். கடையின் பெயரை `ஜி.ஆர்.தங்க மாளிகை' என மாற்றினார். இப்போது அதுவே `ஜி.ஆர்.டி' என்று மாறியிருக்கிறது.

இந்த விருது வழங்கும் விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது தவிர, ஒன்பது பிரிவுகளில் தமிழகத்தின் மிகச் சிறந்த ஒன்பது தொழிலதிபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ரூ.5,000 முதலீடு செய்து, தனது கடின உழைப்பால் இன்றைக்கு ரூ.8,500 கோடிக்கு டேர்ன்ஓவர் செய்துவரும் சுகுணா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சௌந்தரராஜனுக்கு `செல்ஃப் மேட் ஆந்த்ரபிரினர் அவார்டு' அளிக்கப் பட்டது. பாரத் மேட்ரிமோனியின் சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன் இந்த விருதினை வழங்கினார்.
இளம் தொழில் முனைவர்களுக்குத் தொழில்வழிகாட்டும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பரத் கிருஷ்ணசங்கருக்கு ‘பிசினஸ் மென்டார் அவார்டு’ வழங்கப்பட்டது. ‘‘நீங்கள் மற்றவர்களுக்காக வழிகாட்டுகிறீர்கள். உங்களுக்கு வழிகாட்டும் மென்டார் யார்?’’ என நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ரம்யா கேட்க, “எனது அம்மாதான் எனது மென்டார்” என்றதும் அரங்கம் ஆமோதித்து, கரவொலி எழுப்பியது. ‘‘நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். அவர்களுடன் பேசுவதுதான் நல்ல ஸ்ட்ரெஸ் ரிலீவர்’’ என்றவர், விருதினைத் தனது தாய்க்கு சமர்ப்பணம் செய்தார்.
தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘டைசென்னை’ (TiEChennai) அமைப்புக்கு ‘பிசினஸ் மென்டார் (இன்ஸ்ட்டியூஷன்) அவார்டு’ அளிக்கப்பட்டது. ‘டைசென்னை’ அமைப்பின் தலைவர் சங்கரும் அதன் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வரும் விருதினைப் பெற்றுக்கொண்டனர். கே.பி.ஆர் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி இந்த விருதினை அளித்தார். ‘‘பல நாடுகளில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், சொந்த மண்ணில் விருது பெறுவதில்தான் மகிழ்ச்சி’’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அகிலா ராஜேஷ்வர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


லாஜிஸ்ட்டிக்ஸ் துறையில் பல புத்தாக்க நடவடிக்கையின்மூலம் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுவரும் டி.வி.எஸ் லாஜிஸ்ட்டிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.தினேஷுக்கு `பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு' வழங்கப்பட்டது. இந்த விருதினை ஈக்விட்டாஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் என்.ரங்காச்சாரி வழங்கினார்.
மதுரையைச் சேர்ந்த ‘தான்’ அறக் கட்டளைக்கு `சோஷியல் கான்ஷியஸ்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு' வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தால் சுமார் 20,000 கிராமங்களைச் சேர்ந்த 17 லட்சம் குடும்பங்கள் நன்மை அடைந்திருக்கின்றன. இதைச் சாத்திய மாக்கியவர் இந்த நிறுவனத்தின் தலைவர் எம்.பி.வாசிமலை. இவர், ஐ.ஐ.எம் அகமதா பாத்தில் எம்.பி.ஏ படித்தவர். பெரிய நிறுவனங்களுக்காக வேலை பார்ப்பதைவிட, ஏழை மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று நினைத்து, இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார்.
‘‘பணத்தின்மீது எனக்கு எப்போதுமே ஆர்வமிருந்ததில்லை'' என்று அவர் சொன்னதை அரங்கம் ஆச்சர்யமாகப் பார்த்தது. தைரோகேர் நிறுவனர் டாக்டர் எ.வேலுமணி, தமிழக அரசு சிறுபான்மை நலத்துறையின் தலைவர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரும் வாசிமலைக்கு விருதினை வழங்கிக் கௌரவித்தனர்.
சோதனைகள் பல வந்தபோதும் அனைத்தையும் எதிர் கொண்டு வெற்றிபெற்ற `லைஃப் செல்' நிறுவனத்தின் தலைவர் எஸ்.அபயகுமாருக்கு `பீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு' வழங்கப்பட்டது. ஸ்ரீராம் குரூப்பின் நிறுவனர் ஆர்.தியாகராஜன் இந்த விருதினை வழங்கினார். இந்த விருதினை அபயகுமார் தனது மனைவிக்கு சமர்ப்பித்தார்.

திருப்பூரைச் சேர்ந்த ‘ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோத்திங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரனுக்கு `ரைசிங் ஸ்டார் ஆந்த்ரபிரினர் அவார்டு' வழங்கப்பட்டது.
கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனும், அரவிந்த் ஐ கேர் சிஸ்டம் நிறுவனத்தின் புராஜெக்ட்ஸ் இயக்குநரான டாக்டர் எஸ்.அரவிந்த்தும் இந்த விருதினை வழங்கினார்கள். “திருப்பூர் மக்களுக்கு இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்” என்றார் பெருமிதமாக.
மிகச் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்துக் கான `ஸ்டார்ட்அப் சாம்பியன் அவார்டு' ஃப்ரெஷ் வொர்க்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ க்ரிஷ் மாத்ருபூதத்துக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சி.ஐ.ஐ-யின் சேர்மன் பொன்னுசாமியும், சாந்தி கியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவருமான எல்.ராம்குமாரும் இணைந்து இந்த விருதினை வழங்கினார்கள்.
ரஜினிகாந்த் ரசிகரான க்ரிஷ், விருதினைப் பெற்றுக்கொண்டு, ‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு’ என தனக்குப் பிடித்த ரஜினியின் பன்ச் லைனைச் சொன்னபோது அரங்கமே கைதட்டி வரவேற்றது.
`எம்.எஸ்.எம்.இ ஸ்டார் அவார்டு' ஈரோட்டைச் சேர்ந்த டி.எம்.டபிள்யூ சி.என்.சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ என்.சண்முகத்துக்கு வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஸ்விங் ஸ்டெட்டர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எ.ஆனந்த் சுந்தரேசன் இந்த விருதினை வழங்கினார்.

பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு, சிறிய முதலீட்டில் தொழில் தொடங்கிய சண்முகம், இன்று 150 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன்ஓவர் செய்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில், முருகப்பா குழுமத்தின் ஆலோசகர் எ.வெள்ளையன் சிறப்புரையாற்றினார். ‘‘விருது பெற்றவர்கள் அனைவரைப் பற்றியும் ‘கேஸ் ஸ்டடி’ செய்ய வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களை ‘கேஸ் ஸ்டடி’யாக நாம் ஆராய்ச்சி செய்து படிப்பதைப் போல, நம் நாட்டு நிறுவனங்களைப் பற்றியும் நாம் படிக்க வேண்டும்’’ என்றார் அவர்.
தங்கள் உழைப்பினால் பெற்ற விருதினை தாய்க்கும், மனைவிக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், பாடுபட்டு உழைத்த தொழிலாளர்களுக்கும் சமர்ப்பணம் செய்ய உண்மையிலேயே பெரிய மனம் வேண்டும். அது இந்த வெற்றியாளர்களுக்கு இருக்கிறது!
- சக்தி தமிழ்செல்வன் படங்கள் : விகடன் டீம்