Published:Updated:

`கீழடி – நம் தாய்மடி’ - 10-வது உலகத் தமிழ் மாநாட்டின் மையக்கரு!

கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முயற்சிக்கான முடிவை வெளியிடும் ஒரு முக்கியமான நிகழ்வும் இந்த மாநாட்டில் நடைபெற வாய்ப்புள்ளது. பல சித்தாந்த ரீதியிலான தடைகள் நீக்கப்பட்டு கீழடியில் இன்னும் 6 மாதங்களுக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதை நோக்கித்தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். கீழடியைத் தொடர்ந்து கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றையும் காட்சிப்படுத்தி அந்தக் கண்டுபிடிப்புகளின்மூலம் நமது வரலாற்றை இனைத்துப் பேசக்கூடிய சூழல் இனி உருவாகும்.

`கீழடி – நம் தாய்மடி’ - 10-வது உலகத் தமிழ் மாநாட்டின் மையக்கரு!
`கீழடி – நம் தாய்மடி’ - 10-வது உலகத் தமிழ் மாநாட்டின் மையக்கரு!

10-வது உலகத்தமிழ் மாநாடு, இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி சிகாகோ நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பற்றிய விளக்கக் கூட்டத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இத்துடன் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-வது ஆண்டு நிறைவுவிழாவுக்கான அறிவிப்பும், உலகத் தமிழர்களின் வர்த்தக மாநாட்டுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டன. இதில் 10-வது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தவுள்ள சிகாகோ தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எழுத்தாளர் சு.வெங்கடேசன், பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன், நடிகர் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட சிலர், விழா குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன்:

``இன்றைக்கு தமிழ்ச் சமூகம் போன்ற நெடிய பாரம்பர்யமிக்க சமூக

வரலாற்றின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம். அதேநேரத்தில் தமிழ்ச் சமூகம் பற்றிக் கண்டறியப்படும் புதிய விஷயங்கள் பீறிட்டு வெளியில் சொல்ல முடியாத சூழலிலும் இருக்கிறோம். அவை வெளிவருவதற்கு இதுபோன்ற அமைப்புகள் நடத்தும் மாநாடுகள் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

`இந்தியா டுடே' கட்டுரையில் `ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஓர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஓர் எலும்புக்கூட்டை ஆய்வுசெய்தபோது, அது சிந்துவெளி நாகரிகக் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் எலும்பு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்பை வெளியிட ஆறு மாதகாலம் போராடவேண்டியிருந்தது. அந்த மரபணு, இன்றைக்குத் தமிழகத்தில் தோடர் பழங்குடி மக்களின் டி.என்.ஏ-வுடன் பொருந்துகிறது. இந்த முடிவு, மொத்த இந்திய வரலாற்றின் முடிவில் மிக முக்கியமான மாறுதலை உண்டாக்கக்கூடியது.

கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுக் கண்டுபிடிப்புகள், இந்திய மானுடவியல் வரலாற்றின் மிக முக்கியமான மாற்றங்களை உண்டுபண்ணக்கூடியவை. அவற்றை சரியாகப் பிடித்துக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நடத்தவேண்டிய பொறுப்பு, பல்வேறு அமைப்புகளுக்கு இருக்கிறது. அதை முன்னெடுக்கும் ஒரு நிகழ்வாக இந்தச் சந்திப்பும் இதையடுத்து நடைபெறவுள்ள உலகத்தமிழ் மாநாடும் அமையும் என நினைக்கிறேன்.”

ஆழி.செந்தில்நாதன்:

``தமிழனுடைய மிக முக்கியமான காலகட்டத்தை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். உலகமயமாதலில், உலகின் பல நாடுகள், ஒரே ஒரு உலகமயமாதலைக்கூடக் கடக்காமல் இருக்கின்றன. தமிழ்ச் சமூகம், சங்ககாலம், காலனிகாலம், தற்போதைய காலகட்டம் என மூன்று உலகமயமாதலைச் சந்தித்து மிக முன்னேறிய சமூகமாக இருக்கிறது. ஆனால், அந்த மாண்பின் திறனை உணராமல் இருக்கிறது. இந்த மாநாடு, தமிழர்கள் தாங்கள் இழந்த மாண்பை, இறையாண்மையை, அரசியல் கலாசாரா மரபை மீட்பதாக இருக்கும் எனக் கருதுகிறேன். தன்னுடைய அறிவினால் தமிழ்ச் சமூகம் மீளும் காலகட்டத்தில் இருக்கும் சூழலில், இந்த மாநாடு ஒரு பெரிய அறிவுத் திருவிழாவாக இருக்கும்.”

`கீழடி – நம் தாய்மடி’ என்ற மையப்பொருளில் நடைபெறவுள்ள மாநாடு குறித்தும், அதன் நிகழ்ச்சிநிரல் குறித்தும் சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் பேசினார். `மாநாட்டுக்காக அனுப்பப்பட்ட 1,500 கட்டுரைகளில் 200 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகள், நான்கு நான்கு அமர்வுகளாக இரண்டு நாளில் வாசித்து முடிக்கப்படும். இதோடு உலகத் தமிழர்கள் வர்த்தக மாநாடும் நடைபெறவுள்ளது' போன்ற பல செய்திகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அதன் பிறகு தமிழக அரசு சார்பில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ``மூன்று அமைப்புகளை இணைத்து ஒரு

மாநாடு நடைபெறவுள்ளது. உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு பல்வேறு சவால்களைச் சந்தித்திருந்தாலும், இத்தனை வருடங்கள் கடந்திருப்பது மகிழ்ச்சியானது.

நான் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் தெரிந்துகொள்ள விரும்பிய நிறுவனம் இதுதான். இந்த மாநாட்டோடு உலகத் தமிழர்களின் வர்த்தக மாநாடும் நடத்தப்படும். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டு, அவர்கள் கூடுவதற்கு முக்கியமான ஓர் இடமாக இந்த மாநாடு இருக்கும்.

இந்தச் சங்கத்துக்காக 75 பேர்கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவது என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதை கொள்கையாக அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதைச் செயல்படுத்த இந்த மாநாடு மையமாக இருக்கும். மாநாட்டின் மையம் `கீழடி - நம் தாய்மடி' என்று சொல்லியிருப்பதால், கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முயற்சிக்கான முடிவை வெளியிடும் ஒரு முக்கியமான நிகழ்வும் இந்த மாநாட்டில் நடைபெற வாய்ப்புள்ளது. சித்தாந்த ரீதியிலான பல தடைகள் நீக்கப்பட்டு கீழடியில் இன்னும் ஆறு மாதங்களுக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதை நோக்கித்தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். கீழடியைத் தொடர்ந்து கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றையும் காட்சிப்படுத்தி அந்தக் கண்டுபிடிப்புகளின் மூலம் நமது வரலாற்றை இணைத்துப் பேசக்கூடிய சூழல் இனி உருவாகும்.

மாநாடு நடக்கும் இந்த நான்கு நாள்களும் தமிழக அரசின் பங்கெடுப்பு என்ன என்பதை முதலமைச்சருடன் பேசி முடிவெடுக்கப்படும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு எந்த அளவுக்கு உதவினார்களோ, அதைவிட பெரிய அளவில் இந்த மாநாட்டுக்கும் உதவிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஹார்வேர்டு இருக்கை அமைக்க தமிழக அரசு உதவியதுபோல, இந்த மாநாடு வெற்றிபெறவும் தமிழக அரசு சார்பாக முழுமையான ஒத்துழைப்புத் தருவோம்” என்றார்.