Published:Updated:

பொங்கல் பண்டிகை - அதிகரித்த வெற்றிலை ஏற்றுமதியால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

பொங்கல் பண்டிகை - அதிகரித்த வெற்றிலை ஏற்றுமதியால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!
பொங்கல் பண்டிகை - அதிகரித்த வெற்றிலை ஏற்றுமதியால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

 தூத்துக்குடியில், இந்த ஆண்டு வெற்றிலை விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடவுளுக்குப் படையல் போடும்போது, முக்கியமாக இடம்பெற்றிருப்பது வெற்றிலை. பொங்கல் திருநாளன்று இலையில் பழம், தேங்காய்க்கு அடுத்தபடியாக வெற்றிலை வைக்கப்பட்டு படையல் போடப்படும். கும்பகோணம் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கரூர் வெற்றிலை, திருச்சி வெற்றிலை என ஒவ்வொரு பகுதியிலும் வெற்றிலை விவசாயம் நடைபெறுகிறது. அவற்றில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலைக்கு தனிச்சுவை உண்டு.

இதில், மாத்து, சக்கை, ராசி, சன்னரகம் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. பெரிய வெற்றிலை ’மாத்து’ எனவும், கரும்பச்சை நிற வெற்றிலை ’சக்கை’ எனவும், இடைப்பட்ட அளவுள்ள வெற்றிலை ‘ராசி’ எனவும், கொழுந்து வெற்றிலையை ‘சன்னரகம்’ எனவும் சொல்கிறார்கள். இதில் சக்கை, மாத்து ரக வெற்றிலை அதிக காரத்தன்மை உடையதாகவும், மற்ற இரண்டு ரகங்கள் மிதமான காரத்தன்மையுடனும் இருக்கும்.

இதுகுறித்து வெற்றிலை வியாபாரி கணேசனிடம் பேசினோம், “ஆத்தூர் வெற்றிலைக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. அதன் காரத்தன்மைதான் இதற்குக் காரணம். இங்கிருந்து தினமும் 3 ஆயிரம் கிலோ முதல் 4 ஆயிரம் கிலோ வெற்றிலை ஏற்றுமதியாகும். முகூர்த்த நாள்கள், விசேஷ தினங்களில் 6 ஆயிரம் கிலோ வரை ஏற்றுமதியாகும். பொங்கல் பண்டிகையில்தான் தமிழகத்திற்குள்  அதிகமாக வெற்றிலை ஏற்றுமதியாகும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக 7 ஆயிரம் கிலோவுக்கு மேல ஏற்றுமதியாகியிருக்கு.

 மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய வெளி மாவட்டங்களுக்கு, ரெண்டு நாளுக்கு முன்னாலயே ஏற்றுமதி செஞ்சுட்டோம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊர்களில், இன்று இரவுலதான் வியாபாரம் களைகட்டும். அதனாலதான் உள் மாவட்டம், பக்கத்து மாவட்ட விற்பனைக்காகத் தாமதமா அனுப்புகிறோம். இந்த இரண்டு மாவட்டங்களில், எந்த ஊருக்கு வெற்றிலை அனுப்பினாலும், அதிகபட்சமா இரண்டு மணி நேரத்துக்குள்ள கிடைச்சுடும். ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் வாழை சாகுபடிக்கு இணையாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  வெற்றிலை விவசாயம் நடைபெற்றுவந்தது. ஆனால், தாமிரபரணி தண்ணீர் பற்றாக்குறையாலும், கண்மாய்கள் தூர் வாரப்படாததாலும் 20-க்கும் குறைவான  கிராமங்களில்தான் வெற்றிலை விவசாயம் நடக்கிறது” என்றார்.