Published:Updated:

`வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்' - நோயாளிகளுக்கு திருக்குறள் வழங்கிய ரோட்டரி சங்கம்!

`வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்' - நோயாளிகளுக்கு திருக்குறள் வழங்கிய ரோட்டரி சங்கம்!
`வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்' - நோயாளிகளுக்கு திருக்குறள் வழங்கிய ரோட்டரி சங்கம்!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாசிப்புப் பழக்கத்தினை அதிகப்படுத்திடும் வகையில் கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொதுநூலகத் துறை சார்பில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் திருவள்ளுவர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள்  மருத்துவமனைக்கு வெளியில் சென்று புத்தகம் படிக்க வாய்ப்பு இல்லை. எனவே, நோயாளிகளுக்கு வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்திடும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் உலகப் பொதுமறை நூலான திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். திருவள்ளுவர் பெருமை, திருக்குறள் சிறப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, ”எனக்குப் பிடித்த திருக்குறள்” என ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த ஒரு குறளைச் சொல்லி, அக்குறள் பிடித்ததற்கான காரணம், விளக்கத்தைக் கூறினர். தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு முதலில் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. நோயாளிகள் மட்டுமில்லாமல், நோயாளிகளின் பாதுகாவலர்கள், மருத்துவர்கள், துப்புறவுப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய ரோட்டரி சங்கத்தினர், “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களில் சிறப்பிடம் பெற்றது திருக்குறள்தான். மனித வாழ்வில் உள்ள அத்தனை நிலைகளையும் முழுமையாக விளக்கி மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் வழிகாட்டி நூல் திருக்குறள்.

அதனால்தான், ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய நூலாகத் திருக்குறளை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் எழுத்தாளர்கள்.  நாம் ஒவ்வொருவரும் தினம் ஒரு குறளை படிப்போம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருவள்ளுவர் தினத்தில் திருக்குறள் புத்தகம் வழங்கினோம். சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஒய்வு நேரங்களில் திருக்குறளைப் படிப்பதால் மனம் அமைதி அடையும். திருவள்ளுவர் தினத்தில் திருக்குறள் நூல் வழங்கப்பட்டது சிறப்பானதாக அமைந்துவிட்டது.” என்றனர்.