Published:Updated:

கார், பைக் பரிசு; சீறிய காளைகள் - பால்மேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!

கார், பைக் பரிசு; சீறிய காளைகள் - பால்மேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!
கார், பைக் பரிசு; சீறிய காளைகள் - பால்மேட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றது. போட்டியின் போது 48 பேருக்குக் காயம் ஏற்பட்டது. சிறந்த காளைக்கு ஆம்னி கார் பரிசு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 567 காளைகளும், 739 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். 10 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதற்பரிசாக பைக் வழங்கப்பட்டது. பாலமேடு வாடிவாசலில் சிறப்பாகக் களம்கண்ட மாலப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரது காளைக்கு முதல் பரிசாக ஆம்னி கார் வழங்கப்பட்டது. 

போட்டியின்போது மாடு முட்டியதில் மாடுபடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 48 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இதில் 13 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தங்கக் காசு, வெள்ளிக் காசு, கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாசிங் மிஷின், டி.வி. உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற முதல் பரிசினைப் பெற்ற காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ``பாலமேடு ஜல்லிக்கட்டுச் சிறப்பாக நடைபெற்றது, 13 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. கிராமத்தினர், மாடுபிடி வீரர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பால் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இன்று நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக 1,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார். பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியினைத் தொடர்ந்து இன்று காலை உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியானது நடைபெறவுள்ளது.