Published:Updated:

`1400 காளைகள்; 848 மாடுபிடி வீரர்கள்!' - கோலாகலமாகத் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

`1400 காளைகள்; 848 மாடுபிடி வீரர்கள்!' - கோலாகலமாகத் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
`1400 காளைகள்; 848 மாடுபிடி வீரர்கள்!' - கோலாகலமாகத் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராம மக்கள் மற்றும் விழாக் குழு சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி 4 மணி வரை நடைபெறும். ஜல்லிக்கட்டுப் போட்டியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.நடராஜன் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். 

போட்டியில் கலந்துகொள்ள 1400 காளைகளும், 848 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 32 துணைக் காவல் கண்காணிப்பாளர், 70 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு சக்கர மற்றும் நான்குசக்கர வாகன நிறுத்தம், போக்குவரத்து மாற்றம் குறித்து மதுரை மாவட்டக் காவல்துறை சார்பில் ( மதுரை காவலன் ) செயலி மூலம் தெரிந்துகொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடிவாசல், பார்வையாளர் கேலரி, வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனை, காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பகுதிகளில் 50 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் கொண்ட மருத்துவக் குழு உள்ளிட்ட 15 மருத்துவர்கள் அடங்கிய 12 மருத்துவக் குழு, 13 அவசரகால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ரத்த வங்கி வசதியுடன் கூடிய நடமாடும் மருத்துமனை வாகனம் போன்றவை தயார் நிலையில் உள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு அனைத்து வீரர்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளது.

50,000 பார்வையாளர்கள் போட்டியை அமர்ந்து பார்ப்பதற்கான பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டு இருபுறங்களிலும் 8 அடி உயரத்தில் இரண்டடுக்குப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள், பார்வையாளர்கள் என விழாவைக் காண வருபவர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நேரில் போட்டியைக் காண இயலாதவர்கள் பார்ப்பதற்காக 5 இடங்களில் எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள், காளைகள் கீழே விழுந்தால் காயம் படாமல் இருக்க வாடிவாசலிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குத் தேங்காய் நார்கள் தூவப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியில் ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான இரண்டு சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ, அண்டா, பட்டுப் புடவை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டு விழாவுக்கு ஜல்லிக்கட்டு விசாரணை கமிஷன் அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி வந்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காகப் போராடிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல், `அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த காளைக்கு துணை முதலவர் ஓ.பி.எஸ் சார்பில் ஒரு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு காரும் வழங்கப்பட இருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார். போட்டியின் தொடக்கமாக வாடிவாசலிலிருந்து 3 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.