Published:Updated:

வீடுகளுக்குத் தேடிவந்த அசைவ உணவு! - சிராவயலில் தடபுடலாக நடந்த மஞ்சு விரட்டுப் போட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீடுகளுக்குத் தேடிவந்த அசைவ உணவு! - சிராவயலில் தடபுடலாக நடந்த மஞ்சு விரட்டுப் போட்டி
வீடுகளுக்குத் தேடிவந்த அசைவ உணவு! - சிராவயலில் தடபுடலாக நடந்த மஞ்சு விரட்டுப் போட்டி

வீடுகளுக்குத் தேடிவந்த அசைவ உணவு! - சிராவயலில் தடபுடலாக நடந்த மஞ்சு விரட்டுப் போட்டி

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில், பலபேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயலில், ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெற்றுவருகிறது. வீரம்செரிந்த இந்த விளையாட்டு,  100 ஏக்கர் பரந்துபட்ட பொட்டலில்  பார்வையாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. மஞ்சு விரட்டு நிகழ்ச்சியைக் காண  கேலரி வசதிகளையும்,  போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு தொழுவம் வசதிகளையும் சூப்பராகச் செய்துவைத்திருந்தார், வேலுச்சாமி அம்பலம்.

இந்தப் பொட்டலில், மஞ்சுவிரட்டு பல நூற்றாண்டுக் காலமாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும், தைப்பொங்கல் முடிந்து ஜனவரி 17-ம் தேதி (இன்று) காலை,  காணும் பொங்கல் அன்று சிராவயலில் மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்த ஊரில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சிஅம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், முன்னோர் பூஜைகள் நடத்தப்பட்டு, நல்ல நேரம் பார்த்து முக்கிய நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு வாணவேடிக்கை, மேளதாளத்தோடு மஞ்சுவிரட்டு தொழுவுக்கு வந்தடைந்தது. மதியம் 1 மணிக்கு முன்னதாகவே இந்த வீர விளையாட்டு தொடங்கியது. போட்டியில் கலந்துகொண்ட காளைகளுக்கு, மருத்துவக் குழுவினர்  பரிசோதனை செய்தனர். போட்டியில் கலந்துகொண்ட அனைத்துக் காளைகளுக்கும் வேட்டி, துண்டு ,மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்ன,ர் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

ஆங்காங்கே, ஓடிவந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதுவரைக்கும் 54 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விழாவில், நடிகர் சரத்குமார் மற்றும் தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், டிஐஜி காமினி, எஸ்பி ஜெயசந்திரன் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். சிராவயல், மானகிரி, கும்மங்குடி, சமத்துவபுரம், தென்கரை, நாச்சியார்புரம், அதிகரம், கிளாமடம் ஆகிய கிராமங்களில், வீடுகள்தோறும் மஞ்சு விரட்டைக் காண வந்தவர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது.

வருவாய்துறை அதிகாரிகள், தீயணைப்பு வண்டிகள், அதன் வீரர்கள், மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ், தற்காலிக மருத்துவ முகாம், பாதுகாப்பிற்கு போலீஸ் அதிகாரிகள் என களத்தில் காத்திருக்கிறார்கள்.  3 கிலோமீட்டர் சுற்றளவில், ஆங்காங்கே கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. இதனால், மஞ்சுவிரட்டைக் காண வருபவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அனுமதி இல்லாமல் இதுபோல் அவிழ்த்துவிடப்படும் மாடுகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு