Published:Updated:

கலங்கடித்த செல்லியம்மன் கோயில் காளை; முதல்பரிசு பெற்ற ரஞ்சித் - அலங்காநல்லூர் ஜல்லிகட்டு ஹைலைட்ஸ்

கலங்கடித்த செல்லியம்மன் கோயில் காளை; முதல்பரிசு பெற்ற ரஞ்சித் -  அலங்காநல்லூர் ஜல்லிகட்டு ஹைலைட்ஸ்
கலங்கடித்த செல்லியம்மன் கோயில் காளை; முதல்பரிசு பெற்ற ரஞ்சித் - அலங்காநல்லூர் ஜல்லிகட்டு ஹைலைட்ஸ்

அலங்காநல்லூரில் ஆரவாரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அமைச்சர்கள் பங்கேற்றனர். முதல்வர், துணை முதல்வர் சார்பாக கார் பரிசு வழங்கப்பட்டது.

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கி சுமார் மாலை 5மணி வரை நடைபெற்றது. அவனியாபுரம், பாலமேடு, ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும். சிறந்த காளைகளும், சிறந்த மாடுபிடி வீரர்களும் இதில் அதிக அளவு கலந்துகொள்ளுவார்கள். இந்நிலையில் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1400 காளைகளும் 848 வீரர்களும் முன் பதிவு செய்யப்பட்டது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 100 வீரர்கள் என களம் இறக்கப்பட்டனர் மொத்தம் 8 சுற்றுக்கள் நடித்தி அதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் இறுதிச்சுற்றிற்கு இறக்கப்பட்டனர். 

போட்டியில் 697 வீரர்களும், 729  காளைகளும் வாடிவாசலில் களம்கண்டு பரிசுகள் வெற்றி பெற்ற காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் பரிசு வழங்கப்பட்டது. தங்க காசு, வெள்ளிக்காசு, பேன், ஏர் கூலர், அண்டா, குத்து விளக்கு இரு சக்கர வாகனம், கார்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரிலும், சிறந்த வீரருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரிலும் 2 கார்கள் பரிசாக வழங்கப்பட்டது.

15 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித்குமார் முதல்பரிசு பெற்றார். 10 காளைகளை அடக்கி மேலப்பட்டியை சேர்ந்த கார்த்திக் இரண்டாம் பரிசு பெற்றார், 9 காளைகளை அடக்கி அலங்காநல்லூரை சேர்ந்த மாடு வீரர் அஜய் மூன்றாம் பரிசை பெற்றார். அதே போல் பரம்புபட்டி செல்லியம்மன் கோவில் காளை முதல்பரிசு பெற்றது, அவனியாபுரத்தை சேர்ந்த சி.ஆர்.கார்த்திக் காளை இரண்டாம் பரிசை பெற்றது, குருவித்துறை எம்.கே.எம் காளை மூன்றாம் பரிசை பெற்றது. முதல் பரிசு வாங்கிய காளைக்கும், மாடுபிடி வீரனுக்கும் காரும், தங்க மோதிரமும் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  

ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜா மற்றும் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை விசாரணை ஆணையத் தலைவர் ராஜேஸ்வரன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.  விழா எந்த பிரச்னையும் இல்லாமல் சிறப்பாக முடிந்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேட்டியளித்தார்.