Published:Updated:

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

நம்மாழ்வார் சொன்னதை மறவாதே!

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

நம்மாழ்வார் சொன்னதை மறவாதே!

Published:Updated:
நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

ட்டுவண்டிப் பந்தயம், சீட்டுப்பந்தயம் எனப் பல பெயர்கள் உண்டு. பொதுவாக அறியப்படும் பெயர் `ரேக்ளா ரேஸ்.’புழுதிபறக்கச் சீறிப்பாயும் அந்த வண்டிக்காளைகள் பற்றியும் தமிழ்ப் பாரம்பர்ய விளையாட்டின் பின்னணிகளையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு தேனி மாவட்ட கிராமங்களுக்குப் பயணமானோம்…

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

``பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு போன்ற நான்கு வகை மாடுகளுக்கு என நான்கு வகையான ரேக்ளா ரேஸ்கள் பரவலாகத் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. ஆனால், தேனி மாவட்டத்தில் மட்டும், கூடுதலாக முயல்சிட்டுமாடு, புள்ளிமான் மாடு, தட்டான்சிட்டுமாடு, தேன்சிட்டுமாடு என்று மொத்தம் எட்டு வகையான மாடுகளை வைத்து ரேஸ் விடுகிறோம்” என நம்மோடு பேச ஆரம்பித்தார் மார்கையன்கோட்டையைச் சேர்ந்த ரேக்ளா ரேஸ் மாடுகளை வளர்க்கும் ஜெகதீஸ்.

ரேக்ளா பயிற்சி

“மாடுகளைத் தேர்ந்தெடுப்பதில் பல நுணுக்கங்கள் இருக்கு. நாட்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று கன்றுகளைத் தேர்வு செய்வோம். ஒரு வயதுக் கன்றாக இருக்க வேண்டும். தலை பெரிதாக இருக்கக்கூடாது. சின்னமுகமாக இருக்கணும். கொம்பு மட்டியா மடங்கிப்போய் இருக்கக்கூடாது. வில்லு மாதிரி இருக்கணும். வயிறு இழுவையா இருக்கக்கூடாது. நல்லா ஒட்டிப்போய் இருக்கணும். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மாட்டின் நிறம் ரொம்ப முக்கியம். காரி கலரில் இருக்கலாம். அதாவது கறுப்பு உடலில் வெள்ளைப்புள்ளி இருக்கும். அதேபோல செவலை நிறத்தில் இருக்கலாம். பிள்ளை நிறம் என்பார்கள். அதாவது பிஸ்கட் கலர். அடுத்ததாக வெள்ளையும் கறுப்பும் கலந்த மாதிரியான நிறத்தில் இருக்கலாம். இவற்றை மட்டுமே பந்தய மாடுகளாகத் தேர்வு செய்வோம். 

இப்படி மாட்டை சரியாகத் தேர்வு செய்வது பெரிய வேலை என்றாலும், அதை ரேஸுக்குத் தயார் செய்வது அதைவிடப் பெரிய வேலை. நாள் முழுவதும் அதோடுதான் இருக்க வேண்டும். பயிற்சிகள் பல அவற்றுக்குக் கொடுக்கப்படும்” என்றார்.

``என்னென்ன பயிற்சி கொடுப்பீர்கள்?’’ எனக் கேட்டோம். 

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

``கன்றை வாங்கி வந்த முதல் ஆறு மாதம் தினமும் பயிற்சி இருக்கும். முழுமையாக ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னர்தான் பந்தயத்திற்குக் கொண்டு செல்லப்படும். காலையில் இரும்புச் சோள நாத்து கொடுப்போம். அது நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு. பின்னர் உழவுக்கு அவற்றை அனுப்புவோம். ஒரு நல்ல  பந்தயமாடு, நல்ல உழவுமாடாகவும் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் வயல்காட்டில் உழுதுகொண்டிருந்த மாட்டைத்தான் வண்டியில் பூட்டி ரேஸ் விட்டு மகிழ்ந்திருக்கிறான் ஆதித்தமிழன். அதனால் கன்றாக இருந்தாலும், பெரிய மாடாக இருந்தாலும் அது நிச்சயம் உழவு மாடாக இருக்க வேண்டியது அவசியம். கன்றாக இருப்பதால் முதலில் இருவர் சேர்ந்து கலப்பையைப் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். பழகியதும் அதுவாகவே கலப்பையை இழுக்க ஆரம்பித்துவிடும். உழவு முடிந்ததும் மதிய உணவு. நவதானியக் கூழ் அல்லது முட்டை, நல்லெண்ணெய், நிலக்கடலை மாவு கலந்த உருண்டை கொடுப்போம். சில நேரங்களில் நாட்டுக்கோழி இறைச்சி, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், கொஞ்சம் மிளகாய் ஆகியவை கலந்த உருண்டை கொடுப்போம். மதிய உணவு முடிந்ததும் நேராக ஆற்றுக்குக் கொண்டு சென்று அரைமணி நேரம் நீச்சல் பயிற்சி கொடுப்போம். தண்ணீரில் அரைமணி நேரம் இருப்பதால் நீச்சல் முடிந்ததும் வீட்டுக்கு வந்து வெந்நீரை உடலில் அடித்துவிட்டு நன்றாகத் துடைத்துவிடுவோம். தைலம் இருந்தால் சுடுநீரில் சிறிதளவு கலந்துகொள்வோம். சளிப்பிடிப்பதைத் தவிர்க்க இஞ்சி, சின்னவெங்காயம், கருப்பட்டி, மிளகு ஆகியற்றைத் தட்டி உருண்டையாக்கிக் கொடுப்போம். முதல் ஆறு மாதத்திற்கு இதுதான். பின்னர், ரேஸ் வண்டியைப் பூட்டி ஊர் முழுவதும் சுற்றிவருவோம். அடுத்த இரண்டு மாதத்தில் சிறுவர்களை அதன்மேல் உட்கார வைப்போம். அதன் பின்னர் நாம் உட்காரலாம். இவை எல்லாம் முடிந்து மாடு பந்தயத்துக்குத் தயாராகும் வரை அதை ஒரு பிள்ளையைப்போல கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வோம். எங்கள் வீட்டில் ஒரு குழந்தையாகவே இந்த மாடுகள் வளரும்” என்றார் நெகிழ்ச்சியாக.

மாட்டுக்கேற்ற போட்டி!

``தேனி மாவட்டத்தில், விவசாயப் பகுதிகள் அதிகம் என்பதால் மாடுகள் அதிகமாக இருக்கும். ரேக்ளா ரேஸ்களும் அதிகமாக நடக்கும். ஊர்த் திருவிழாக்கள் முதல் வீட்டு விசேஷங்கள் வரை முறையாக அனுமதி பெற்று ரேக்ளா ரேஸ் விடப்படுகிறது. கன்றாக வாங்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் பயிற்சி பெற்ற ஒரு காளை மாடு, 20 வருடங்கள் வரைகூட பந்தயத்தில் கலந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். 

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

தேனி மாவட்டத்தில் எட்டு வகையான பிரிவுகளில் பந்தயங்கள் நடக்கும். காளைகளின் வயது, உயரம், பல் வரிசை ஆகியவற்றைக் கொண்டு மாடுகள் தரம் பிரிக்கப்படும். இதற்கு ஏற்றபடி பந்தய தூரம் இருக்கும். பெரிய மாட்டுக்கு 10 மைல் தூரமும், நடுமாட்டுக்கு 8 மைல் தூரமும், கரிச்சான் மாட்டுக்கு 6 மைல் தூரமும்  இருக்கும். ஒரு மாடு ரேஸுக்கு வருகிறது என்றால்  முதல் ஏழு நாள்கள் எளிதில் செரிமானமாகக் கூடிய இஞ்சிச் சாறு, நவதானியக் கூழ், எலுமிச்சைச் சாறு போன்ற நீர் ஆகாரங்கள்தான் கொடுப்போம். காலில் இருக்கும் லாடத்தை எடுத்துவிட்டு புது லாடம் மற்றும் புதுக்கயிறு ஆகியவை போடப்படும். தினமும் பயிற்சி, பின்னர் நல்ல ஆரோக்கியமான உணவு போன்றவைதான் ஒரு மாட்டை நல்ல ரேஸ்மாடாக மாற்றும்” என்றார் ரேஸ்காளைகள் வளர்க்கும் பாலார்பட்டியைச் சேர்ந்த ஆண்டி.

தட்டுவண்டி

தமிழ்நாடு முழுவதும் நடக்கும் ரேக்ளா ரேஸ்களில் பங்கேற்றுப் பிரபலமானவை சின்னமனூர் தங்கம் ரேடியோஸ் மாடுகள். இந்த மாடுகளுக்குச் சொந்தக்காரர் தங்கம். தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர். அவரைச் சந்தித்தோம். “மாட்டைத் தயார் செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது தட்டுவண்டி எனச் சொல்லப்படும் மாட்டு வண்டியையும், அதை ஓட்டுகிறவரையும் தயார் செய்வது” என சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பித்தார்.

``மாட்டு வண்டியின் அமைப்பு, அது எந்தெந்த மரங்களால் செய்யவேண்டும் என்பதுவரை சில முறைகள் இருக்கின்றன. சக்கரத்தின் சுற்றுப்பகுதி கருவேல மரத்தாலும், அதன் ஆரக்கால்கள் வாகை மரத்தாலும், அச்சாணி இருக்கும் குடப்பகுதி கருமுரசு மரத்தாலும் செய்யப்படும். இரு சக்கரங்களையும் இணைத்து உட்காரும் தட்டுப்பகுதி கொடிக்கால் மரத்தாலும், அதை முன்பகுதியோடு இணைக்கும் பகுதி மூங்கிலாலும் செய்யப்பட வேண்டும். 

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

மாட்டின் கழுத்துப்பகுதியில் உட்காரும் நேக்கா என்ற பகுதி வாகை மரத்தால் செய்யப்படும். இவை அனைத்தும் சேர்ந்து அதிக எடை இல்லாமல், அளவாக, வலுவாகச் செய்வதில்தான் மாடுகளின் வேகம் அமையும்.

அதே போல, மாட்டை ஓட்டும் ‘ஜாக்கி’ நல்ல அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். இரண்டு மாடுகளை சரியாக ஓட வைக்க வேண்டும். ஒரு மாடு சோர்ந்து போனோலோ, அல்லது பக்கத்து மாட்டின் காலில் இதன் கால்கள் பட்டாலோ அவ்வளவுதான். இதை கவனித்து சரியாக ஓட்ட வேண்டும். அதோடு, ஜாக்கிக்குப் பின்னால் இருக்கும் நபர், மாடு சோர்வானால் கீழிறங்கி அதன் வேகத்திற்கு ஓடி மாடுகளைத் தட்டிக்கொடுக்க வேண்டும். நல்ல ஓடும் திறன் கொண்டவர்களால் மட்டுமே இது முடியும். இப்படி எல்லாம் அமைந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்’’ என்று கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கிறார்.

“14 வயதிலிருந்து ரேக்ளா ரேஸ் மாடுகளை வளர்த்து பந்தயம் சென்றுகொண்டிருக்கிறேன். 50 வருட அனுபவம் எனக்கு. தமிழ்நாட்டில் நான் செல்லாத ஊர் இல்லை. சந்திக்காத மாடு இல்லை. இன்றும் தேனி மாவட்டம் சின்னமனூர் தங்கம் ரேடியோஸ் மாடுகள் என்றால் போட்டியாளர்களுக்கு சிறு பயம் இருக்கும். என் மாடுகள் பெற்ற வெற்றிகளும், அவை குவித்த பரிசுகளும் ஏராளம். இப்போதெல்லாம் அதிக இளைஞர்கள் ரேக்ளா ரேஸ்களில் ஆர்வமாக இருக்கிறார்கள். வீடுகளில் நாட்டு மாடுகளை வாங்கிப் பழக்கி, பந்தயத்திற்குக் கொண்டுவரும் இளைஞர்கள் அதிகரித்திருப்பது நல்ல மாற்றம்!” என்றார் பெருமிதப்புன்னகையோடு. அவர் சொன்னதை ஆமோதிப்பதைப்போல தலையை ஆட்டி ஆட்டித் துள்ளுகிறது அவருடைய ரேக்ளா கன்று!

எம்.கணேஷ் - படங்கள்: சாய்தர்மராஜ்