Published:Updated:

`1.37 நிமிடத்தில் ஒரு கி.மீ. தூரம்' - நெல்லை மாட்டு வண்டிப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்!

`1.37 நிமிடத்தில் ஒரு கி.மீ. தூரம்' - நெல்லை மாட்டு வண்டிப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்!
`1.37 நிமிடத்தில் ஒரு கி.மீ. தூரம்' - நெல்லை மாட்டு வண்டிப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் நடத்தப்பட்ட மாட்டு வண்டிப் போட்டி பொதுமக்களை வியக்க வைத்தது. அதில் சீறிப் பாய்ந்த வண்டிகளை ஆர்வத்துடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 8-ம் நாளில் ஆண்டுதோறும் மாட்டு வண்டிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாடு பூட்டப்பட்ட வண்டியின் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டியில், தட்டு வண்டி மற்றும் வில் வண்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. தட்டு வண்டிப் பிரிவில் 10 போட்டியாளர்களும் வில் வண்டிப்பிரிவில் 5 போட்டியாளர்களும் கலந்துகொண்டனர். பணகுடி-தண்டையார்குளம் சாலை குறுகலானதாக இருப்பதால், போட்டிக்காக ஒரு கி.மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டு அதை ஒவ்வொரு வண்டியும் தனித்தனியாக கடக்கும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. அதில் குறைவான நேரத்தில் வெற்றிக் கோட்டை எட்டிய வண்டியின் உரிமையாளருக்குப் பரிசு வழங்கப்பட்டது.

அதன்படி, தட்டு வண்டிப் பிரிவில் நடந்த போட்டியில் தண்டையார்குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது வண்டி குறிப்பிட்ட தூரத்தை 1.38 நிமிடங்களில் கடந்து முதல் பரிசை வென்றது. அந்த வண்டியின் உரிமையாளருக்கு ரூ 10,000 பரிசாக வழங்கப்பட்டது. குமரி மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷினி முத்து 2-வது பரிசாக ரூ.8000 மற்றும் புளியடி அபிராமி வண்டிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5000 வழங்கப்பட்டது.

வில் வண்டி பிரிவுக்கு நடத்தப்பட்ட போட்டியில் குண்டல் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரது வண்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 1.37 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தது. அந்த வண்டியின் உரிமையாளரான செல்லையாவுக்கு ரூ.9,000 பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த புதியம்புத்தூரைச் சேர்ந்த கெல்வின் ராஜா வண்டிக்கு ரூ.6,000 மற்றும் 3-ம் இடம் பிடித்த குளச்சல் பாலையா வண்டிக்கு ரூ.4,000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிப் போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியை பணகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்கள்.