Published:Updated:

குடியரசு தினவிழாவில் கலெக்டரின் படத்தை வரைந்து அசத்திய நெல்லை மாணவர்கள்!

குடியரசு தினவிழாவில் கலெக்டரின் படத்தை வரைந்து அசத்திய நெல்லை மாணவர்கள்!
குடியரசு தினவிழாவில் கலெக்டரின் படத்தை வரைந்து அசத்திய நெல்லை மாணவர்கள்!

நெல்லையில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரை, பள்ளி மாணவர்கள் அதே இடத்தில் படம் வரைந்து அசத்தினார்கள். அவர்களின் திறமையைக் கண்டு வியந்த ஆட்சியர், மாணவர்களைப் பாராட்டினார். 

நெல்லையில் குடியரசு தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் காவல்துறை மற்றும் அரசுத்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களைப் பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

அதைத்தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் மற்றும் தியாகிகளின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன், 62 பயனாளிகளுக்கு ரூ.1,26,58,311 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்த விழாவில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 1,439 மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

விழாவின்போது, நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள ஜெயராஜ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியான யமுனா நசீம், 12-ம் வகுப்பு மாணவர் நிதிஷ்குமார் ஆகியோர் அதே இடத்தில் ஆட்சியரின் உருவப்படத்தை பென்சில் கோட்டோவியமாகத் தத்ரூபமாக வழங்கியதுடன், அவற்றை ஆட்சியரிடம் பரிசாக அளித்தார்கள். அதைப் பார்த்து வியந்த ஆட்சியர் ஷிலா பிரபாகர்சதீஷ், இருவரையும் மேடைக்கு அழைத்து புத்தகங்களைப் பரிசாக வழங்கிக் கௌரவித்தார்.

நெல்லையில் நடைபெற்ற குடியரசு தினம் கொண்டாட்டத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சரட்கர், மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திரகுமார் ரத்தோட், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ஆணையாளர் நாராயணன் நாயர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.