Published:Updated:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்! - ரஷ்ய விஞ்ஞானிகள் பங்கேற்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்! - ரஷ்ய விஞ்ஞானிகள் பங்கேற்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்! - ரஷ்ய விஞ்ஞானிகள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நடைபெற்ற குடியரசு தினம் கொண்டாட்டத்தில் அணு மின் நிலைய உயரதிகாரிகள் மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கலந்துகொண்டார்கள். விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையம் சார்பாக 70-வது குடியரசு தினவிழா, அணு விஜய் நகரியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணுசக்தி கழகத்தின் ஒப்பந்தம் மற்றும் பொருள்கள் துறையின் நிர்வாக இயக்குநர் கோட்டீஸ்வரன் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோட்டீஸ்வரன், ``கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளின் மூலமாக இதுவரை 30,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதல் அணு உலை பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பராமரிப்புக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்து இந்த நிதியாண்டுக்குள் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும். 

3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 30 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 3-வது அணு உலையானது 2023-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். இந்த அணு உலை செயல்பட்ட பின்னர் மறு வருடத்தில் 4-வது அணு உலை இயங்கும். அதற்கேற்ற வகையில் பணிகள் நடந்து வருகின்றன. 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. 

முதலாவது அணு உலையின் கட்டுமானம் குறித்து சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். ஆனால், நாட்டிலேயே அதிக திறன் கொண்டதாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட உலை அமைக்கப்பட்டதால் அதை அடிக்கடி நிறுத்தி பராமரிப்பு செய்கிறோம். இது வழக்கான நடைமுறைதானே தவிர, இதில் சந்தேகப்படவோ அச்சப்படவோ அவசியம் இல்லை. லாப நோக்கத்துக்காக இல்லாமல் சேவை எண்ணத்துடன் அணு உலை செயல்படுவதால் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.   

இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சஞ்சய்குமார், 3 மற்றும் 4 வது அணு உலைகளுக்கான திட்ட இயக்குநர் சுரேஷ்பிள்ளை மற்றும் அணு மின் நிலைய உயரதிகாரிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் பங்கேற்று குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவில், பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், 100 அடி உயர கொடிக் கம்பத்தில் துணைவேந்தர் பாஸ்கர் தேசியக் கொடியேற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வெளியுறவு அமைச்சக இயக்குநர் நடராஜன், ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆல்பர்ட் பிச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பதிவாளர் சந்தோஷ் பாபு, தேர்வாணையர் சுருளியாண்டி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.