அரசியல்
Published:Updated:

சிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை!

சிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை!

கச்சத்தீவு திருவிழா சோகங்கள்...

மீபத்தில் சம்பிரதாயம்போல நடந்து முடிந்திருக்கிறது கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா. சிங்கள மக்களின் ஆதிக்கம், சிங்கள மொழியில் வழிபாட்டுப் பாடல்கள் என்று அந்தோணியார் திருவிழாவில் பெரும்பாலும் சிங்கள ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. தவிர, விழாவில் கலந்துகொண்ட மீனவர்களிடம் பேசியபோது, இலங்கை தமிழ் இளைஞர்களைப் போதைக்கு அடிமைகளாக்கி அவர்களை முடக்க, இலங்கை அரசு திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின்படி 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. கச்சத்தீவில் நடந்துவரும் அந்தோணியார் திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் சென்றுவந்தனர். ஒருகட்டத்தில் புலிகள் இயக்க நடவடிக்கைகள், தீவிரமடைந்ததால் சிறிது காலம் கச்சத்தீவு திருவிழா நடத்தப்படவில்லை. இலங்கை இறுதிப் போருக்குப் பின்னர் கடந்த பத்து ஆண்டுகளாக கச்சத்தீவு திருவிழா நடந்து வருகிறது. நெடுந்தீவு கிறிஸ்துவப் பங்கின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் இருந்தாலும், புலிகள் இயக்கத்தின் முடக்கத்துக்குப் பின்பு கச்சத்தீவு, முழுமையாக இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்திய மீனவர் சீனிகுப்பன் உருவாக்கிய பழைமையான அந்தோணியார் ஆலயத்தின் அருகிலேயே புதிய ஆலயத்தைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கைக் கடற்படையினர் கட்டினர்.

சிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை!

கடந்த ஆண்டு திருவிழாவின்போது வழக்கத்துக்கு மாறாக சிங்கள மொழியிலும் திருப்பலி நடத்தப்பட்டது. காலங்காலமாக அந்தோணியார் ஆலயத்தில் ஒலித்துவந்த தமிழ் மொழியுடன், முதல்முறையாக சிங்கள வழிபாடும் திணிக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு திருவிழா நடந்தது. இதில் பங்கேற்க இந்திய பக்தர்கள் 2,229 பேர் படகுகள் மூலம் சென்றனர். அதே நேரத்தில், 3,000 இலங்கைத் தமிழர்கள் விழாவில் பங்கேற்றனர்.  இலங்கை தமிழர்களுக்கு நிகராக கொழும்பு, நீர் கொழும்பு, மடு, சிலாவம், புளிக்கடவு ஆகிய பகுதிகளிலிருந்து சிங்களர்களும் அழைத்துவரப்பட்டிருந்தனர். இதனால், கடந்த ஆண்டு திருப்பலியின்போது மட்டுமே ஒலித்த சிங்கள வழிபாடு, இம்முறை ஒவ்வொரு வழிபாட்டின் போதும் ஒலித்தது. இதன் மூலம் தனித்தீவாக உள்ள கச்சத்தீவிலும் சிங்கள ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிகள் தொடங்கியுள்ளன என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய இலங்கை செய்தியாளர் ஒருவர், ‘‘புலிகளுடனான இறுதிப்போர் முடிவுக்குவந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுதரக் கோரி தினமும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும், தீர்வு கிட்டவில்லை. மன்னார் திருக்கேசர்புரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 300-க்கும் அதிகமானோரின் எலும்புகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை. அவை, போர்க் காலத்தில் மாண்ட மக்களின் உடல்கள் அல்ல எனவும், இலங்கையை ஆண்ட சங்கிலி மன்னன் காலத்தியது எனவும் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், அந்த உடல்கள் துப்பாக்கிக்குண்டுகளால் தாக்கப்பட்டிருப்பதும், விலங்குகளால் கைகள் பூட்டப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் யாழ்ப்பாணம் செம்பியம்பட்டு பகுதியிலும் மனித எலும்புகள் கிட்டியுள்ளன.

சிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை!

‘தமிழர் பகுதிகளில் அரசுப் பணிக்கு சிங்களர்களை  நியமிக்க மாட்டோம்’ என ரணில் சொன்னார். ஆனால், சிங்களர்கள் நியமனம் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. எங்கள் பகுதிகளில் புத்த விகாரங்கள் கட்டுவதும் தொடர்கிறது. எங்கள் இளைஞர்களுக்குத் தொழில் கல்வி கற்பதற்கோ, கம்பெனி வேலைகளுக்குச் செல்வதற்கோ வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. இப்படியாக, தமிழர்களின் மொழி, வரலாறு, நினைவிடங்கள், கல்வி ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதன் மூலம் தமிழர்கள் தங்கள் சுய அடையாளத்தை இழக்கவைக்கத் தேவையான திட்டங்களை இலங்கை அரசு கைகொள்கிறது. இதுகுறித்து இலங்கை தமிழ் இளைஞர்கள் குரல் எழுப்பிவிடக்கூடாது என்று இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அதனால, அவர்களை முடக்கும் நடவடிக்கைளையும் கைகொண்டுள்ளனர். எங்கள் இளைஞர்களை கஞ்சா போதைக்கு ஆட்படுத்தும்வகையில், கஞ்சா பொருள்கள் எளிதாகக் கிடைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். திருவிழாவுக்கு வந்த பல தமிழ் இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்தார்கள். அத்தகைய இளைஞர்களைக் கடத்தலுக்கும் பயன்படுத்துகின்றனர்’’ என்றார் கவலையுடன்.

நிரபராதி மீனவர் விடுதலை அமைப்பின் பிரதிநிதியான அருளானந்தம், ‘‘இலங்கைத் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைச் செய்துவரும் இலங்கை அரசு, அதை கச்சதீவிலும் நீட்டிக்கத் தொடங்கியுள்ளது. தமிழர்களின் உரிமைத் தீவான கச்சத்தீவு திருவிழாவுக்குத் திட்டமிட்டுப் பெருமளவு பெளத்த சிங்களர்களை அழைத்துவந்துள்ளது. வரும் காலத்தில் கச்சத்தீவில் புத்தருக்கு கோயில் கட்டி விழாவும் நடத்தத் திட்டமிடலாம். கச்சத்தீவில் உயிர்பிழைக்க ஒதுங்கிய நம் மீனவர்கள்மீது வழக்கு தொடர்ந்ததன் மூலம் கச்சத்தீவு மீன்பிடி உரிமையை இழந்த நாம், இனி வழிபாட்டு உரிமையையும் இழக்கும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதைத் தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

- இரா.மோகன்,
படங்கள்: உ.பாண்டி