Published:Updated:

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!
மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

பிரீமியம் ஸ்டோரி
மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

“எதிர்த்து நிற்கும் உறவினர்களுடன் யுத்தம் புரிந்துதான் ஆக வேண்டுமா என குருஷேத்திரப் போரில் குழம்பி நிற்கிறான் அர்ஜுனன். அப்போது, தர்மத்தின் பெயரால் உபதேசம் செய்கிறார் கிருஷ்ணன். அந்த சாரதி காட்டிய வழியில் யுத்தம் நடக்கிறது; இறுதியில் அர்ஜுனன் ஜெயிக்கிறான் என்கிறது மகாபாரதம். இன்றைக்கு டிஸ்ரப்ஷன் தொழில்நுட்பங்களின் வருகையால் இந்த யுத்தம் எல்லா நிறுவனங் களிலுமே நடந்துவருகிறது’’ என்கிறார் சங்கர் வேணுகோபால். இவர் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் அறிவுசார் மேலாண்மையின் (Innovation and Knowledge Management) துணைத் தலைவர். 

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

சில ஆண்டுகள் முன்புவரைக்கும் தொழில் நிறுவனங்களின் பாதையைத் தீர்மானிப்ப வர்கள் தன் சி.இ.ஓ-கள்தான். ஆனால், அவர்களே தற்போது அர்ஜுனன் போல குழம்பி நிற்கின்றனர். தற்போது புதிய தொழில்நுட்பங்களின் வருகை அந்தப் பணியை சி.டி.ஓ (CTO- Cheif Technology Officer)-களிடம் நகர்த்தியிருக்கிறது. ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், உணவு, கல்வி என எந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களாக இருந்தாலும் இது பொருந்தும். காரணம், டிஸ்ரப்ஷன்.

ஐந்து ஆண்டுகள் முன்புவரைக்கும் சென்னை யில் ஒருவர் உணவகம் தொடங்குகிறார் என்றால், அவருடைய வாடிக்கையாளர்கள் யார், நேரில் உணவகத்திற்கு வந்து அங்குவந்து சாப்பிட்டுச் செல்பவர்கள் அல்லது பார்சல் வாங்குபவர்கள் மட்டும்தான். ஆனால், இந்த வரையறையை மொத்தமாக உடைத்தெறிந்திருக்கின்றன உணவு டெலிவரி ஆப்கள். கொஞ்சம் தரமாக இருந்தாலே போதும்; ஒருநாளைக்கு குறைந்தது 100 ஆர்டர் களாவது அந்த உணவகத்திற்குக் குவிந்துவிடும். நேரில் வந்து உண்பவர்கள் போலவே, இன்றைக்கு ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே, இப்போது உணவகம் ஆரம்பிக்கும் நபர் நிச்சயம் இந்த ஆப்களையும் மனதில் வைத்துத்தான் தொழில் நடத்தவேண்டும். இதற்கு முன்பே பல ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்தாலும், இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். இல்லை எனில், இரண்டு விஷயம் நடக்கும். ஒன்று, அந்த ஆப்கள் மூலம் நம்முடைய கடைகளுக்கு வரும் புதிய வாடிக்கையாளர்களை, வருமானத்தை இழப்பது; இரண்டாவது, நம்முடைய வாடிக்கையாளர்களை அந்த ஆப்களில் இருக்கும் மற்ற கடை களிடம் இழப்பது. இரண்டுமே ஒரு வளரும் உணவகத்திற்கு நல்லதல்ல. எனவே, இந்த மாற்றத்திற்கு இப்போதைய உணவகங்கள் மாறித்தான் ஆகவேண்டும். ஏனெனில், வாடிக்கையாளர்கள் எப்போதோ மாறிவிட்டார்கள்.

மாற வேண்டிய தருணம்

இன்றைக்குச் சின்ன உணவகம்  தொடங்கி, முதல் பல பில்லியன் டாலர் ஆட்டோ மொபைல் நிறுவனம் வரை அனைத்துத் தொழில்களுக்குமே  டிஸ்ரப்ஷனுக்கு உள்ளாகியிருக்கிறது. இதுநாள் வரைக்கும் கடைப்பிடித்துவந்த பிசினஸ் மாடல், பிசினஸ் பிளாட்ஃபார்ம், பொருள்கள் என அனைத்தையும் மாற்றவேண்டும். இது நேற்றைக்கு ஆரம்பித்த ஒரு ஸ்டார்ட்அப்பிற்கு எளிது. ஆனால், பல தலைமுறைகளாக இயங்கிவரும் கார்ப்பரேட்களுக்கு மிகக் கடினம். 

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

இந்த இடத்தில்தான் அந்த நிறுவனங்களின் சி.இ.ஓ-களுக்கு சில கேள்விகள் எழுகின்றன. ஒரு நிறுவனத்தின் அடுத்தகட்ட சேவைகள், பொருள்கள் இனி எப்படி இருக்கவேண்டும், புதிய தொழில் நுட்பங்களுக்கேற்ப பணியாளர்களைத் தயார்படுத்துவது எப்படி, போட்டியாளர்கள் எது மாதிரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்து கிறார்கள், போட்டியைச் சமாளித்து தாக்குப்பிடிக்க வேண்டுமெனில், எதுமாதிரியான தொழில் நுட்பங்கள் நமக்கு வேண்டும், இவை அனைத்திற்கும் பதிலாக அமைந்து, நிறுவனத்தைச் சரியான வழியில் செலுத்துவதுதான் சாரதிகளான சி.டி.ஓ-களின் வேலை.

இந்த டிஸ்ரப்ஷன் அலையை எதிர்கொள்ள நம்மூர் நிறுவனங்கள் தயாராகிவிட்டனவா, இங்கிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் டிஸ்ரப்ஷனை எப்படிக் கையாள்கின்றன, இன்னும் இதை எதிர்கொள்ள நம்முன் என்னென்ன சவால்கள் எல்லாம் இருக்கின்றன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும்படி அமைந்திருந் தது சி.ஐ.ஐ கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பிரிவு அண்மையில் நடத்திய சி.இ.ஓ-கள் மாநாடு. பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சி.டி.ஓ-கள் இதில் கலந்துகொண்டு சென்னை தொழில்முனைவோர்களிடம் தங்கள் அனுபவங்களையும், எதிர்கால டிஸ்ரப்ஷன் தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

ஆட்டோமொபைல் துறையில்...

ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டிஸ்ரப்ஷன் எந்தளவு நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசினார் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் சங்கர் வேணுகோபால். “இன்ஜின்களும் அதன் உதிரிப்பாகங்களையும் கொண்ட வழக்கமான பேனட்கள் தான் நம்முடைய கார்களில் இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய சமீபத்திய மாடலில் அதன் தோற்றத்தையே மொத்தமாக மாற்றிவிட்டது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, அது ஒரு டிஸ்ரப்ஷன்தான். இதேபோல, ஒவ்வொரு துறையிலும் டிஸ்ரப்ஷன் பல்வேறு வகைகளில் நடந்துவருகிறது. இதை எதிர்கொள்ள வேண்டுமெனில், இந்திய நிறுவனங்களின் சி.டி.ஓ-கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் தங்களுடைய அணுகுமுறைகளை அதற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார். 

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

உண்மையில் இந்த டிஸ்ரப்ஷன் என்பது நிறுவனங்கள் அஞ்சி, ஒதுங்கி நிற்கவேண்டிய விஷயம் அல்ல. மாறாக, விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். காரணம், டிஸ்ரப்ஷன் நிறுவனத்தை முற்றிலுமாக மாற்றியமைப்பது மட்டுமன்றி, நிறைய புதிய வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதுகுறித்துக் கூடுதலாக விளக்கினார் ஃப்ரோஸ்ட் அண்டு சல்லிவன் நிறுவனத்தின் தானியங்கிப் பிரிவின் துணைத் தலைவர் கௌஷிக் மாதவன்.

“இன்றைக்கு கார் நிறுவனங்கள் தங்களுடைய ஆட்டோமொபைல் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. அதைத் தாண்டியும் வாடிக்கையாளர்களை ஈர்க்கமுடியுமா எனச் சிந்திக்கின்றன. உதாரண மாக, கார்களில் இன்றைக்கு நிறைய ஹெல்த்கேர் தொழில் நுட்பங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஹெல்த்கேர் நிறுவனங்கள் ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன்  கைகோத்தி ருக்கின்றன.

இதற்குமுன் ஒரு கார் வாங்கினால், அதிலிருக்கும் அத்தனை வசதி களுக்கும் சேர்த்துத்தான் பணம் தருவோம். ஆனால், தற்போது டெஸ்லா கார்களில் அனைத்துமே மென்பொருள் அடிப்படையிலான சேவை என்பதால், நமக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அடிப்படை விலைக்கு கார் வாங்கி விட்டு, நாளைக்கே வேண்டு மானாலும்கூட காரை அப்டேட் செய்துவிட முடியும். இதெல்லாம் டிஸ்ரப்ஷனைச் சமாளிக்க வந்த வசதிகள். இதேபோல, மஹிந்திரா நிறுவனத்தின் வாடகை கார் சேவை, ஓட்டுநர் இல்லா டிராக்டர் போன்ற அனைத்துமே டிஸ்ரப்ஷனின் வெவ்வேறு வடிவங்களே” என்றார்.

தயாராவது அவசியம்

‘‘இன்றைய நிறுவனங்கள் போட்டியில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், இரண்டே வழிகள்தான். ஒன்று, முன்கூட்டியே கணித்து டிஸ்ரப்ஷனுக்குத் தயாராக வேண்டும். அல்லது எதிர்காலத்தில் வலுக்கட்டாயமாகத் தயாராக வேண்டும். இல்லையெனில், தப்பிப் பிழைப்பது கடினமே’’ எனப் பேசிய காக்னிசன்ட் நிறுவனத் தின் ஓய்வுபெற்ற துணைத் தலைவர் லக்ஷ்மி நாராயணன், அதற்கு ஓர் உதாரணத்தைச் சொன்னார்.

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

“அமெரிக்காவின் கார் விற்பனை, ரைடு ஷேரிங் பிளாட் ஃபார்ம்களால் குறைந்திருக்கிறது என ஒரு அறிக்கை அண்மையில் வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக கார் விற்பனை குறைந்துவருகிறது. இதற்கும் அதுதான் காரணமா என்பது இனிதான் கண்டறியப் பட வேண்டும். அது உண்மை எனும்பட்சத்தில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் இந்த டிஸ்ரப்ஷனுக்கேற்ப எப்படித் தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பது மிக முக்கியம்.

சில ஆண்டுகள் முன்வரைக் கும் சினிமா பாடல்களை டவுன்லோடு செய்துதான் மக்கள் கேட்டார்கள். காரணம், அவர்களிடம் டவுன்லோடு செய்ய டேட்டா இருந்தது. ஆனால், அவற்றை ஸ்ட்ரீம் செய்ய சரியான நிறுவனங்கள் இல்லை. இதனால் இசை நிறுவனங்களும் தங்களுக்கு வரவேண்டிய காப்புரிமைத் தொகையை இழந்து கொண்டி ருந்தன. ஆனால், தற்போது மியூசிக் ஸ்ட்ரீமிங் ஆப்கள் இந்தப் பிரச்னைகளை யெல்லாம் தீர்த்துவிட்டன. அவர்களின் ஒரு  ஆப்பினால்   வாடிக்கையாளர் களின் இசை கேட்கும் அனுபவம் கூடியிருக்கிறது.

நிறுவனங்களுக்குச் சரியாக காப்புரிமை பணம் சென்று சேர்கிறது, பாடல்கள் சட்டப் பூர்வமாகப் பாதுகாக்கப்படுகின்றன என நிறைய நன்மைகள் நடந்துள்ளன. டிஸ்ரப்ஷன் இப்படித்தான். நம்மை மாற்றுவதுடன் மட்டுமன்றி, நமக்கான புதிய கதவுகளையும் அவை திறந்துவிடும்.

இப்போது இந்தியாவில் டிஸ்ரப்ஷன் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் டேட்டா முக்கியப் பங்கு வகிக்கிறது. மக்களின் டேட்டாவை நாம் சேகரிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஒரே வழி, டேட்டாவைப் பாதுகாப்பாகக் கையாள்வது மட்டுமே.

பாதுகாப்பற்ற வழிகளில் டேட்டாவைக் கையாள்வது எந்தளவுக்கு ஆபத்தோ, அதே அளவுக்கு ஆபத்து டேட்டாவைச் சேகரிக்காமலே விடுவது. காரணம், அவை எதிர்காலத்தில் நமக்கு நிறைய விதங்களில் பயன்பட விருக்கின்றன” என்றார்.

வேலை பறிபோகுமா?

செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் உள்ளிட்ட எந்தவொரு டிஸ்ரப்ஷன் தொழில்நுட்பங்கள் பற்றி பேசினாலும் உடனே பலருக்கும் எழும் சந்தேகம் இவை அனைத்தும் நம்முடைய தற்போதைய வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடுமா என்பதுதான். 

மாறும் தொழில்நுட்பம்... தயாராகும் உத்திகள்!

ஆனால், டிஸ்ரப்ஷன்  நிறுவனங்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை எப்படித் தருகிறதோ, அதேபோல பணி யாளர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க விருக்கிறது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய துறைகளில் எதிர்காலத்தில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றனர் மாநாட்டில் பேசிய நிபுணர்கள்.

இதற்கடுத்து டிஸ்ரப்ஷன் மாற்றங்களால் நிறுவனங்களின் முதலீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசினார் எல் அண்டு டி நிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவர் பொன் மணிவண்ணன்.

ஆராய்ச்சித் துறையில்...

“ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் டிஸ்ரப்ஷனால் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவில் பயன்பெற்றுள்ளன. மேலும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் செயல்முறைகளிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இன்றைக்குப் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சிமுலேஷன் லேப்கள் (simulation lab) முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏதேனும் ஒரே ஒரு பொருளுக்காக வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளது. நம்முடைய அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் அதற்கு ஏற்றார் போல இருப்பதும் இதற்கு ஒரு காரணம்” என்றார்.

வெளிநாட்டின் ஐ.டி தேவை களுக்கான அவுட்சோர்ஸிங் மையமாக தற்போது இந்தியா இருப்பதுபோல, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான அவுட்சோர்ஸிங் தளமாகவும் இந்தியா வளர்ந்து வருகிறது.

குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப் படும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டும் இங்கு நிறைய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கான்ட்ராக்ட் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் (R&D) பற்றி பேசினார் பவர்கியர் நிறுவனத்தின் தலைவர் கனகசபாபதி சுப்ரமணியன்.

“இந்தியர்கள் ஐ.டி பணிகளில் மட்டுமல்ல, ஆராய்ச்சியிலும் தற்போது சிறந்து விளங்கு கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் போயிங் நிறுவனத்திற்கான ஆராய்ச்சியை இங்கே சென்னையில் இருந்துகொண்டு நாங்கள் செய்கிறோம். இது நம்மால் முடியும் என்பதற்கான சான்று மட்டுமல்ல, உலகின் முன்னணி நிறுவனங்களே எந்த அளவுக்கு இந்திய விஞ்ஞானி களை நம்புகின்றன என்பதற்கான சான்றும்கூட.

பிற நிறுவனங்கள் டிஸ்ரப்ஷ னால் எப்படி மாறு கின்றனவோ, அதேபோல ஆராய்ச்சிப் பணிகளும் மாறி வருகின்றன. தற்போது, புதிய தொழில் நுட்பங்களுக்காக மெக்கானிக்கல் இன்ஜினீயர்கள் தற்போது ஏ.ஐ இன்ஜினீயருடன் இணைந்து பணிபுரிய வேண்டி யிருக்கிறது. அப்போதுதான் ஆராய்ச்சியின் திறன் பல மடங்கு உயரும். இந்தியாவில் ஏற்கெனவே போதுமான அளவுக்கு ஆராய்ச்சிப் பணிகளுக்கான உள் கட்டமைப்பு மற்றும் சூழல் இருக்கிறது. அதை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

திறன் மேம்பாடு


டிஸ்ரப்ஷனுக்கேற்ப நிறுவனங்கள் தயாரானால் போதுமா, நம் மாணவர்கள் தயாராக வேண்டாமா, அவர்களுடைய திறன்கள் மேம்பட வேண்டமா? அதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் நிறைய விவாதிக்கப்பட்டது. கல்லூரிப் பாடங்களைத் தாண்டி, தலைமைப் பண்பு, புத்தாக்கச் சிந்தனை, சமூக ஒன்றிணைவு போன்ற புதிய திறன்களையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றனர் நிபுணர்கள்.

இந்தியாவின் திறன்மேம்பாடு மற்றும் டிஸ்ரப்ஷன் குறித்து பேசிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ராமச்சந்திரன் சுந்தரராஜன், “ஐபோன்கள் எதற்காக சீனாவில் தயாரிக்கப்படு கின்றன எனக் கேட்டால் பலரும் என்ன சொல்வோம்? அங்குதான் குறைவான சம்பளத்தில் ஊழியர்கள் கிடைக்கிறார்கள். அதனால் உற்பத்திச் செலவு குறைவு என்போம். ஆனால், டிம் குக் என்ன சொன்னார் தெரியுமா? சீனாவின் திறன்தான் அதற்குக் காரணம் என்றார்.

ஆம், சீனாவில்தான் குறைவான செலவில் பணியாளரும் கிடைக்கிறார். ஆப்பிள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிநவீன உற்பத்தித் தொழில்நுட்பமும் கிடைக்கிறது. இதுதான் ஆப்பிள் நிறுவனம் சீனாவையே தொடர்ந்து சார்ந்திருக்க வைக்கிறது. இதேபோல, இங்கும் பணியாளர்கள் புதிய திறன்கள் குறித்துப் பயிற்சி பெறவேண்டும்.

ஒருவர் புதிய விஷயம் ஒன்றில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்றால், முதலில் அதுகுறித்து தெரிந்துகொள்ளவேண்டும். பின்னர் அதுகுறித்து கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்து, பயிற்சி பெறவேண்டும். ஆனால், இங்கே நம் நாட்டில் புதிய திறன்கள் குறித்து தெரிந்துகொள்ளாமலேயே பலரும் நின்றுவிடுகிறோம்.

எனவே, தற்போதைய பணியாளர்களை எதிர்காலத் திறன்களுக்கேற்ப தயார்படுத்த வேண்டியது அவசியம். டிஸ்ரப்ஷனில் பல மாற்றங்கள் புதிய கண்டுபிடிப்புகளால்தான் நிகழ்கின்றன. அந்தக் கண்டுபிடிப்புகள் வெறும் ஐடியாவாக மட்டுமே இருந்தால் அது வெற்றி பெறாது. அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு இந்தத் திறன்கள் அவசியம்” எனக் குறிப்பிட்டார்.

இப்படி வருமானம், ஆராய்ச்சி, மனிதவள மேலாண்மை என எல்லாப் பகுதிகளிலுமே டிஸ்ரப்ஷனின் தாக்கம் இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்னது இந்த மாநாடு.

ஞா.சுதாகர் - படங்கள்: வீ.நாகமணி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு