தமிழ்நாட்டின் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணிதான். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்திற்கு மேல் உள்ள பொதிகை மலையில் உருவாகிப் பல சிற்றாறுகளுடன் இணைந்து திருநெல்வேலிக்கு வருகிறது. அங்கிருந்து கிழக்கே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் ஆகிய ஊர்களின் வழியாக 130 கி.மீ வரை பயணித்து புன்னாக்காயல் என்னுமிடத்தில் கடலில் கலக்கிறது இந்நதி.
‘தென்பாண்டி நாட்டின் செல்வி’, ‘பொதிகையின் குழந்தை’, பொன்நிறத்துப் புனல் பெருகும் பொருநை’, ’பாணதீர்த்தம்’ எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது தாமிரபரணி. இந்நதியில் 8 நீர்த்தேக்கங்களும் அவற்றில் 11 கால்வாய்களும் இருக்கின்றன. மலையில் 7 துணை ஆறுகளும், சமவெளியில் 5 துணை ஆறுகளும் என மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தாமிரபரணி நதியால் திருநெல்வேலி மாவட்டத்தில் 40,000 ஏக்கரும் தூத்துக்குடியில் 46,107 ஏக்கரும் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தாமிரபரணி மகாமத்யத்தின்படி வைகாசி விசாகத்தன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்கள் மக்கள். மகாமுனி அகத்தியர், இந்நாளில்தான் தாமிரபரணி நதியை உருவாக்கினார் என்பது ஐதீகம். இதே வைகாசி விசாகத்தன்று குபேரன் இந்த ஆற்றில் மூழ்கிதான் குபேரப்பேறு பெற்றான் எனப் புராணங்கள் கூறுகின்றன.
வைகாசி விசாக நாளில், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் ‘தாமிரபரணி நல இயக்கம்’ சார்பில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நதிக்கரையில் குடத்தில் தாமிரபரணி நீர் நிரப்பி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், நதியில் பூக்களைத் தூவியும், மஞ்சள் பொடி, பால் ஊற்றியும் வணங்கினார்கள். பிறகு தாமிரபரணி நதியைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், “வடமொழி நூலான தாமிரபரணி மகாமத்யம் கூறியபடி, கடந்த 16 ஆண்டுகளாக வைகாசி விசாகம் அன்று பிறந்தநாள் விழா நடத்தி வருகிறோம். இது வழிபாட்டு விழா, பிறந்தநாள் விழா எனச் சொல்வதைவிட விழிப்பு உணர்வு விழா என்றுதான் சொல்ல வேண்டும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழுமையாகவும், விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் தாகம் தீர்த்து வருகிறது இந்நதி. ஆனால், கடந்த சில வருடங்களாக மணல் கொள்ளையால் தன் பெருமை இழந்துள்ளது. இந்நதியில் சாக்கடைக் கழிவுநீர் கலப்பதைத் தடை செய்வதோடு பலபகுதிகளில் இந்நதியை ஆக்கிரமித்திருக்கும் அமலைச் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- இ.கார்த்திகேயன்