Published:Updated:

திருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி

திருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி
திருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் திருமணத்தை மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் நடத்தி வைத்தார். மாவட்ட எஸ்.பி-யின் மனிதாபிமானத்தால் காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர், அசோகன்.  அவர் கடந்த ஏப்ரல் மாதம், பணியில் இருந்தபோது நான்கு வழிச்சாலையில் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பணியில் நேர்மையாகவும் திறமையுடனும் செயல்படும் அசோகனின் மரணம் பற்றி அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார் நேரில் சென்று அவரின் மனைவி மற்றும் மகளிடம் துக்கம் விசாரித்தார். 

அப்போது அசோகனின் மனைவி, மாவட்ட எஸ்.பி-யிடம், ``எங்களுடைய ஒரே மகளான அன்பரசியின் திருமணம் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது என் கணவரின் ஆசை. ஆனால், அவர் மரணம் அடைந்துவிட்டதால் என்னால் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை இல்லை’’ எனக் கதறினார். 

அப்போது அவருக்குச் சமாதானம் சொன்ன அருண்சக்தி குமார், ‘உங்கள் கணவர் இருந்திருந்தால் எப்படி மகளின் திருமணத்தை நடத்தி வைப்பாரோ அதேபோல திருமணம் நடக்கும். நானே என் மகளின் திருமணத்தைப்போல அன்பரசியின் திருமணத்தை நடத்தி வைப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்’ என உறுதியளித்தார். 

திருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி

திட்டமிட்டபடி ஜூன் 14-ம் தேதி அன்பரசிக்கும் மகேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமண நாளில் நேரில் சென்ற எஸ்.பி அருண்சக்தி குமார், தானே முன்னின்று மணமகன் மகேஷின் கைகளில் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து மங்கல மணவிழாவைச் சிறப்புடன் நடத்தி வைத்ததுடன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மாவட்ட காவல்துறையினர் அனைவரும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காவல்துறை கண்காணிப்பாளரின் மனிதநேயச் செயலை மணமக்களின் உறவினர்கள் மற்றும் அசோகனுடன் பணியாற்றிய காவலர்கள் பாராட்டினார்கள். இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் தமிழக காவல்துறையின் அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது வைரலாகப் பரவி வருவதுடன் காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Vikatan