Published:Updated:

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கில், 2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரியும், மத்திய அரசின் தடையை அமல் படுத்தக்கோரியும் விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பான மனுவில், 'மாநில கால்நடைத்துறை செயலாளரின் அனுமதியின் பேரில், ஜல்லிக்கட்டு நடத்த திருச்சி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் உத்தரவை மீறுவது மட்டுமின்றி, மாடுகளை கொடுமைப்படுத்தும் செயல். அத்துடன், மனித உயிர் இழப்புகளுக்கும் இது வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் விலங்குகள் நலவாரியத்தின் இந்த மனு மீது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் செல்லப்பா பாண்டி கூறினார்.

ஜல்லிகட்டை தடை செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

பின்னர், 2009–ம் ஆண்டு இயற்றப்பட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டத்துக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதா என்று தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், எந்த அடிப்படையில் காட்சிப் பொருளாக பயன்படுத்த தடைசெய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் கொண்டு வரப்பட்டன் என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.