Published:Updated:

`ஆயிரம்கால் மண்டபத்தில் நடந்த விதிமீறல்!' - சர்ச்சைக்குள்ளான தொழிலதிபர்களின் இல்லத் திருமணம்

ஜி.சதாசிவம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு வெகுவிமரிசையாக சிவகாசி பட்டாசுத் தொழிலதிபர் இல்லத் திருமணம் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரம்கால் மண்டபம்
ஆயிரம்கால் மண்டபம்

சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்திபெற்றது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும், பூலோகக் கைலாசம் என்றும் கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்ற பஞ்சபூத தலங்களில் இக்கோயில் ஒன்றாகும்.

ஆயிரம்கால் மண்டபம் வாயில்
ஆயிரம்கால் மண்டபம் வாயில்

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் `ராஜ சபை' என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம், உற்சவத்தின் போது நடராஜர் எழுந்தருளும் மகா அபிஷேகம், சொர்ண அபிஷேகம், லட்சார்ச்சனை ஆகியவை நடைபெறும். ஆபரண அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பார்.

இக்கோயிலில் வழக்கமாக வடக்குக் கோபுரம் அருகில் உள்ள பாண்டியநாதர் சந்நிதியில்தான் திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆயிரங்கால் மண்டபத்தின் ராஜ சபை புனிதமான இடம் என்பதால், ஆன்மிக நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது இல்லை. இங்கு இதுவரை திருமணமும் நடந்தது இல்லை.

ஆயிரம்கால் மண்டபம்
ஆயிரம்கால் மண்டபம்

இந்நிலையில் நேற்று சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு தொழிலதிபர்களின் இல்லத் திருமண விழா ஆயிரம்கால் மண்டபத்தில் நடந்தது. இதற்காக ஆயிரம்கால் மண்டபத்தை மின் விளக்குகள், மலர்த் தோரணங்கள், வண்ண சீலைகள் ஆகியவற்றால் பிரமாண்டமாக அலங்கரித்திருந்தனர். இப்பகுதிக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமண பேட்ஜ் அணிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Vikatan

புனித இடமான ஆயிரம்கால் மண்டபத்தில் இதுவரை எந்தத் திருமண விழாவும் நடைபெறாத நிலையில் தற்போது திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது, சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடராஜர் கோயில்
நடராஜர் கோயில்

இதுகுறித்து நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் பாலகணேச தீட்சிதரிடம் பேசியபோது, `` தனிப்பட்ட முறையில் கருத்து கூற விரும்பவில்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.

திருமண ஏற்பாடுகளை செய்த பட்டு தீட்சிதரிடம் பேசினோம். `` நடராஜர் சபை முன்புதான் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது, ஆனால் கோயில் வளாகத்தில் உள்ள சிறிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்ததால் நாட்டிய நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆயிரம்கால் மண்டப மேடையில் திருமணம் நடத்தப்பட்டது. நாட்டிய நிகழ்ச்சிக்காகத்தான் ஆயிரம்கால் மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் அங்கு நடத்தப்பட்டது. இனி வேறு யாரையும் அங்கே அனுமதிக்க முடியாது. கீழ்ப்பகுதியில் கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது" என்றார்.

புனிதமான ராஜசபையில் திருமணம் நடத்த அனுமதியளித்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.