பிரீமியம் ஸ்டோரி

நிகழ்வு

தொழில் துறை வட்டாரத்தில் ஆர்.ஜி எனச் சுருக்கமாக அழைக்கப்படுபவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த ஆர்.கோபாலகிருஷ்ணன். தஞ்சையில் பிறந்த இவர், இந்தியாவின் முக்கியமான பல நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். இவர் எழுதிய ஒன்பதாவது புத்தகமான ‘Doodle on Leadership’ என்னும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (MMA) அரங்கில் நடந்தது. டாடா குழுமத்தில் கிடைத்த அனுபவம் மட்டுமல்லாமல், வெளியில் கிடைத்த அனுபவங்களையும் தொகுத்து, புத்தகமாக எழுதியிருக்கிறார். ஆர்.ஜி நிர்வாகம் மட்டுமல்லாமல், தேசியநலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

“இளைஞர்களுக்கு விவசாயத்தைக் கற்றுத்தர வேண்டும்!”

இந்தப் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் ஆர்.கோபாலகிருஷ்ணனிடம் கலந்துரையாடினார் பிசினஸ் லைன் நாளிதழின் அசோசியேட் எடிட்டர் ரகுவீர் ஸ்ரீனிவாசன். இந்தக் கலந்துரையாடலில் ஆர்.ஜி சொன்ன விஷயங்கள் இனி...

‘‘1905-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பேசும்போது, ‘அமெரிக்காவில் இனி வளர்ச்சி இருக்காது’ என எதிர்மறையாகப் பேசினார். அவர் பேசுவதைக் கேட்ட அப்போதைய அமெரிக்கர் கள் ஏதாவது தவறான முடிவெடுத்திருந்தால், தற்போதைய அமெரிக்காவின் சாதகமான அம்சங்கள் அமெரிக்காவுக்குக் கிடைத்திருக்காது.

கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு நிலைதான் தற்போதும் இருக்கிறது. தற்போதுவரும் அனைத்துச் செய்திகளும் மோசமாக இருந்தாலும்கூட அனைத்து நாடுகளும் இதுபோன்ற நிலையைக் கடந்துதான் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.

“இளைஞர்களுக்கு விவசாயத்தைக் கற்றுத்தர வேண்டும்!”

இந்தியாவில் நிறுவனர் என்னும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது தேவை யற்றது. பெரும்பான்மைப் பங்குதாரர், சிறுபான்மைப் பங்குதாரர், ஓட்டுரிமை உள்ளவர், ஓட்டுரிமை இல்லாதவர் என்றுதான் பிரிக்க வேண்டும். நிறுவனத்தின் தொடர்பான முடிவு என்பது இயக்குநர் குழுதான் எடுக்க வேண்டுமே தவிர, தனிநபர் எடுக்கக் கூடாது.

நிறுவனத்தின் உயரதிகாரிகள் எதிர்பார்த்தபடி நடந்துகொள்ள வில்லையெனில், அவரை நீக்கிவிடும் தவறும் நடந்திருக்கிறது. உதாரணமாக, ஃபோர்ட் சகோதரர்கள், லீ ஐயகோகாவை நிறுவனத்திலிருந்து நீக்கினார்கள். தற்போது அமெரிக்காவில் வேறு மாதிரியான சூழல் இருக்கிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக இயக்குநர் குழு நினைத்தால் வெளியேற்றிவிடுகிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள்), டிராவிஸ் கலாநிக் (ஊபர்) உள்ளிட்ட நிறுவனர்களையே இயக்குநர் குழு நீக்கியிருக்கிறது. இந்தியாவில் இதுபோல தற்போது நடக்கத் தொடங்கியிருந்தாலும், இயக்குநர் குழுதான் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

“இளைஞர்களுக்கு விவசாயத்தைக் கற்றுத்தர வேண்டும்!”

ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சரியில்லை என்றால், புதிய தலைமைச் செயலதிகாரியை நியமனம் செய்வார்கள். ஆனால், பழைய தலைமைச் செயலதிகாரி செய்த தவறுகளைப் புதியவர் வெளியே சொல்வது நாகரிகமாக இருக்காது. உதாரணத்துக்கு, டைட்டன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை பாஸ்கர் பட் ஏற்றவுடன் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்குகளைச் சரிசெய்யும் பணியை முதலில் மேற்கொண்டார். ஆனால், இவ்வளவு தவறுகள் நடந்திருக்கின்றன என்று அவர் எதையும் வெளியே சொல்லவில்லை.

அதேபோல, அவருக்குமுன் பொறுப்பில் இருந்தவரும் முழுமையாக வெளியேறிவிட்டார். அதாவது, ஒருவர் வெளியேறுவதாக இருந்தால், முழுமையாக வெளியேற வேண்டும். அப்போது தான் புதிதாக வருபவர் துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும். கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் தேசிய விவசாயக் கொள்கை என எதுவும் இல்லை. விவசாயம் என்பது மாநிலப் பிரிவு என்பதால், மத்திய விவசாய அமைச்சருக்குப் பெரிய பங்கு இல்லை. அதனால் விவசாயத்துறை அமைச்சர் பதவி என்பது தண்டனைக்குரிய பதவியாக மாறிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் பத்து கோடிக்கும் மேலான விவசாயிகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை நாம் பயிற்றுவிக்க வில்லை. ஐ.டி.ஐ பிரிவில் விவசாயத்துக்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் நாம் கற்றுத் தரவேண்டும். இதைப் பிரதமர் அலுவலகத்துக்குப் பரிந்துரை செய்திருக்கிறேன்’’ எனக் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் முக்கியமான கேள்வியைக் கேட்டார் ரகுவீர் ஸ்ரீனிவாசன். ‘‘டாடா சன்ஸில் இருந்து நீங்கள் விலகி ஐந்தாண்டுகள் ஆகிறது. எப்போதாவது மீண்டும் நிறுவனத்துக்குள் சென்று உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என நினைத்திருக் கிறீர்களா’’ என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.

‘‘ஆமாம். ஆனால், அப்படித் தலையிடுவது நன்றாக இருக்காது. உதாரணத்துக்கு என்னுடைய மகன், அவனுடைய மகனுடன் விவாதித்துக் கொண்டிருக்கும்போது நான் இடையில் பேசுவது எப்படியோ அப்படித்தான் இதுவும். நிறுவனத்துக்குச் செல்லவேண்டும் என்னும் ஆவல் இருந்தாலும், திறமையான நபர்கள் இருக்கிறார்கள்’’ என சாதுரியமாகப் பதில் சொல்லி முடித்தார் ஆர்.ஜி. நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் லீடர்ஷிப் பற்றித் தெரிந்துகொள்ள நினைத்தால், ‘Doodle on Leadership’ புத்தகத்தைக் கட்டாயம் படிக்கலாம்!

பெரிய அளவில் சீர்திருத்தங்கள் வேண்டும்!

‘Doodle on Leadership’ புத்தகத்தை வெளியிடுவதற்கு சென்னை வந்திருந்த ஆர்.கோபாலகிருஷ்ணன் நம்முடன் சிறிது நேரம் பேசினார். அவர் பேசியதன் சுருக்கம் இனி...

“இளைஞர்களுக்கு விவசாயத்தைக் கற்றுத்தர வேண்டும்!”

‘‘நமது பொருளாதார வளர்ச்சியின் வேகம் கொஞ்சம் குறைந்திருக்கும். நெகட்டிவ் நிலைக்குச் சென்றுவிடவில்லை. ஆனால், இறக்கம் இன்னும் தொடரலாம் என்பதால், அதைப் பற்றி நாம் கவலைப்படத் தான் வேண்டும்.

ஒரு இயந்திரம் கோளாறு ஆகிவிட்டது என்றால், எங்கே பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்க முழுவதுமாக ஆராய வேண்டியிருக்கும். சில பகுதிகளை மாற்றவேண்டியிருக்கும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாகவே பொருளாதாரம் குறித்த முழுமையான அணுகுமுறை நம்மிடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை நம்மால் கொண்டுவர முடியவில்லை. திறமையானவர்கள் இருந்தும் அது நடக்கவில்லை. அவ்வப் போது சில சலுகைகள் அறிவித்து, நிலைமையைச் சரிசெய்யப் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் ஆராய்ந்து வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை அறிவிக்க வேண்டும். நிதி அமைச்சர் இப்போது பல அறிவிப்புகளை வெளியிடுகிறார். ஏற்கெனவே அறிவித்த சில விஷயங்களை இப்போது மாற்றிச் சொல்கிறார். இது சீர்திருத்தமல்ல.

குறிப்பாக, நிதித் துறையிலும் விவசாயத் துறையிலும் நாம் பல சீர்திருத்தங்களைச் செய்தாலே நம் பொருளாதாரம் லாபம் காணத் தொடங்கிவிடும். குறிப்பாக, விவசாயத் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், விவசாயமானது துரதிருஷ்ட வசமாக மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றில் எப்படி சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியும்? எனவே, மத்திய மாநில அரசாங்கங் களுக்கு இடையேயான உறவு சிறப்பான முறையில் இருக்க வேண்டும். ஆனால், இப்போதைய நிலையில், மத்தியில் இருப்பவர்கள் சொல்வதையே மாநிலங்களில் இருப்பவர்கள் கேட்பதில்லை.

தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுணக்கத்தைப் பார்த்து தொழில் செய்பவர்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. பிரச்னைகள் என்பது எப்போதும் வந்துபோகத்தான் செய்யும். இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சுணக்கத்துக்கு உலக அளவிலான காரணங்களும் உண்டு. என்றாலும், நம் நாட்டு மக்களிடம் நான் பார்க்கும் பாசிட்டிவ்வான விஷயங்கள், எப்படிப்பட்ட பிரச்னை என்றாலும் அதற்குத் தீர்வு கண்டுபிடிப்பதுதான். உலக அளவில் நம்மவர்கள் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் நன்கு உழைப்பவர்கள் இங்கு உழைக்க மாட்டேன் என்கிறார்கள். காரணம், அங்கு நல்லதொரு சூழல் இருக்கிறது. அந்தச் சூழல் ஓர் ஒழுங்கையும் கொண்டு வந்துவிடுகிறது. இங்கு சூழலும் இல்லை. ஒழுங்கும் இல்லை.

ஐ.எல் & எஃப்.எஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் ஏன் முறைகேடு நடக்கிறது என்பது குறித்து நாம் ஆழமாக ஆராய வேண்டும். பிசினஸில் மட்டுமே முறைகேடு நடக்கவில்லை. எல்லாத் துறைகளிலும் நடக்கவே செய்கிறது. இதனுடைய ரிஷிமூலம் அரசியல்தான்.’’

- ஏ.ஆர்.குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு