Published:Updated:

"நாங்களும் தமிழர்களா மாறிட்டோம்!"- பாரம்பர்ய உடை அணிந்து பொங்கல் வைத்து அசத்திய வெளிநாட்டினர்

பொங்கல் வைத்து அசத்திய வெளிநாட்டினர்

“தமிழ்நாடு கலாசாரப் பாரம்பரியம் கொண்ட மாநிலம்னு கேள்விப்பட்டிருக்கோம். இங்க வந்து ஊர் ஊரா சுற்றிப் பார்த்தபோதுதான் எங்களுக்கு அது முழுமையா புரிஞ்சுது!"- லிசா மேட்கர், ஜெர்மனி

"நாங்களும் தமிழர்களா மாறிட்டோம்!"- பாரம்பர்ய உடை அணிந்து பொங்கல் வைத்து அசத்திய வெளிநாட்டினர்

“தமிழ்நாடு கலாசாரப் பாரம்பரியம் கொண்ட மாநிலம்னு கேள்விப்பட்டிருக்கோம். இங்க வந்து ஊர் ஊரா சுற்றிப் பார்த்தபோதுதான் எங்களுக்கு அது முழுமையா புரிஞ்சுது!"- லிசா மேட்கர், ஜெர்மனி

Published:Updated:
பொங்கல் வைத்து அசத்திய வெளிநாட்டினர்
தமிழகத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் 37 பேர், நம் பாரம்பர்ய உடை அணிந்து பொங்கல் கொண்டாடி அசத்தியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம், வெளிநாட்டினர் பங்கேற்கும் 'ஆட்டோ ரிக்‌ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்தை நடத்துகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, எஸ்டோனியா ஆகிய 6 நாடுகளிலிருந்து 8 பெண்கள் உட்பட 37 பேர் பங்கேற்றனர். இவர்கள் 17 ஆட்டோக்களில் சென்னையிலிருந்து கிளம்பி புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக தூத்துக்குடி வந்தனர். எட்டயபுரம் பாரதியார் இல்லம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, கடற்கரை, உப்பளங்கள், தாமிரபரணி ஆறு என பல இடங்களைப் பார்வையிட்டனர்.

மறுநாள் தூத்துக்குடி, சாயர்புரத்திலுள்ள பிரம்மஜோதி என்ற தனியார் தோட்டத்திற்கு வந்தனர். ஆட்டோக்களில் வந்த அவர்களுக்கு பன்னீர் தெளித்து, ரோஜாப்பூ கொடுத்து குழந்தைகள், உள்ளூர் மக்கள் வரவேற்றனர். இளநீர், நுங்கு, மோர், பனங்கிழங்கு, பல ரக வாழைப் பழங்கள், கொய்யா, திராட்சை, மாதுளை, நிலக்கடலை, நெல்லிக்காய் உள்ளிட்ட பானங்களும் பழங்களும் கொடுக்கப்பட்டன. பலரும் அதிகம் ருசி பார்த்தது பனங்கிழங்கையும், நுங்கையும்தான்.

பின்னர் அவர்களுக்கு தமிழர் பாரம்பர்ய உடையான வேட்டை, சேலை வழங்கப்பட்டன. "தமிழ்நாட்டில் ஆண்கள் வேட்டி, சட்டை, துண்டும், பெண்கள் சேலையும் அணிவது வழக்கம். இது எங்களோட பாரம்பர்ய உடை” என்று சொன்னதும், “ஓ... வெரி நைஸ். வி வில் பீ ரெடி வித் இன் டூ மினிட்ஸ் ஃபார் பொங்கல் செலிப்ரேஷன்ஸ்...” என்று கோரஸாக சொல்லிவிட்டுத் தயாரானார்கள். ஆண்களுக்கு உள்ளூர் ஆண்களும், பெண்களுக்கு உள்ளூர் பெண்களும் வேட்டை, சேலை அணிந்து கொள்ள உதவினர். பெண்கள் சேலை கட்டி தமிழ்நாட்டுப் பெண்களாகவே மாறியிருந்தனர்.

அவர்களுக்கு போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், சின்னஞ்சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் மூன்றாவது நாள் வைக்கும் சிறு வீட்டுப் பொங்கல் என சம்பிரதாயங்களை உள்ளூர் சிறுமி ஒருவர் ஆங்கிலத்தில் சொல்ல, அனைவரும் கேட்டு ஆச்சர்யப்பட்டனர்.

பிறகு அவர்கள் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 10 மண் பானைகளில் பொங்கல் வைக்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு பானையின் அருகிலும் பனையோலைப் பெட்டியில் பச்சரிசி, வெல்லம், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டன. எப்படி பொங்கல் வைக்க வேண்டும் என வழிகாட்டி ஒருவர் ஆங்கிலத்தில் சொன்னார். ஒவ்வொரு குழுவினருக்கும் உள்ளூர்ப் பெண் ஒருவர் பொங்கலிட உதவினார். பானையில் பொங்கல் பொங்கியதும் ‘'பொங்கலோ பொங்கல்..” என உள்ளூர்க்காரர்கள் சொல்ல, ஆங்கிலம் கலந்த தமிழில் வெளிநாட்டினரும் கோரஸ் போட்டனர். உள்ளூர்ப் பெண்கள் குலவைச் சத்தமிட, எப்படி குலவை போடுவது எனத் தெரியாமல் சிலர் விழித்தனர்.

ஒரு வழியாக 10 குழுவினரும் பொங்கலிட்டு பானைகளை இறக்கினர். பின்னர், ஒவ்வொரு குழுவினரும் தட்டுகளில் இலை விரித்து அதில் தாங்கள் இட்ட பொங்கலை எடுத்து வைத்து பழங்களால் அலங்காரம் செய்து காட்சிக்கு வைத்தனர். மூன்று நடுவர்கள் அந்தப் பொங்கலை எல்லாம் ருசி பார்த்தனர். சிறப்பாகப் பொங்கல் வைத்த இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் - கெய்லி தம்பதிக்கு முதல் பரிசாக வாழைத்தார் வழங்கப்பட்டது. பின்னர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து அவர்கள் பொங்கலை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

பொங்கல் அனுபவம் குறித்து, ஜெர்மனியைச் சேர்ந்த லிசா மேட்கரிடம் கேட்டோம்.

“தமிழ்நாடு கலாசாரப் பாரம்பரியம் கொண்ட மாநிலம்னு கேள்விப்பட்டிருக்கோம். இங்க வந்து ஊர் ஊரா சுற்றிப் பார்த்தபோதுதான் எங்களுக்கு அது முழுமையா புரிஞ்சுது. கோயில்கள், மன்னர்கள் காலத்துக் கட்டடங்கள், அணைகள்னு எல்லாமே ஆச்சர்யத்தை ஏற்படுத்துச்சு. பாரதியார் பற்றிக் கேள்விப்பட்டிருக்கோம். எட்டயபுரத்துல உள்ள அவரோட பிறந்த இல்லத்துக்குப் போனோம். எளிமையான வீடு. அவர் தமிழ்க் கவிஞர்னாலும் அவரோட ஆங்கில எழுத்துக்களின் ஸ்டைலைப் பார்த்து வியந்தோம்.

நாங்க அதிகமா அரிசி சாப்பிட மாட்டோம். அப்படியே சாப்பிட்டாலும் குக்கர்லதான் சமைப்போம். ஆனா, இங்க மண்பானையில பொங்கல் வைக்கிறது வித்தியாச அனுபவம். ஜெர்மனி போனதும் நானும் எங்க ஃப்ரெண்ட்ஸ், உறவினர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் செஞ்சு கொடுப்பேன். தமிழ்நாட்டுப் பெண்கள் சேலை கட்டி, நெற்றியில குங்குமம், தலையில பூ வச்சிக்கிறது ரொம்ப நல்லாயிருக்கு. இந்த டிரஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. நாங்களும் இப்போ தமிழர்களா மாறிட்டோம்” என்றார்.

பொங்கல் நிகழ்ச்சி முடிவடைந்ததும் தப்பாட்டம், நாதஸ்வர இசை இசைக்கப்பட்டது. அந்த இசையைக் கேட்டு அனைவரும் நடனமாடினார்கள். அதன்பின் கரும்பைச் சுவைத்தபடியே ஆட்டோக்களில் ஏறி திருவனந்தபுரம் கிளம்பினார்கள்.