Published:Updated:

கூகுளின் புது வரவு கேட்ஜெட்ஸ்!

I/O டெவலப்பர் மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
I/O டெவலப்பர் மாநாடு

கேட்ஜெட்ஸ்

கூகுளின் புது வரவு கேட்ஜெட்ஸ்!

கேட்ஜெட்ஸ்

Published:Updated:
I/O டெவலப்பர் மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
I/O டெவலப்பர் மாநாடு
கூகுளின் புது வரவு கேட்ஜெட்ஸ்!
கூகுளின் புது வரவு கேட்ஜெட்ஸ்!

2022-ம் ஆண்டுக்கான I/O டெவலப்பர் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது கூகுள். கலிஃபோர்னியாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வில் புதிய கேட்ஜெட்களை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, மென்பொருள்களின் புதிய அப்டேட்கள் தொடர்பான அறிவிப்புகளையும் கூகுள் நிறுவனம் வெளியிடும். அப்படி இந்த வருடம் சந்தைக்கு வரப்போகும் கூகுளின் புதிய கேட்ஜெட்களைப் பற்றிய தகவல்கள் இங்கே..!

Pixel 7 மற்றும் Pixel 7 Pro

கூகுளின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான Pixel 7 மற்றும் Pixel 7 Pro ஸ்மார்ட்போன்களின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கூகுள், கூடுதலான தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை. பிக்ஸல் 6 சீரிஸ் போன்களுடன் ஒப்பிடுகையில் புதிய 7 சீரிஸ் போனின் வடிவமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் கூகுள் செய்யவில்லை என்றே தெரிகிறது. போனின் பின்பக்க வடிவமைப்பு மற்றும் கேமரா வடிவமைப்பு ஆகியவற்றில் மட்டுமே சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களிலும் கூகுளின் அடுத்த தலைமுறை டென்சார் SoC புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிக்ஸல் போன்களின் சிறப்பம்சமே கேமராதான் என்பதால், அதில் கூடுதல் கவனம் செலுத்திப் பல புதிய விஷயங்களைச் சேர்த்திருக்கிறது கூகுள். Pixel 7, Pixel 7 Pro ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளன.

Pixel Tablet

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு புதிதாக கூகுளிடமிருந்து ஆண்ட்ராய்டு டேப்லெட் ஒன்று சந்தைக்கு வரவிருக்கிறது. குரோம் இயங்குதளத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பிக்ஸல் ஸ்லேட் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆகவே, அதன் தொடர்ச்சியாக வேறு டேப்லெட்களும் வெளியாகவில்லை. மேலும், கடந்த வருடம் அதன் உற்பத்தியையும் கூகுள் நிறுத்தியது. தற்போது மீண்டும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே கையில் எடுத்திருக்கிறது கூகுள். சமீபகாலமாக உலகம் முழுவதும் டேப்லெட் பயன்பாடு கணிசமாக அதிகரித்ததை கூகுள் கவனித்திருக்கும் என்பதால், புதிதாக பிக்ஸல் டேப்லெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளியாகப்போகும் Pixel Tablet அடுத்த வருடம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் புது வரவு கேட்ஜெட்ஸ்!

Pixel Watch

கூகுளின் போட்டியாளர்களான சாம்சங், ஆப்பிள் என இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் முன்னிலையில் இருக்கிறார்கள். ஆனால் கூகுளே ஸ்மார்ட்வாட்ச்சை இத்தனை ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்தது. கடந்த வருடம் ஃபிட்பிட் (Fitbit) என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருந்தது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட். அதன் பின்னர், தற்போது பிக்ஸல் வாட்ச் மூலமாக ஸ்மார்ட்வாட்ச் சந்தைக்குள் கால் பதித்திருக்கிறது. 80% மறுசுழற்சி செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் இதை உருவாக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது கூகுள். இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் புகைப்படங்கள் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் கசிந்து விட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது பிக்ஸல் வாட்ச்சின் அறிமுகம். கூகுளின் Wear OS-ஐ பயன்படுத்தி இயங்கும் இந்த வாட்ச்சில் கூகுள் மேப், மியூசிக், மெசேஜிங் போன்ற பொதுவான வசதிகள் இருக்கின்றன. ஃபிட்னெஸ் ட்ராக்கிங் கேட்ஜெட்களைத் தயாரிக்கும் ஃபிட்பிட் நிறுவனம் தற்போது கூகுளின் கைகளில் என்பதால், அந்நிறுவனத்தின் சிறந்த வசதிகளையும் கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்வாட்ச்சில் கொடுக்கும். சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் பிக்ஸல் வாட்ச், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

கூகுளின் புது வரவு கேட்ஜெட்ஸ்!

Pixel 6a

கடந்த வருடம் வெளியான பிக்ஸல் 6 ஸ்மார்ட்போனை சற்று பட்டி டிங்கரிங் பார்த்து பிக்ஸல் 6a-வாக அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். பிக்ஸல் 6-ல் இருக்கும் பேட்டரி, கேமரா, டிஸ்ப்ளே என முக்கியமான இடங்களில் மாற்றங்களைச் செய்து வடிவமைப்பை அப்படியே கொடுத்திருக்கும் கூகுள், அதற்கேற்றபடி விலையைச் சற்றுக் குறைவாகவே நிர்ணயம் செய்திருக்கிறது. கூகுள் புதிதாக அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்களில் விலை குறைவானது பிக்ஸல் 6a-தான். ஆண்ட்ராய்டு 12 மற்றும் 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த போனில் கூகுளின் சொந்தத் தயாரிப்பான டென்சார் SoC புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12.2 மெகாபிக்சல் மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாத இறுதியில் பிக்ஸல் 6a விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் ரூ.40,000-க்கு இந்த போன் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் புது வரவு கேட்ஜெட்ஸ்!

Pixel Buds Pro

ஆப்பிளின் ஏர் பாட்ஸ் புரோ-வுக்கு போட்டியாக கூகுள் அறிமுகப்படுத்தி யிருப்பதுதான் இந்த பிக்ஸல் பட்ஸ் புரோ இயர்பட்ஸ். டிஸைனில் இரண்டும் வித்தியாசமானவை என்றாலும், ஏர் பாட்ஸ் புரோ-வில் இருக்கும் பல வசதிகளை இதில் கொண்டு வந்திருக்கிறது கூகுள். இதுவரை வெளியான கூகுளின் இயர்பட்ஸ்களில் ANC வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது. தற்போது அந்தக் குறையைப் போக்கும் வகையில் பிக்ஸல் பட்ஸ் புரோ-வில் ANC வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ANC வசதியைப் பயன்படுத்தினாலும் கூட 7 மணி நேரம் வரை இதன் பேட்டரி லைஃப் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள். பிக்ஸல் பட்ஸ் புரோ-வை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ள முடியும். 11mm டிரைவர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது . $199 டாலர்களாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பிக்ஸல் பட்ஸ் புரோ ஜூலை மாதம் விற்பனைக்கு வருகிறது. மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக ஏர் பட்ஸ் புரோ-வில் இருப்பதைப் போன்ற spatial audio எனப்படும் 3D ஆடியோ எஃபெக்ட் வசதியை இந்த வருட இறுதியில் பிக்ஸல் பட்ஸ் புரோ-வில் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism