Published:Updated:

`மாநிலங்களவை தேர்தல்; தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு’ - திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு #NowAtVikatan

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

1.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

01 Mar 2020 8 PM

திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு!

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடக்கிறது. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோர் தி.மு.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலங்களவை எம்.பி-யாக உள்ள திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

01 Mar 2020 10 PM

சுப.உதயகுமாரன் வலியுறுத்தல்!

பச்சைத் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இரு தினங்கள் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தற்போது நாடு சந்திக்கும் பிரச்னைகள், தமிழக மக்களின் வாழ்வியல் நிலை, நலிவடையும் விவசாயம், மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகள், இளைஞர்களின் வேலை வாய்ப்பு சிக்கல்கள், நாட்டின் பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேசிய பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன், ``தற்போது நாட்டில் ஓர் இருண்ட காலம் தன் கோரப்பற்களைத் துருத்திக் கொண்டு தலைவிரித்து நின்றாடும் காலகட்டத்தைக் கடந்து செல்ல நாடெங்கும் `மகாத்மா காந்தி சேனை’ என்ற அமைப்பைத் தோற்றுவிக்குமாறு பச்சைத் தமிழகம் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என்றார்.

01 Mar 2020 5 PM

மதகுருமார்களை சந்தித்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த்துடன் இஸ்லாமிய மதகுருமார்கள் இன்று அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்திப்பு நடத்தினர். அதன்பின் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இந்தச் சந்திப்பு தொடர்பாக ஓர் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``ஜமாஅத்துல் உலமாவின் நிர்வாகிகளை மிகுந்த மரியாதையோடு வரவேற்ற ரஜினிகாந்த் எங்களின் கருத்துகளை கவனமாக கேட்டறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியா முழுக்க சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சம்பந்தமாக முஸ்லிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் எழுந்துள்ள அச்சத்தின் நியாயங்களை அவருக்கு விளக்கிச் சொன்னபோது அது சரிதான். அதில் நியாயம் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.

அத்தோடு இந்த அச்சத்தைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் தங்களைப் போன்ற மதகுருமார்கள் தீர்மானித்துச் சொன்னால், நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் அகன்று அமைதி ஏற்பட தன்னால் இயன்ற அனைத்தையும் உங்களோடு சேர்ந்து செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என உறுதியளித்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.

01 Mar 2020 12 PM

18 மணி நேரத்துக்குப் பின்  அணைக்கப்பட்ட தீ!

மாதவரம் ரசாயனக் கிடங்கில் 18 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் 200 அடி சாலை அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனப் பொருள்களில் பற்றிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால், அந்தப் பகுதியில் புகை சூழ்ந்தது.

தீ விபத்து
தீ விபத்து
பிரேம்குமார்.எஸ்.கே

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட இடம் ரசாயனக் கிடங்கு என்பதால் அந்தப் புகையை சுவாசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டன. மேலும், சம்பவ இடத்தில் நடமாடும் மருத்துவக் குழுக்களும் சிகிச்சையளிக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். புகை தொடர்ந்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

01 Mar 2020 12 PM

ஸ்டாலின் பிறந்தநாளில் கருணாநிதி சமாதி பூக்களால் அலங்கரிப்பு!

தி.மு.க தலைவர் ஸ்டாலின், இன்று தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என அக்கட்சித் தொண்டர்களுக்கு அவர் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

படங்கள்: கே.ஜெரோம்

அடுத்த கட்டுரைக்கு