Published:Updated:

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு.. சுகாதாரத்துறை செயலர் தகவல்! #NowAtVikatan

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

1.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Apr 2020 6 PM

மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

01 Apr 2020 2 PM

பா.ஜ.க 100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும்!’

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசியல் எல்லைகள் கடந்து அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனால், இந்த இக்கட்டான நேரத்திலும் எங்கள் கட்சி மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் லாபம் அடையலாமா எனத் தமிழக பா.ஜ.க செயல்பட்டு வருவதாக தி.மு.க குற்றம்சாட்டியுள்ளது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

``தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி, தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும் வழங்கியுள்ளதோடு, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணத்தையும் ஒதுக்கியுள்ளனர். அதோடு, 'அண்ணா அறிவாலயத்தின்' வளாகத்தில் அமைந்துள்ள 'கலைஞர் அரங்கை' கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது.

இவை அனைத்தையும் 'முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது' போல், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தி.மு.க எதுவுமே செய்யவில்லை என தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பி வரும் பா.ஜ.க கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான `தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு `100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு 'வக்கீல் நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்” என தி.மு.க தெரிவித்துள்ளது.

01 Apr 2020 11 AM

1,82,815 வீடுகளில் 6,88,473 பேரிடம் ஆய்வு!

தமிழகத்தில் தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 3,698 களப்பணியாளர்கள் மூலம் 1,82,815 வீடுகளில் 6,88,473 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக இருக்கிறது. ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு: குடிநோயாளிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழக அரசு?
01 Apr 2020 10 AM

குறையாத கொரோனா வீரியம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனாவின் வீரியம் சற்றும் குறைந்தபாடில்லை. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 42,000-த்தைக் கடந்துவிட்டது. தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 1,78,101 பேர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 6,05,710 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. 32,898 பேரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அறிகுறி இருப்பவர்கள் தயங்காமல் மருத்துவ பரிசோதனை செய்ய முன்வர வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு