Published:Updated:

`நாடு முழுவதும் ஊரடங்கு!’ - மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்தது மத்திய அரசு #NowAtVikatan

ஊரடங்கு
ஊரடங்கு

1-5-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

01 May 2020 6 PM

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை!

கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கவுரவப்படுத்த மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விமானப்படை விமானங்கள் பறக்கும். கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பும் நடத்தப்படும் என முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் தெரிவித்துள்ளார்!

01 May 2020 6 PM

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு!

கொரோனா காரணமாக இந்தியாவில் முதற்கட்டமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ம் தேதியுடன் முடியும் நிலையில், தற்போது அது இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

01 May 2020 6 PM

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்திருக்கிறது எனவும் தெரிவித்தார். சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

01 May 2020 4 PM

கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு!

கடலூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் அருகில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைந்துள்ளது. நாடு முழுவதும் மே 1 உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், கடலூரில் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவமதிக்கும் விதமாகச் செருப்பு மற்றும் கண்டன வாசகங்களை எழுதி அம்பேத்கர் சிலையின் மீது மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

`நாடு முழுவதும் ஊரடங்கு!’ - மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்தது மத்திய அரசு #NowAtVikatan

இதைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த விடுதலைச் சிறுத்தை கட்சியினர், அம்பேத்கர் சிலையைக் கழுவி தூய்மை செய்தனர். பிறகு, அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக அவர் சிலையின் மீது செருப்பு வைத்துச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளில் அம்பேத்கர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் காவல் துறையினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

01 May 2020 3 PM

சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய்த்துறை ஆணையராக உள்ள ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

01 May 2020 11 AM

பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த சென்னை மருத்துவரின் உடலை புதைக்கவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 14 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய டாக்டர், தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்திவந்தார். அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் நரம்பியல் நிபுணர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்டர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
சேதப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்

டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது உடலைப் புதைக்கவிடாமல் அப்பகுதி மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஆம்புலன்ஸ் டிரைவர் காயமடைந்தார். ஆம்புலன்ஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஒரு பெண் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

`ஆம்புலன்ஸ் உடைப்பு; டிரைவருக்கு அடி' - கொரோனாவால் இறந்த சென்னை டாக்டரின் இறுதி அஞ்சலியில் வன்முறை
01 May 2020 9 AM

35,043 ஆக அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கை!

Be (கொரோனா) Negative!
Be (கொரோனா) Negative!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,147 ஆக இருக்கிறது.

அதேபோல், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 11 நாள்களாக அதிகரித்திருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக நோய் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றும் எண்ணிக்கை இரட்டிப்பாவதன் சராசரியைப் பொறுத்தவரை டெல்லி, உ.பி, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகியவை தேசிய சராசரியைவிட அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 733 மாவட்டங்களில் 130 மாவட்டங்கள் ரெட் ஸோனில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

``கொரோனா காலகட்டமும் கொள்ளையடிக்கும் காலகட்டமா?" விஸ்வரூபமெடுக்கும் `தள்ளுபடி - தள்ளிவைப்பு’ பிரச்னை
அடுத்த கட்டுரைக்கு