Published:Updated:

சாத்தான்குளம்: `கொலைவழக்காகப் பதிவு செய்தது சிபிசிஐடி’ - எஸ்.ஐ ரகு கணேஷ் கைது! #NowAtVikatan

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

1.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Jul 2020 9 PM

சாத்தான்குளம்: `கொலைவழக்காகப் பதிவு செய்தது சிபிசிஐடி’

 ஸ்ரீதர் - பாலகிருஷ்ணன் - ரகு கணேஷ்
ஸ்ரீதர் - பாலகிருஷ்ணன் - ரகு கணேஷ்

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கை கொலைவழக்காக சிபிசிஐடி பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட காவலர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், ``இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக 12 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. விசாரணை நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. விசாரணையைப் பொறுத்து எஃப்.ஐ.ஆரில் மாற்றம் வரலாம்" என்றார்.

- இ.கார்த்திகேயன்

01 Jul 2020 8 PM

உரிய தண்டனை பெற்றுத் தருவதே அரசின் நிலைப்பாடு!

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஒரு தந்தையை, ஒரு சகோதரனை, ஒரு கணவனை, ஒரு மகனை இழந்து நிற்கும் குடும்பத்தின் வலியை உணர்கிறோம். உயிர்களையும் உறவுகளையும் இழந்து வாடுபவர்கள் நிலைநாட்ட விரும்புகிற நீதியை அரசு நிச்சயம் உரித்தாக்கும். தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்று தருவதே அரசின் நிலைப்பாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

01 Jul 2020 8 PM

4 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை!

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்விதத் தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

01 Jul 2020 12 PM

சத்தியமா விடவே கூடாது!

பெனிக்ஸ் - ஜெயராஜ்
பெனிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் மரணமடைந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் வரை பிரபலங்கள் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனைத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ``தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்டிரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு