`சாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தனி ஆணையம்!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan

01-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
சாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தனி ஆணையம்!
`சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள சாதிவாரியான புள்ளிவிவரம் தேவை. தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தினாலே முழு விவரமும் கிடைக்கப்பெறும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ம.நீ.மய்யத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். முன்னதாக பாரத்நெட் விவகாரத்தில் அதிருப்தி காரணமாக விருப்ப ஓய்வுபெற்ற அவர், ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருக்கிறார்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், தனது பிரசார பயணத் திட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாகத் அறிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பயணம் தள்ளிப்போவதாக தெரிவித்தார் கமல்.
வலுப்பெற்றது புயல் சின்னம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது. புயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் சின்னம் தற்போது வலுப்பெற்றிருப்ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இட ஒதுக்கீடு போராட்டம்: பா.ம.க-வினர் தடுத்து நிறுத்தம்!
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பா.ம.க-வினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீஸாரஒல் கண்டித்து பா.ம.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சில கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சில இடங்களில் பா.ம.க-0வினர் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னையின் பல பகுதிகளில் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.