`5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம்!’ - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு #NowAtVikatan

02-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
நீலகிரி: வெற்றிகரமாக நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை!
நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள தலைமை சேட் மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்களப் பணியாளர்களான செவிலியர்களுக்கு முதற்கட்டமாகத் தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது.
- சதீஷ்
விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம்!

`நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும்’ எனத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். இரண்டு ஹெக்டேர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட முழுமையான பகுதிகளுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்றும், ஜனவரி மாதம் 7 -ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
நெல்லையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!
நெல்லை மாவட்டத்தில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஒரு மையத்துக்கு 25 பேர் வீதம் 75 பேர் அழைக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.
செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இன்று நடந்த ஒத்திகையில் செவிலியர்கள் பங்கேற்றனர். முதலில் தடுப்பூசி மையத்துக்கு வருவோரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

அவர்களுக்கு சளி, இருமல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தடுப்பூசி செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் செயலியில் பதிவுசெய்திருக்கும் நபர்தானா என்பதை அவர்களுடைய ஐ.டி மூலம் சரிபார்க்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டதும், தடுப்பூசி செலுத்தும் பணி நடப்பதுபோல ஒத்திகை நடந்தது. அதைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் ஓர் அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். தடுப்பூசியால் அவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாகச் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருந்தன. இந்தப் பணியில் ஒரு மையத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என 100 பேர் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஒத்திகை நடந்து முடிந்தது. நெல்லையில் ஒத்திகை நடத்தப்பட்ட மூன்று மையங்களிலும் மொத்தம் 75 பேர் பங்கேற்றார்கள். இந்த ஒத்திகை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- பி.ஆண்டணிராஜ்
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி ஒத்திகை நிகழ்வில் கலந்துகொண்டார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன். இதில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ``டெல்லி மட்டும் அல்ல... நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்” என்றார்.
இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!
`கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள், ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் `கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்திருக்கும் `கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துக்கும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி தர பரிந்துரைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், அனைத்து மாநிலங்களிலும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவிருக்கிறது. ``கொரோனா தடுப்பூசிகளே இல்லாமல் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மக்களுக்கு அதைச் செலுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 17 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.