Published:Updated:

ஜூன் 3 கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் - பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் #NowAtVikatan

முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

02-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Jun 2021 5 PM

ப்ளஸ் 2   தேர்வுகள்:   நாளை கருத்துக் கேட்பு

ப்ளஸ் 2 தேர்வுகள் நடத்தலாமா என்பது தொடர்பாக நாளை கருத்து கேட்பு நடக்கும் என பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்திருக்கிறார். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் கருத்துக் கேட்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பள்ளி முதல்வர்கள் மூலமாக கருத்து கேட்கப்படும் என்றும், அந்த தகவலை முதன்மை கல்வி அலுவலர்கள் பெற்றும், ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு:  ஆலோசித்துக்கொண்டே இருக்கும் அரசுகள்... என்னதான் தீர்வு?
02 Jun 2021 5 PM

நாளை பல்வேறு திட்டங்கள் தொடக்கம்

ஜூன் 3-ம் தேதியான நாளை கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு திட்டங்கள் தொடக்கி வைக்கப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன்படி நாளை முதல் 2-ம் தவணை கொரோனா நிவாரண நிதி ரூ2000 வழங்கப்படுகிறது. கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. மொத்தம் 18 திட்டங்களின் அறிவிப்பு மற்றும் தொடக்கம் நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்
02 Jun 2021 3 PM
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்  மீது நடிகை  புகார்
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை கொடுத்த பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்துறை, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. இந்த நிலையில் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார். அதில் அவர், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் துணை நடிகை புகார் அளித்ததாகவும் மலேசியாவில் அவர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

02 Jun 2021 2 PM

38,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!

கருணாநிதி- ஸ்டாலின்
கருணாநிதி- ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ஒரே நாளில் தமிழகத்தில் 38,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடும் திட்டத்தை நாளை தலைமைச்செயலகத்தில் மரக்கன்று நட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

02 Jun 2021 2 PM

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது குஜராத்!

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

02 Jun 2021 2 PM

49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை நிர்வாக டிஐஜியாக இருந்த அன்பு, வேலூர் சரக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஜிபி ஆனி விஜயா, காவல்துறை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஐஜியாக உள்ள செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராகவும், நலத்திட்ட ஐஜியாக இருந்துவரும் சுமித்சரண், ரயில்வே ஐஜியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

02 Jun 2021 12 PM

`தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எப்போது?’ 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு குறித்த இந்த ஆலோசனை கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ``மாணவர்களின் கல்வியுடன் உடல் நலனும் முக்கியம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டு இன்னும் 2 தினங்களில் தேர்வு குறித்து அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்றார்,

02 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,32,788 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று இந்த பாதிப்பு அளவானது 1,27,510 -ஆக இருந்தது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,83,07,832 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,207. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,35,102 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,61,79,085 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 17,93,645 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,31,456 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 21,85,46,667 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

02 Jun 2021 9 AM

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு - ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தகுந்த மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ம் வகுப்பு
12 ம் வகுப்பு

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு பற்றி ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு