Published:Updated:

`தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு தொற்று; சென்னையில் 1,025!’ - கொரோனா நிலவரம் #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Pixabay )

02-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Sep 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,990 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 -ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 7,516 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட்-19 பரிசோதனை
கோவிட்-19 பரிசோதனை

சென்னையில் மட்டும் இன்று 1,025 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 1,37,732 ஆக உள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

02 Sep 2020 5 PM

பப்ஜி செயலிக்கு தடை!

பப்ஜி கேம்
பப்ஜி கேம்

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா, சீன எல்லை பிரச்னையை தொடர்ந்து, இந்தியாவில் சீன செயலிகள் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வந்தது. முன்னதாக டிக் டாக் உள்ளிட்ட பல செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பப்ஜி கேமும்தடை விதிக்கப்பட்டுள்ளது.

02 Sep 2020 1 PM

செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கிடையே பேருந்து சேவை!

`தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு தொற்று; சென்னையில் 1,025!’ - கொரோனா நிலவரம்  #NowAtVikatan

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் 7 -ம் தேதி முதல் இந்த சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 1 -ம் தேதி, அதாவது நேற்று முதல், மாவட்டங்களுக்குள் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வரும் 7 -ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கலாம். அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்துக்குள் ரயில் சேவையும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

02 Sep 2020 1 PM

சசிகலா வீட்டில் வருமானவரித்துறை நோட்டீஸ்!

சசிகலா, சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் கட்டுமான பணிகள் நடக்கும் அந்த வீட்டின் முன்பு, வருமானவரித்துறை, சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை ஒட்டி உள்ளது. சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி அண்மையில் வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

02 Sep 2020 12 PM

மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கூட்டத் தொடர்!'

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது மக்களவைக் கூட்டத் தொடர் நடைபெறும் நேரம் குறித்து மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதன்படி, `முதல் நாளான செப்டம்பர் 14-ம் தேதி மட்டும் மக்களவைக் கூட்டத் தொடர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், `செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை மக்களவைக் கூட்டத் தொடர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan
02 Sep 2020 10 AM

இ.எம்.ஐ அவகாசம் நீட்டிக்கப்படுகிறதா?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்கவிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடன் தொகையைச் செலுத்த இரண்டு ஆண்டுகள்கூட அவகாசம் தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இ.எம்.ஐ செலுத்துவதில் சிக்கலா? - இதோ சில யோசனைகள்!
02 Sep 2020 10 AM

கிசான் திட்ட முறைகேடு - உளுந்தூர்பேட்டையில் நான்கு பேர் கைது!

உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதியுதவித் திட்டத்தில் மோசடி செய்ததாக ஒப்பந்த ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் நலனுக்காக பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் இரண்டு தவணைகளாக ரூ.6,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் பெயரில் நிதியுதவி பெற்று ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமானது.

விவசாயிகள்
விவசாயிகள்
Representational Image

இதையடுத்து தமிழகம் முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 20 வேளாண் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டையில் ஒப்பந்த ஊழியர்கள் நான்கு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். வேளாண் அலுவலரின் புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியர்களான கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

02 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,69,529-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 78,356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,045 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66,333-ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவிலிருந்து 29.01 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

02 Sep 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்

கொரோனா
கொரோனா

உலக அளவில் கொரோனா தொற்றால் 2,58,89,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,60,270 பேர் இதுவரை கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். 1,81,71,342 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல், உலக அளவில் கொரோனா பாதிப்புடன் 68,58,212 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு