Published:Updated:

தமிழகம் வரும் ராகுல் காந்தி; பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு! #NowAtVikatan

ஸ்டாலின் - தினேஷ் குண்டுராவ்
ஸ்டாலின் - தினேஷ் குண்டுராவ்

02-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Dec 2020 3 PM

25 கி.மீ வேகத்தில் நகரும் புரெவி புயல்

புரெவி புயல்
புரெவி புயல்

இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 140 கி.மீ தூரத்தில் புரெவி புயல் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திரிகோணமலைக்கு வடக்கே இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து 550 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் புரெவி புயல் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

02 Dec 2020 6 PM

தமிழகம் வரும் ராகுல் காந்தி; பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இரு கட்சிகளும் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஸ்டாலின் - தினேஷ் குண்டுராவ்
ஸ்டாலின் - தினேஷ் குண்டுராவ்

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், ``தொகுதிப் பங்கீடு குறித்து இன்றைய சந்திப்பில் நாங்கள் விவாதிக்கவில்லை. தேர்தல் பரப்புரை குறித்துதான் ஸ்டாலினுடன் விவாதித்தோம். ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வர இருக்கிறார். ராகுலின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தோம்'’ என்றார்.

02 Dec 2020 3 PM

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது!

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன்
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன்

நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். சென்னை ஆவடியில் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார். இந்த விவகாரத்தில் கர்ணன் ஏன் கைதுசெய்யப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது.

02 Dec 2020 10 AM

நெருங்கும் புரெவி புயல்!

நிவர் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது, நேற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. `புரெவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல் பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவிலும் மையம்கொண்டிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புரேவி
புரேவி
windy.com

இது, இலங்கையின் திருகோணமலையில் இன்று கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறியிருக்கும் வானிலை ஆய்வு மையம், புயல் கரையைக் கடக்கும்போது 75-85 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்திருக்கிறது. இது நாளை மறுதினம், அதாவது டிசம்பம் மாதம் 4-ம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 4,300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகள் மற்றும் எட்டு கட்டுமரங்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் 7 ஏற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு