Published:Updated:

`கட்சித் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை?!' -மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி! #NowAtVikatan

ரஜினி
ரஜினி

3.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

03 Mar 2020 7 PM

மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி!

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி கட்சித் தொடங்குவதற்கான ஆலோசனை இக்கூட்டத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் ரஜினி ஆலோசனை நடத்தவுள்ளார்.

03 Mar 2020 5 PM

நாட்டுவெடிகுண்டு வீச்சு..!

நாட்டுவெடிகுண்டு
நாட்டுவெடிகுண்டு
நாட்டுவெடிகுண்டு
நாட்டுவெடிகுண்டு

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஜெமினி நோக்கி சென்ற வாகனத்தின் மீது காமராஜர் அரங்கம் அருகே மறு பக்கத்தில் இருந்த வாகனத்தில் வந்தவர்கள் குண்டு வீசினர். குண்டு சாலையில் விழுந்து வெடித்தது. அருகிலிருந்த கார் ஷோரூம் மற்றும் அதன் முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீதும் குண்டுகள் விழுந்ததில் கண்ணாடிகள் உடைந்தன. தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைய, குண்டு வீசியவர்களும் தாக்கப்பட்டவர்களும் என இரு தரப்புமே சம்பவ இடத்திலிருந்து காணாமல் போய் விட்டது. அந்த பகுதியில் உள்ள மூன்று சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்ததில் ஃபார்சூனர் கார் ஒன்று அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குண்டு யாரை குறி வைத்து வீசப்பட்டது என்று தெரியவில்லை. சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, ஆட்டோவில் வந்து கொண்டிருந்த வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி பாடத்தோட்டம் சேகர் என்பவரின் மனைவி , மகன் மீது ஒரு கும்பல் இதே பகுதியில் வைத்து வெடி குண்டு வீசியது. அரிவாளால் கொண்டும் வெட்டியது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைய சம்பவத்துக்கும் பாடத்தோட்டம் சேகர் மனைவி தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

03 Mar 2020 1 PM

சஸ்பென்ஸை உடைத்த மோடி!

மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 8) ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து சிந்தித்தேன்" எனப் பதிவிட்டிருந்தார். இது நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது. இந்த நிலையில் இன்று மோடி அந்த ட்வீட் தொடர்பான சஸ்பென்ஸை உடைத்தார். இன்று ட்வீட் செய்திருக்கும் மோடி, ``வரும் பெண்கள் தினத்தன்று எனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் நிர்வகிக்கலாம். இது நிச்சயம் மோட்டிவேஷன் தரும்... நீங்கள் அது போன்ற இன்ஸ்பிரேஷன் தரும் பெண்களாகவோ, அப்படியான பெண்களை உங்களுக்கு தெரியும் என்றாலோ அதை வீடியோவாகப் பகிருங்கள்" என்றார்.

03 Mar 2020 12 PM

துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் கைது!

டெல்லி கலவரத்தில் பணியில் இருந்த காவலரைத் துப்பாக்கியைக் காட்டி ஒருவர் மிரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையானது. குறிப்பிட்ட அந்த நபரின் பெயர் ஷாரூக் என்றும் அவரை போலீஸார் தேடியும் வந்தனர். இந்த நிலையில், இன்று உத்தரப்பிரதேசத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு