`உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை!'- அடல் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி #NowAtVikatan
03-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
அடல் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி!
உலகின் மிகநீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் இமாச்சலப்பிரதேசத்தின் மணாலி, லடாக்கின் லே ஆகிய பகுதிகளுக்கு இடையிலான தூரம் 46 கி.மீ குறைவதுடன், பயண நேரமும் ஐந்து மணி நேரம் குறையும். பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் எல்லைப் பகுதிச் சாலைகளுக்கான ஆணையம் (Border Roads Organisation) இந்த சுரங்கப்பாதையை கட்டியிருக்கிறது. 9.02 கி.மீ நீளமுள்ள அடல் சுரங்கப்பாதையின் தெற்கு முனை மணாலியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், வடக்கு முனை லே-யின் லஹௌல் பள்ளத்தாக்குப் பகுதியிலிருக்கும் டெலிங் (Teling) கிராமத்திலும் அமைந்திருக்கிறது.
முன்னதாகக் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுக்கு ஆறு மாதங்கள் இந்தப் பகுதியில் போக்குவரத்துக்குத் தடைப்பட்டிந்த நிலையில், அடல் சுரங்கப்பாதை மூலம் ஆண்டு முழுவதும் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்குத் தடை இருக்காது. அதேபோல், எல்லைப் பகுதிகளுக்கு இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை எடுத்துச் செல்வதிலும் இந்தச் சுரங்கப்பாதை முக்கியப் பங்குவகிக்கும். அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 64,73,545-ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,069 மரணங்கள் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 1,00,842-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 54,27,707 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.