Published:Updated:

'வங்கி மோசடி வழக்கு!' - அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை #NowAtVikatan

எம்.பி. ராமச்சந்திரன்
எம்.பி. ராமச்சந்திரன்

4.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

04 Mar 2020 7 AM

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 3,016 தேர்வு மையங்களில் சுமார் 8.32 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சுமார் 4.39 லட்சம் பேருக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. தமிழக சிறைகளிலுள்ள சிறைவாசிகள் சுமார் 100 பேர் பொதுத்தேர்வு எழுத இருக்கிறார்கள்.

04 Mar 2020 9 AM

சென்னை அண்ணாசாலை குண்டுவீச்சு! - 3 பேரிடம் போலீஸ் விசாரணை

சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீஸார் 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடம்
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடம்
வி.ஸ்ரீனிவாசுலு

சென்னை அண்ணாசாலையில் காமராஜர் அரங்கம் அருகே நேற்று மாலை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், அப்பகுதியில் இருந்த கார் ஷோரூம் கண்ணாடிகள் உடைந்தன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், சென்னையின் போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் பகல் நேரத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் ஆணையர் நேரில் விசாரணை
காவல் ஆணையர் நேரில் விசாரணை
வி.ஸ்ரீனிவாசுலு

இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வெடிகுண்டு வீசியது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார். தொடர் விசாரணையில் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண் போலியானது என்பது தெரியவந்தது. இந்தவிவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

04 Mar 2020 10 AM

16 வயதில் ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷெஃபாலி!

இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷெஃபாலி வெர்மா, ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் 161 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷெஃபாலி, 19 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்திருக்கிறார். நியூசிலாந்தின் சூஸி பேட்ஸை முந்தி அவர் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். பேட்டிங் தரவரிசையில் கடந்த அக்டோபர் 2018 முதல் சூஸி முதலிடத்தில் இருந்து வந்தார். இதன்மூலம், மிதாலி ராஜுக்குப் பின்னர் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, 6-வது இடத்திலும் ஜெம்மியா ரோட்ரிக்ஸ், 9-வது இடத்திலும் இருக்கின்றனர்.

ஷெஃபாலி வெர்மா
ஷெஃபாலி வெர்மா
Rick Rycroft

பௌலிங் தரவரிசையில் இங்கிலாந்தின் எக்லஸ்டன் முதன்முறையாக முதலிடம் பிடித்திருக்கிறார். அணிகளைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

`ஆட்டமெல்லாம் ஷேவாக் ரகம்.. இந்திய வுமன்ஸ் கிரிக்கெட்டின் இளம் ரன் மிஷின்!’- சபாஷ் `வெர்மா’
04 Mar 2020 11 AM

`பிட் காயினுக்குத் தடை நீக்கம்!' - உச்ச நீதிமன்றம் அதிரடி

பிட்காயின்
பிட்காயின்

பிட் காயினுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கிரிப்டோ கரன்சி என்றழைக்கப்படும் பிட் காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது. இதனால், பிட் காயின் மூலம் செய்யப்படும் வர்த்தகம் சட்டவிரோதமாக இருந்துவந்தது. இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிட் காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும், வங்கிகளும் கிரிப்டோ கரன்சி மூலம் வர்த்தகம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

04 Mar 2020 3 PM

நாகை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஹெலிபேட் வசதி?!

மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி
மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி

நாகையில் புதிய மருத்துவக்கல்லூரி துவங்க, கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 7 - ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். அவரிடம் ' மருத்துவமனை வளாகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வந்து செல்லும் ஹெலிபேட் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி டெல்டா மக்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ``இயற்கை இடர்பாடுகளான புயல், மழை, வெள்ளம், சுனாமி ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும் நாகை டெல்டா மக்களுக்கு உடனடியாக மேல்சிகிச்சை மேற்கொள்ள வேறு மருத்துவமனைகளுக்கு வான்வழியே கொண்டுசெல்ல பயன்படும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வந்திறங்கி செல்லக்கூடிய வகையில் நிரந்தரமாக மருத்துவமனை வளாகத்தினுள்ளே ஹெலிபேட் ஒன்றை அமைப்பதையும் பரிசீலிக்க வேண்டுகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

04 Mar 2020 2 PM

அதிமுக முன்னாள் எம்பி குற்றவாளி!

கடன் மோசடி புகாரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்லூரி விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த எம்.எல்.ஏ, எம்.பி குறித்த குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரனை குற்றவாளி என அறிவித்துள்ளது.

04 Mar 2020 3 PM

ஐபிஎல் பரிசுத் தொகை குறைப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு இதுவரை ரூபாய் 20 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்ட வந்தது. இந்நிலையில் இதனை பாதியாக குறைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் வெற்றிபெறும் அணிக்கு ரூ.10கோடியும், ரன்னர்-அப் அணிக்கு ரூபாய் 6.5 கோடியும் வழங்கப்படும். இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் 2 அணிகளுக்கு தலா ரூ.4.3 கோடி அளிக்கப்படும் என்று ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04 Mar 2020 4 PM

அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை

கல்லூரி விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.பி ராமச்சந்திரன் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவருக்கும், அவரது மகன் ராஜசேகருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு