Published:Updated:

`மக்களின் உயிரோடு விளையாடும் செயல்!’ - டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு #NowAtVikatan

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

4-5-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

04 May 2020 8 AM

5 மருத்துவர்களுக்கு கொரோனா!

சென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சமீபத்தில் ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தூய்மைப் பணியாளர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கு பணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

04 May 2020 8 AM

மதிப்பு கூட்டுவரி உயர்வு -கனிமொழி கண்டனம்!

கனிமொழி
கனிமொழி

கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரியை அதிகரித்திருப்பது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றது. ஏற்கனவே நம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும்நிலையில், இந்த விலை உயர்வு மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசுக்குத் தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

04 May 2020 1 PM

போக்குவரத்து நெரிசல்!

போக்குவரத்து நெரிசல்! கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்த நிலையில் இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்கள்...

Posted by Vikatan EMagazine on Sunday, May 3, 2020

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்த நிலையில் இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்கள் சேவைக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி வெளியே வந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்த நிலையில் இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்கள் சேவைக்காக தளர்வுகள்...

Posted by Vikatan EMagazine on Sunday, May 3, 2020
04 May 2020 8 PM

`அது நான் இல்லை!’- அமீர் கான் விளக்கம்

கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால் பலர் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதையடுத்து, பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது பொருளாதார உதவி செய்வது அத்தியாவசியப் பொருள்களை வழங்குவது எனப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஏழைகளுக்கு பையில் ஒரு கிலோ கோதுமை மாவுடன் 15,000 ரூபாய் பணத்தை வைத்து கொடுத்ததாக ஒரு செய்தி பரவியது. இந்தச் செய்தியைப் பகிர்ந்த பலர் பல்வேறு சமூக ஊடகங்களில் அமீர் கானைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அமீர் கான் விளக்கம்
அமீர் கான் விளக்கம்

ஆனால், அது குறித்து தன்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அமீர் கான் விளக்கமளித்துள்ளார். அதில், `கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணம் வைத்து கொடுத்த நபர் நான் அல்ல. அது முழுக்கப் போலியான கதை அல்லது அந்த ராபின் ஹூட் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என விருப்பப்பட்டிருப்பார். பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

04 May 2020 5 PM

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்குக் கொரோனா தொற்று!

கொரோனா பாசிட்டிவ்
கொரோனா பாசிட்டிவ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3, 550 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஒரு நாளில் 2,392 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதுவரை 1,62,970 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இன்று வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

04 May 2020 8 PM

நாளை முதல் மூடப்படும் கோயம்பேடு மார்க்கெட்!

கோயம்பேடு காய்கறிச் சந்தை வளாகம்
கோயம்பேடு காய்கறிச் சந்தை வளாகம்

கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால், சந்தையைத் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை 05.05.2020 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்குக் காய்கறிகள் தங்கு தடையின்றிக் கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்கள் மக்களைச் சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

``கோயம்பேடு சந்தையா, கொரோனா மந்தையா?'' - பதறவைக்கும் வைரஸ்... பயப்படாத மக்கள்
04 May 2020 10 PM

தலைவர்கள் கண்டனம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததால் பல மாநிலங்களிலும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் 7-ம் தேதி முதல் மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

டி.டி.வி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும்” என தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

`6 கட்டுப்பாடுகள்; பார்களுக்கு அனுமதியில்லை!’- தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, ``தமிழக மக்கள் கடந்த 40 நாள்களாக மதுவை மறந்துள்ளனர். அரசு அந்த சூழலை கலைக்க வேண்டாம். தமிழ் இனம் உயர்வதற்கான ஒளிக்கீற்று தென்படுகிறது. மது அரக்கன் நம் மக்களின் வருங்காலத்தை சிதைக்க அனுமதிக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது ஆபத்தானது என்றும் கண்டனத்திற்கு உரியது என்றும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு