Published:Updated:

திமுக சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்! #NowAtVikatan

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

04-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

04 May 2021 7 PM

தி.மு.க சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்றக்குழுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க சட்டமன்றக்குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

04 May 2021 3 PM

விஜயகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி
உதயநிதி

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அவரின் இல்லத்தில், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

04 May 2021 10 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,02,82,833 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,449. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,22,408 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,66,13,292-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 34,47,133 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,20,289 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 15,89,32,921 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

04 May 2021 9 AM

`ஊடகத்துறையினர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்’ - ஸ்டாலின்

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவிருக்கிறார். இந்தநிலையில், இன்று காலை ஸ்டாலின் தனது விட்டர் பதிவில், ``மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம்வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றிவருகின்ற ஊடகத்துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு