Published:Updated:

30 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு! - தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்குக் கொரோனா தொற்று #NowAtVikatan

corona
corona

4.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

04 Jun 2020 7 PM

தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்குக் கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

சென்னையில் மட்டும் இன்று 1,072 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் 18,670 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வேலூரைச் சேர்ந்த 25 வயதுப் பெண் உட்பட தமிழகத்தில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் முதல்முறையாக 30 வயதுக்குட்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்தது. அதேபோல், ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 585 பேர் மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை 14,901 பேர் குணமடைந்துள்ளனர்.

04 Jun 2020 9 PM

`தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்த முயற்சி!’ - ரஜினி பாராட்டு

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் ரா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில் நடிகர் ரஜினிகாந்தையும் அமைச்சர் டேக் செய்திருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

ரஜினி
ரஜினி

இந்தநிலையில், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என ரஜினி குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரஜினி குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார்.

`தமிழுக்குப் பணிசெய்ய கிடைத்த வாய்ப்பு!'- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய இயக்குநர்
04 Jun 2020 4 PM

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை!

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்குச் சிகிச்சை பெறலாம். இதற்காக பொதுமக்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் அதிகபட்ச கட்டண விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளொன்றுக்கு அதிகபட்ச தொகுப்புக் கட்டணம் (Package) Grade A1 மற்றும் A2 மருத்துவமனைகளில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்கள் பொதுவார்டில் சிகிச்சை பெற ரூ.5,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற நாளொன்றுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.10,000 முதல் 15,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை
Representational Image

Grade A3 மற்றும் A4 மருத்துவமனைகளில் பொதுவார்டு கட்டணம் நாளொன்றுக்கு ரூ.5,000 எனவும் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற நாளொன்றுக்குத் தொகுப்புக் கட்டணமாக ரூ.9,000 முதல் 13,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் பொதுமக்கள் புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மொத்தப் படுக்கைகளில் 25 சதவிகிதப் படுக்கைகளை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க ஒதுக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

04 Jun 2020 1 PM

வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து!

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். `கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் இனி அரசின் முகாம்களின் மட்டுமே தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் முகாம்களில் தங்கவைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சென்னையில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

04 Jun 2020 1 PM

கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு?

கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு என்பதை ஐஎம்ஏ தமிழகப் பிரிவு பரிந்துரைத்துள்ளது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாள்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்கவும் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாள்கள் கட்டணமாக ரூ.4,31,411 வசூலிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

04 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா!

கொரோனா
கொரோனா

இந்தியாவில், `கடந்த 24 மணி நேரத்தில் 9,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303-லிருந்து 1,04,107ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,075ஆக அதிகரித்துள்ளது.

04 Jun 2020 8 AM

மகாத்மா காந்தி சிலை அவமதிப்பு!

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

அமெரிக்காவில், #BlackLivesMatter என்று கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் மிகக் கடுமையாக நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிகாரி ஒருவர், கறுப்பினத்தவரான ஜார்ஜ் என்பவரிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டார். ஜார்ஜின் கழுத்தில் அவரது காலை வைத்து அழுத்திப் பிடித்ததில் ஜார்ஜ் உயிரிழந்தார். அவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், வாஷிங்டன் பகுதியில் போராட்டம் நடைபெற்ற போது, இந்தியத் தூதரகத்தின் முன் இருக்கும் மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்கள் சிலரால் அவமதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக தூதரக அதிகாரிகள் சிலையை மூடினர். காந்தி சிலை அவமதிப்பு தொடர்பாக அமெரிக்க காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு