Published:Updated:

Cowin இணையதளத்தில் தமிழ் தவிர 9 மொழிகள் இடம்பெற்றுள்ளன! #NowAtVikatan

Cowin இணையதளம்
Cowin இணையதளம்

04-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

04 Jun 2021 6 PM

Cowin இணையதளத்தில் தமிழ் மொழி  இல்லை!

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்புவோர், தங்கள் தகவல்களை பதிவு செய்வதறகாக Cowin.gov.in என்ற இணையதளத்தையும், மொபைல் செயலியையும் வெளியிட்டது ஒன்றிய அரசு. முதலில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்த இணையதளத்தில், தற்போது கூடுதலாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தந்த மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளில் இணையதளத்தை பார்க்க முடியும். ஆனால், இந்த 9 மொழிகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. தடுப்பூசிக்காக பதிவோர் எண்ணிக்கை அதிகமுள்ள தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.

04 Jun 2021 3 PM

தமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு..!

தமிழகத்தில் தளர்வுளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜூன் 14-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கை தொடரவும், அதேபோல் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் வரும் 14-ம் தேதிவரை பொதுபோக்குவரத்து அனுமதிக்கப்பட மாட்டாது என்றே கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

04 Jun 2021 3 PM

`பொதுத்தேர்வை நடத்துவதே சரியானது..’ - கமல்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், ``மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகவே முடியும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமைப்பின்படி, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வுகளுக்கும், வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பிப்பதற்கும், வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கும் பிளஸ் 2 மதிப்பெண் அவசியமானதாகிறது.

கமல்
கமல்

பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும். கொரோனா இரண்டாம் அலை தணிந்ததும், மூன்றாம் அலை ஏற்படுவதற்கு முன்னதாக அனைத்து முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்பான சூழலில் தேர்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே சரியானது.

நோய்த்தொற்றின் வேகம் குறைந்ததும், தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டு, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கான கால அவகாசம் வழங்கலாம். அதற்கு முன், நடப்புக் கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டனவா என்பதை உறுதி செய்துகொள்வது மிக அவசியம். தேவையிருப்பின், தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அளவைக் குறைக்கலாம். முன்களப் பணியாளர்கள் என்ற வகையில் ஆசியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்படியே பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்து அவர்களைப் பாதுகாக்கலாம். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடத்தலாம்.

தேர்வு தாமதமாக நடத்தப்பட்டால் தேசிய பல்கலைக்கழங்களில் மாணவர்கள் சேர்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைவிட தேர்வை ரத்து செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதே கவனிக்கப்பட வேண்டியது. சில மாநிலங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்தபோதும், முறையான திட்டமிடுதலுடன் பொதுத் தேர்வை நடத்திக் காட்டியிருக்கிறது கேரள அரசு. கேரளத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் பன்னிண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தத் தயாராக வேண்டும்.

தற்போதைய சூழலை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றைச் சிதைத்துவிடக் கூடாது. பெரும்பான்மையான பெற்றோர்கள் தேர்வு நடத்தவேண்டுமென்றே விரும்புகிறார்கள். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மனிதவளத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைத் தீர்க்கமாக விவாதித்து சிறந்த முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என பள்ளி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

04 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,32,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று இந்த பாதிப்பு அளவானது 1,34,154 -ஆக இருந்தது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,85,74,350 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,713. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,40,702-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,65,97,655-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 16,35,993 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,07,071 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 22,41,09,448 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

04 Jun 2021 9 AM

ஊரடங்கில் தளர்வுகள்.. முதல்வர் இன்று ஆலோசனை! 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பாதிப்புகள் முதல் அலையை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் முதலில் தளர்வுகளுடனான ஊரடங்கும், தொடர்ந்து பாதிப்பு குறையாத காரணத்தால் தளர்வுகள் அற்ற ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கும் வரும் 7 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், `ஊரடங்கு ஒன்று தான் தொற்று பரவலை நிறுத்த உதவுகிறது. என்றாலும் ஊரடங்கினை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்’ என்றார். இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கினை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். திங்கள் முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு