Published:Updated:

ஒரே நாளில் 5,976 பேருக்குத் தொற்று! - தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4,51,827 #NowAtVikatan

கொரோனா
கொரோனா

04-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

04 Sep 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,976 பேருக்குத் தொற்று!

கோவிட்-19 தொற்று
கோவிட்-19 தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,51,827-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 7,684-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 6,334 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 992 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

04 Sep 2020 5 PM

கொரோனா விதிமுறைகளை மீறுவது குற்றம்!

`கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது குற்றம்’ என்ற தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார்.

கொரோனா
கொரோனா

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. `இந்த விதிமுறைகளை மீறுவது குற்றம்’ என்ற வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து, அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

04 Sep 2020 1 PM

காட்டுமன்னார்கோயிலில் பட்டாசு ஆலை விபத்து!

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்தக் கோர விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது!

04 Sep 2020 1 PM

செப்டம்பர் 8-ம் தேதி உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளனை 90 நாள்கள் பரோலில் விடக் கோரி, அவரின் தாய் அற்புதம்மாள் அளித்த மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, `வழக்கு விசாரணை தொடர்பாக செப்டம்பர் 8-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

04 Sep 2020 11 AM

செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்டம்பர் 19-ம் தேதி வரை அனுமதி!

`செமஸ்டர் கட்டணத்தை செப்டம்பர் 5-ம் தேதிக்குள் கட்டாவிட்டால் பட்டியலிலிருந்து மாணவர்களின் பெயர் நீக்கப்படும்’ என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது சர்ச்சையானது. இதை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றபோது, பி.இ மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர் கட்டணத்தைச் செலுத்த செப்டம்பர் 19-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

04 Sep 2020 10 AM

கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதையடுத்து அந்தத் தொகுதிக்கு அடுத்த ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி
தே.அசோக்குமார்

`கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடத் தயார்’ என பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினரான தான், கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படத் தயார் என வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்திருக்கிறார். அதேபோல், அரசியல் ஆர்வமிருந்தாலும், தேர்தலில் தற்போது போட்டியிட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

`கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டி!’ - நயினார் நாகேந்திரன்
04 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,36,747-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 83,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா
Unsplash

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,096 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68,472-ஆக அதிகரித்திருக்கிறது. ஒரே நாளில் 66,659 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில்,குணமடைந்தோர் எண்ணிக்கை 30.37 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

கோவை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... படுக்கை பற்றாக்குறை! - அவதியுறும் மக்கள்
அடுத்த கட்டுரைக்கு