Published:Updated:

கொரோனா பாதிப்பு எதிரொலி - டெல்லி ஆரம்ப பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை! #NowAtVikatan

கொரோனா
கொரோனா

5.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

05 Mar 2020 4 PM

டெல்லி ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை!

கொரோனா பாதிப்பு எதிரொலி காரணமாக டெல்லியில் அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது அம்மாநில அரசு. மேலும் 5ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கு இந்த மாதக் கடைசி வரை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 29ல் இருந்து 30 ஆக அதிகரித்துள்ளது.

05 Mar 2020 2 PM

மார்ச் 20-ல் தூக்கு தண்டனை!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடுவது தொடர்பாக திஹார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி அதிகாலை 5:30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் துக்கிலிடப்படுவர். மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்துள்ளது.

05 Mar 2020 1 PM

அதிவேக விசைப்படகு உரிமையாளர் குடும்பங்களுக்கு உதவி வழங்குமா அரசு?!

பழையாறு மீன்பிடி துறைமுகம் நாகை மாவட்டத்திலேயே இரண்டாவது சிறந்த துறைமுகமாக இருந்து வருகிறது. இங்கிருந்து சுமார் 350 விசைபப்டகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலைச் செய்து.வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதிவேக விசைப்படகு உரிமையாளர்களுக்கும் சாதாரண விசைப்படகு உரிமையாளர்களுக்குமிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிவேக விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் இப்படகுகளை நம்பி தொழில் செய்து வந்த சுமார் 1,000 மீனவக் குடும்பங்கள் எவ்வித வருமானமும் இன்றி பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்புக்குகூட கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். அதிவேக விசைப்படகு உரிமையாளர்களுக்கு மேலும் 1 வருட கால அவகாசம் கொடுத்து, மீன்பிடிக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், பின்னர் படிப்படியாக அதிவேக எஞ்சின்களை அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக சாதாரண எஞ்சின்களை பொறுத்திக்கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்றும், உடனடியாக குடும்பங்களைக் காப்பாற்ற நிதி உதவி அளிக்கவேண்டும் என்றும் விசைப்படகு உரிமையாளர்களின் குடும்பங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

05 Mar 2020 12 PM

ரஜினி - மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நிறைவு!

ரஜினி
ரஜினி

மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது. 10.30 மணி அளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். கட்சி ஆரம்பிப்பது குறித்த ரஜினி இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

05 Mar 2020 10 AM

இறுதிப்போட்டியில் இந்திய அணி!

மகளிருக்கான டி 20 உலகக்கோப்பையில், இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. குரூப் ஏ பிரிவில் புள்ளிகளின் பட்டியலில் எட்டு புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும் 6 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் இருந்தது. இதனைத் தொடர்ந்து, சிட்னியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிப்போட்டி நடைபெற இருந்தது.

மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகளிர் உலகக் கோப்பையின் வரலாற்றில் இந்திய அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு செல்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

05 Mar 2020 10 AM

மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை ஏற்பாடு செய்து வைக்க வேண்டும், அனைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசிக்க வேண்டும், அரசு அலுவலகம், தனியார் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினிகளை கட்டாயம் வைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப் பகுதிகளில் தேவையான விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

05 Mar 2020 9 AM

தமிழகத்தில் எங்க டாடிக்குதான் மதிப்பு!

உதயநிதி
உதயநிதி
நா.ராஜமுருகன்

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் கரூர் வருகை தந்தார். அதில் பங்கேற்றுவிட்டு பேசியவர், ``குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முதல் கட்ட போராட்டத்தை இளைஞரணி முன்னின்று செய்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் அமைதியாக போராடியவர்கள் மத்தியில் வன்முறை வெடித்து, 50 பேர் இறந்து உள்ளனர். இதற்கு பிரதமர் மோடி ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. பிரதமர் என்கிற அடிப்படையில் இந்தியாவையே மோடி கட்டுக்குள் வைத்திருந்தாலும், தமிழ மக்களின் ஆதரவு எப்பவுமே எங்க டாடிக்கு (மு.க.ஸ்டாலின்) தான்.

இதே எழுச்சியுடன் இளைஞரணியினர் இருந்து வருகிற 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது. கரூரில் நடந்த ஆளுங்கட்சியின் அட்டூழியத்தால் வெற்றிப் பறிபோயிருக்கிறது. இதற்காக துவண்டு விட வேண்டாம். சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார்.

05 Mar 2020 8 AM

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு இல்லை என்ற அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இதற்கிடையே, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் “பொதுத்தேர்வு நடத்துங்கள்” என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் நேற்றுமுன்தினம் (3-3-2020) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கல்வி ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விவகாரம் தொடர்பாக முகநூலில் காட்டமாக பள்ளிக்கல்வித்துறையை விமர்சித்திருந்தார். இதையடுத்து, தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தங்கம் தென்னரசை தொடர்புகொண்டு இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எட்டாம் வகுப்பு “தனித்தேர்வு” என்பது சுற்றறிக்கையில் தவறுதலாக “பொதுத்தேர்வு” எனக் குறிப்பிடப்பட்டு விட்டதாகவும் அதுவே குழப்பத்துக்குக் காரணம் எனவும் தவறு சரிசெய்யப்பட்டு நாளை ( 5.3.2020) புதிய சுற்றறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்ததுடன், ஏற்கெனவே அறிவித்தபடி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மாற்றம் ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு