Election bannerElection banner
Published:Updated:

Election updates: `இந்த 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்!’ - தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க கோரிக்கை

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

05-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Apr 2021 12 PM

`இந்த ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்க!’

தமிழகத்தில் நாளை சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த சில நாள்களாக பரபரப்பாக நடந்துவந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் கொளத்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க சார்பில் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

மனு வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ``திமுக-வினர் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் எனச் செயல்படுகிறார்கள். குறிப்பாக திருச்சி மேற்கு, கொளத்தூர், திருவண்ணாமலை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, காட்பாடி ஆகிய ஐந்து தொகுதிகளில் கூகுள் பே போன்ற நவீன முறையில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. அதனால் தேர்தல் ஆணையத்திடம் இந்த ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க சார்பில் வைத்திருக்கிறோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது” என்றார்.

05 Apr 2021 10 AM

`அச்சம் தரும் வகையில் கொரானா!’

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்று காலை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மாநில சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரானா பாதிப்பு அதிகரித்துவருகிறது. நாளை மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஏப்ரல் 7-ம் தேதி முதல் வீடு வீடாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு எனப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.

05 Apr 2021 9 AM

கொரோனா பாதிப்பு: புதிய உச்சம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இரண்டாவது அலையாக தற்போது பாதிப்பு தினமும் புதிய உச்சத்தைத் தொட்டுவருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,03,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதன்முறை.

முன்னதாக கடந்த ஆண்டு செப் 17-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 98,795 பாதிப்புகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா
கொரோனா

இதுவரை இந்தியாவில் 1,25,89,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,16,82,136 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துருக்கிறார்கள். தற்போது 7,41,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 1,65,101 பேர் கொரோனா நோய்த் தாக்கத்தால் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 478 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் இன்றுவரை 7,91,05,163 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு