Published:Updated:

தொடர்ந்து இரண்டாவது நாளாக 500-ஐத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை! சென்னையில் 279 பேருக்கு #Corona பாசிட்டிவ் #NowAtVikatan

கோவிட் - 19 கொரோனா
கோவிட் - 19 கொரோனா

5-5-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

05 May 2020 7 AM

உலகளவில் 2,50,000 தொட்ட உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,42,508ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,94,246 ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,52,214 ஆக உயர்ந்துள்ளது.

05 May 2020 7 AM

தமிழக வீரர் மரணம்!

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார். சிஆர்பிஎப்-ன் 92வது பட்டாலியனைச் சேர்ந்த 31 வயதான தமிழக வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தமிழக வீரர் சந்திரசேகர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

05 May 2020 11 AM

கமல் கண்டனம்!

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். ``கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு" எனக் கூறியுள்ளார்.

05 May 2020 12 PM

மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

தமிழகத்தில் மின்சார கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தாழ்வழுத்த மின் இணைப்பு கட்டணங்களை செலுத்த ஜுலை 31ம் தேதி வரை அவகாசத்தை நீட்டிக்கக் கோரி ராஜசேகர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் மே 18ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

05 May 2020 12 PM

சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது!

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் மதுக்கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

05 May 2020 12 PM

அறிகுறி இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை!

அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் மருத்துவமனை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . மேலும் பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

05 May 2020 1 PM

ஜூலை 26-ம் தேதி நீட்!

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜே.இ.இ., மெயின் தேர்வுகள் ஜூலை 18, 20, 21, 22, 23 தேதிகளில் நடைபெறும் என்றும் , ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

05 May 2020 6 PM

’விலையில்லா ரேஷன் பொருள்கள்!

’தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் விலையில்லாமல் அளிக்கப்படும்' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

05 May 2020 7 PM

தொடர்ந்து இரண்டாவது நாளாக 500-ஐத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4058-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,008 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு