Election bannerElection banner
Published:Updated:

மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாகப் பதவியேற்றார் மம்தா பானர்ஜி! #NowAtVikatan

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

05-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 May 2021 11 AM

மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாகப் பதவியேற்றார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மம்தா
மம்தா

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. அங்கு மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

05 May 2021 10 AM

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஸ்டாலின்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. இதைத் தொடந்து சென்னையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றக்குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில், இன்று காலை ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்திக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் சிறிய அளவில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பது குறிப்பிடதக்கது.

05 May 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,82,315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,06,65,148 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,780. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,26,188-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,69,51,731-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 34,87,229 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,38,439 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 16,04,94,188 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

05 May 2021 8 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மக்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி சராசரியாக 1,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர் இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

இந்தநிலையில், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடும் பாதிப்புக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் சுமார் 11 நோயாளிகள் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற தகவலும் பரவியது. நோயாளிகளின் மரணத்துக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், ``மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு