Published:Updated:

ஹத்ராஸ் சம்பவம்: ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி கைது! #NowAtVikatan

தி.மு.க எம்.பி கனிமொழி கைது
தி.மு.க எம்.பி கனிமொழி கைது

05-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

05 Oct 2020 6 PM

ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி கைது!

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, எம்.பி கனிமொழி தலைமையில் தி.மு.க மகளிரணியினர் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடங்கிவைத்துப் பேசுகையில், ``ஹத்ராஸ் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை நியாயமாக நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. ராகுல் காந்தியைக் கீழே தள்ளியிருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. ஜனநாயகத்தையே கீழே தள்ளியிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசம் ரத்தப் பிரதேசமாக மாறிவருகிறது ” என்றார்.

தொடர்ந்து கனிமொழி தலைமையில் மகளிரணியினர் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி மேற்கொண்டனர். இந்தநிலையில், தடையை மீறி ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாக சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட மகளிரணி அமைப்பைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டனர்.

05 Oct 2020 4 PM

அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

கொரோனா தடைசெய்யப்பட்ட பகுதி
கொரோனா தடைசெய்யப்பட்ட பகுதி
மாதிரிப் படம்

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அலுவலகங்களும் பணியிடங்களும் முன்புபோல் செயல்படத் தொடங்கியுள்ளன. பணி காரணமாக சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பிய மக்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்தநிலையில் கடந்த சில நாள்களாகவே சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகிவருகிறது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமுள்ள 36 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த நிலையில் தற்போது 36 இடங்களாக இது அதிகரித்திருக்கிறது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

05 Oct 2020 10 AM

2ஜி வழக்கு: இன்று முதல் தினமும் விசாரணை!

கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 21-ம் தேதி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2ஜி வழக்கு: ஆ.ராசா,கனிமொழி
2ஜி வழக்கு: ஆ.ராசா,கனிமொழி

`இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்று சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, 2ஜி வழக்கு விசாரணை அக்டோபர் 5-ம் தேதி முதல் தினமும் நடைபெறும் என செப்டம்பர் 29-ந் தேதி அறிவித்தார். இன்று பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கும் இந்த வழக்கு விசாரணை, தினமும் நடக்கும். முதலில் சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு