தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அனுமதி! தமிழக அரசுக்கு செக் வைத்த உள்துறை அமைச்சகம் #NowAtVikatan

06-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தமிழக அரசுக்கு செக் வைத்த உள்துறை அமைச்சகம்!

திரையரங்குகளில் 100 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனால், கொரோனா பரவல் தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துவந்தனர். தமிழக அரசின் இந்த உத்தரவு சர்ச்சையான நிலையில், தியேட்டர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெறும்படி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருக்கிறது.
அருளானந்தம் அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்துவருகிறது. இந்தநிலையில், நேற்று மாலை இந்த வழக்கில் மேலும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதன்படி ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அருளானந்தம் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்துவருகிறார்.

நேற்று கைதுசெய்யப்பட்ட மூவரும், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்தநிலையில் அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தத்தை தற்போது அ.தி.மு.க-விலிருந்து நீக்கி ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் உத்தரவிட்டிருக்கிறார்கள்.